ஐ.சி.சி தொடர்களில் சமீப காலமாக இந்திய அணியால் வீழ்த்த முடியாத அசகாய அணியாக நியூசிலாந்து இருந்தது. கடைசியாக 2003 உலகக்கோப்பையில்தான் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, எல்லா உலகக்கோப்பையிலும் இந்திய அணி நியூசிலாந்திடம் அடிதான் வாங்கியிருந்தது. அதுவும், கடந்த உலகக்கோப்பையின் அரையிறுதில் தோனியின் அந்த ரன் அவுட்டும் இந்தியாவின் தோல்வியும் என்றைக்குமே ரசிகர்களால் மறக்கவே முடியாத துயரம்.

Dharamsala

ஏறக்குறைய 20 வருடங்கள் கழித்து இந்திய அணி தாங்கள் அடைந்த தோல்விக்கெல்லாம் சேர்த்து வைத்து கோலியின் பொறுப்பான ஆட்டத்தாலும் ஷமியின் அதிரடி பௌலிங்காலும் நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

Siraj & Shami

தரம்சாலா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்தியா வென்றிருக்கும் முதல் 4 போட்டிகளிலும் டார்கெட்டை சேஸ் செய்தே வென்றிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் ரோஹித் சேஸிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஷமியும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

பந்துவீச்சில் முதல் 10 ஓவர்கள் முழுக்கவும் இந்தியாவின் வசமே இருந்தது. பும்ரா முதல் ஓவரையே மெய்டனோடுதான் தொடங்கினார். நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான டெவான் கான்வேயின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தியிருந்தார். 9 பந்துகளை எதிர்கொண்டு ரன்னே அடிக்காமல் கான்வே வெளியேறியிருந்தார். இன்னொரு ஓப்பனரான வில் யங்கின் விக்கெட்டை பென்ச்சிலிருந்து வந்த ஷமி நேராக வீழ்த்தினார். முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி கர்ஜனையோடு தொடங்கிய ஷமி இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

முதல் 10 ஓவர்கள் இந்தியாவின் வசம் இருந்தாலும் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆட்டத்திற்குள் வந்தது. ரச்சின் ரவீந்திராவும் டேரில் மிட்செல்லும் பக்குவமாக இந்தியாவின் பந்துவீச்சு அட்டாக்கை எதிர்கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்களை விடுத்து ஸ்பின்னர்களுக்கு எதிராக அட்டாக் செய்து ஆடினர். அதிலும், நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டிருந்தனர். 9 வது ஓவரில் இணைந்த இந்தக் கூட்டணி 34 வது ஓவர் வரை நீடித்தது. 19-2 என தடுமாறிக் கொண்டிருந்த அணியை நல்ல ஸ்கோரை நோக்கி செல்லும் வகையில் தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைந்து 159 ரன்களை அடித்திருந்தனர். இந்திய அணியின் ஃபீல்டிங்குமே சுமாராகத்தான் இருந்தது. நிறைய மிஸ் ஃபீல்ட்கள் நிறைய கேட்ச் ட்ராப்கள் என இந்திய அணியும் தடுமாறியது.

Daryl Mitchell

கடைசியில் ஒரு வழியாக இந்தக் கூட்டணியை ஷமிதான் பிரித்தார். 75 ரன்களில் ஷமியின் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரச்சின். ரச்சின் அவுட் ஆனாலும் டேரில் மிட்செல் தொடர்ந்து களத்தில் நின்றார். தொடர்ந்து நன்றாக ஆடி சதமும் அடித்துவிட்டு இன்னிங்ஸின் கடைசிக்கு முந்தைய பந்தில் ஷமியிடம்தான் அவுட்டும் ஆனார்.

ரச்சினும் டேரில் மிட்செல்லும் ஆடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 300 ரன்களை கடந்துவிடும் என்றே தோன்றியது. ஆனால், அந்த கூட்டணி உடைந்த பிறகு நியூசிலாந்து தடுமாறியது. ரன்வேகம் குறைந்தது. வேகமாக விக்கெட்டுகள் விழுந்தது. ஷமி 5 விக்கெட் ஹாலை எடுத்தார். பென்ச்சிலேயே வைக்கப்பட்டு வாய்ப்பே வழங்கப்படாமல் இருந்த ஒரு வீரர் உள்ளே வந்த வேகத்திலேயே இப்படி விக்கெட் வேட்டை நடத்தியது அணிக்கே பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது.

