மேடை நாடகங்கள் மூலம் தனக்கென மக்கள் மத்தியில் ஓர் இடம் பிடித்தவர் `காத்தாடி’ ராமமூர்த்தி. கிட்டத்தட்ட 80 வயதிற்கு மேல் ஆகியும் தற்போதும் மக்களிடையே சமூக கருத்துகளை தனது நாடகங்கள் வழியாக கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பிரியமான தோழி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

`காத்தாடி’ ராமமூர்த்தி

“நான் இந்த வயசுலேயும் ஆக்டிவ் ஆக இருக்கிறேன்னா அதுக்கு முக்கிய காரணம் ஸ்டேஜ் டிராமாதான். என்னோட 16 வயசில இருந்தே நடிச்சிட்டு இருக்கேன். ஸ்கூல் படிக்கும்போது ஓரங்க நாடகம்னு சொல்லுவாங்க அதுல நடிச்சேன். நாடகத்துல நடிக்க ஆரம்பிச்சது காலேஜ் படிக்கும்போதுதான்! என் அப்பா நாடகத்துல நடிச்சிட்டு இருந்தார். அவரைப் பார்த்துதான் எனக்கும் நாடகத்தின் மீது ஈர்ப்பு வந்ததுன்னு சொல்லலாம். சோ எழுதின ஒரு நாடகத்துல `காத்தாடி’னு ஒரு கேரக்டர் பண்ணினேன். அந்த பிளே ரொம்ப பாப்புலர் ஆகிடுச்சு. சோ சொல்லித்தான் என் பெயருக்கு முன்னாடி அந்தக் கேரக்டர் பெயரை இணைச்சேன். அவர் சொன்ன மாதிரியே என் பெயரும் `காத்தாடி’ ராமமூர்த்தின்னே ரெஜிஸ்டர் ஆகிடுச்சு.

`கெளரி கல்யாண வைபோகமே’னு ஒரு நாடகம் விசு எழுதியிருந்தான். நீயே டைரக்ட் பண்ணுன்னு சொல்லி விசுவை பண்ண வச்சேன். அவன் டைரக்ட் பண்ணி அதுல நான் நடிச்சேன். அவனை நான் டைரக்டர் ஆக்கினேன். அவனுடைய திறமை, அதிர்ஷ்டம் சினிமா உலகத்துல அவனால பெருசா வர முடிஞ்சது. `தேவன்’ எழுதிய துப்பறியும் சாம்பு நாடகம் எனக்குன்னு ஒரு பெயர் வாங்கிக் கொடுத்தது!” என்றவரிடம் சினிமா குறித்துக் கேட்டோம்.

`காத்தாடி’ ராமமூர்த்தி

“நான் ஒரு நிறுவனத்துல பணியில் இருந்துட்டேதான் நாடகத்திலேயும், சினிமாவுலேயும் நடிச்சிட்டு இருந்தேன். அப்பவே நல்ல சம்பளத்தில் தான் உத்தியோகம் பார்த்தேன். நான் தொடர்ந்து சினிமாவில் நடிச்சதுக்கான காரணமே `சினிமா புகழ்’ என்கிற அடைமொழிக்காகத்தான்! மதுரையைத் தாண்டி நாடகம் போடப் போகும்போது நாடகத்துக்கு அந்த அடைமொழி ரொம்பவே தேவையா இருந்தது. அதனாலதான் நடிச்சேன்னே தவிர சினிமாவில் நடிக்கணும்னுலாம் விரும்பி அதற்காக முயற்சி பண்ணியெல்லாம் நடிக்கல. எங்களுக்குத் திருமணம் ஆகி இப்ப 57 வருஷமாகிடுச்சு. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஃபேமிலி சப்போர்ட் இல்லைன்னா கலை உலகில் பயணிக்கிறது சிரமம்தான்!” என்றவர் தொடர்ந்து பேசினார்.

“டிராமாவில் கைக்காசுதான் செலவாகுமே தவிர அதுல இருந்து வருமானம் எல்லாம் கிடையாது. சம்பளத்துல ஒரு பகுதியை வீட்டுக்குத் தெரியாம டிராமாவில் செலவு பண்ணிட்டு இருந்தேன். சினிமாவில் சில படங்களில் நடிக்கும்போது செட்டியூல் முடிஞ்சதும் பணம் தர்றேன்னு சொல்லுவாங்க. பிறகு, வேற இடத்துக்கு மாறி போயிடுவாங்க. அவங்களைத் தேடி பணத்தை வாங்குறதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லைன்னு விட்டுடுவேன். நான் பண்ணின படங்களில் 20லிருந்து 30 சதவிகிதம் படங்களுக்குத்தான் சம்பளம் வாங்கியிருக்கேன். மீதியெல்லாம் ஏழுமலையான் கணக்குத்தான்!” என்றவர் சமீபத்தில் வாங்கின விருது குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

`காத்தாடி’ ராமமூர்த்தி

“அங்கீகாரம் என்பது ஒவ்வொரு கலைஞனும் விரும்புற விஷயம். ஸ்டேஜ் டிராமா நேரடியா நல்லது, கெட்டது ரெண்டையும் கொடுத்திடும். கொஞ்ச நாள் மேக்கப் போடாம மேடையில் ஏறி நடிக்காம இருந்தா ஏதோ மாதிரி ஆகிடும். டிராமா உயிரோட்டமானது. அதுதான் இப்ப வரைக்கும் என்னை எனர்ஜியா வச்சிருக்கு. அதனால மட்டும்தான் இன்னைக்கு வரைக்கும் அதை விடாம பண்ணிட்டு இருக்கேன். சமீபத்தில் டெல்லிக்குக் கூப்பிட்டு வைஸ் பிரசிடென்ட் கையால `அமிர்தபுரஸ்கர்’ விருது கொடுத்தாங்க. தியேட்டருக்காக இங்க இருந்து விருது வாங்கினதில் மூணாவது ஆள் நான்தான்! அந்த வகையில் மகிழ்ச்சியும், பெருமையும்!” என்றதும் `பிரியமான தோழி’ தொடர் குறித்துக் கேட்டோம்.

“சன் டிவியில் `பிரியமான தோழி’, ‘பாண்டவர் இல்லம்’ ரெண்டு சீரியலும் பண்ணிட்டு இருக்கேன். பிரியமான தோழி சீரியலில் தொடர்ந்து வர்ற மாதிரியான கேரக்டர். செட்ல எல்லாரும் தாத்தான்னுதான் கூப்பிடுவாங்க. நான் சாயங்காலம் 6 மணிக்கு மேல ஒர்க் பண்ண மாட்டேன். சீரியலில் கமிட் ஆகும்போதே அதைச் சொல்லிடுவேன். ரொம்ப ஜாலியான செட்தான். ஷூட்டிங் நேரத்துல மட்டும் டைரக்டர் கொஞ்சம் ஸ்ட்ரிகட் ஆக இருப்பார்… அவ்வளவுதான்!” என்றார்.

`காத்தாடி’ ராமமூர்த்தி

இன்னும் பல விஷயங்கள் குறித்து `காத்தாடி’ ராமமூர்த்தி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.