நியூசிலாந்து அணி 273 ரன்களை அடித்திருந்தது. இந்திய அணி 274 ரன்களை அடிக்க வேண்டும். வழக்கம்போல ஓப்பனிங்கில் ரோஹித் வந்த வேகத்தில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் கொடுக்கும் அதிரடியான தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ரன்ரேட் என்கிற அழுத்தமே இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் போட்டியிலும் அப்படித்தான் நடந்தது. பின்னால் இந்திய அணி வேகமாக சில விக்கெட்டுகளை இழந்த போதும் ரன்ரேட் அழுத்தம் இந்தியாவின் முதுகில் ஏறவில்லை.

Rohit

10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பேயின்றி இந்திய அணி 63 ரன்களை அடித்கிருந்தது. ஆனால், திடீரென லாக்கி ஃபெர்குசன் தனது அடுத்தடுத்த ஓவர்களில் இந்திய ஓப்பனர்கள் இருவரையும் வீழ்த்தினார். ரோஹித் 46 ரன்களையும் கில் 26 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இடையில் இந்திய அணி 100 ரன்களில் இருந்தபோது போட்டி வேறு பனிமூட்டத்தால் சில நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது. ஸ்ரேயாஸ் ஐயரும் கோலியும் இணைந்து ஒரு 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். போல்ட் வீசிய ஒரு ஷார்ட் பாலில் ஸ்ரேயாஸ் ஐயர் வீழ, கே.எல்.ராகுலுடன் கூட்டணி வைத்து இன்னொரு அரைசத பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் கோலி. நீடிப்பார் என நினைக்கப்பட்ட கே.எல்.ராகுல் சாண்ட்னரின் பந்தில் 27 ரன்களில் lbw ஆகி வெளியேறினார். அரிதாக வாய்ப்பை வாங்கிய சூர்யகுமார் யாதவும் 2 ரன்களில் ரன் அவுட்டானார்.

ஒரு பக்கம் விக்கெட்டாக விழுந்து இந்தியாவின் மீது அழுத்தம் ஏறுவதைப் போல தெரிந்தாலும் இன்னொரு பக்கம் விராட் கோலி ஒற்றை ஆளாக நின்று அணியை முன்னோக்கி இழுத்துக்கொண்டே சென்றார்.

Virat Kohli

ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, சாண்ட்னர், ரச்சின் என நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள் அத்தனை பேருக்கு எதிராகவும் தனது அனுபவத்தின் வழி பக்குவமான ஆட்டத்தை வெளிக்காட்டினார். மேட் ஹென்றிக்கு எதிராக அடித்த கவர் ட்ரைவ் எல்லாம் அத்தனை க்ளாஸ். நிறைய ரன்களை ஓடி ஓடியே எடுத்து அவ்வபோது மட்டும் பவுண்டரிக்களை அடித்து விக்கெட்டையும் இழக்காமல் ரன்ரேட்டையும் விழ செய்யாமல் தான் ஒரு சேஸ் மாஸ்டர் என்பதை கோலி நிரூபித்தார். கூடவே ஜடேஜாவும் தன் பங்குக்கு ஒத்துழைக்க இன்னொரு அரைசத பார்டனர்ஷிப்உ உருவானது. கடைசிவரை ஆட்டம் திரில்லாக சென்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நியூசிலாந்து அணியால் இந்தியாவின் வெற்றியையும் கோலியின் வெறியாட்டத்தையும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. வெற்றிக்கு தேவையான ரன்களும் கோலியின் சதத்திற்கு தேவையான ரன்களும் ஏறக்குறைய சமமாக இருக்க, ட்ரெண்ட் போல்டின் ஓவரில் பவுண்டரியும் சிக்சரும் அடித்து சதத்தை நெருங்கினார் கோலி. மேட் ஹென்றியின் அடுத்த ஓவரில் சிக்சரை வின்னிங் ஷாட்டாக மாற்றி சதத்தையும் நிறைவு செய்ய நினைத்த கோலி துரதிஷ்டவசமாக கேட்ச் ஆகி அவுட் ஆனார். கோலி 105 பந்துகளில் 94 ரன்களை எடுத்திருந்தார். கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Team India

20 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சி உலகக்கோப்பைத் தொடர் ஒன்றில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியிருக்கிறது. மேலும், இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆடிய 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது. Men in Blue Rocks!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.