மகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்தக்கூடியவர்கள். காஷ்மீரில் மட்டுமே விளையக்கூடிய ஆப்பிள் மகாராஷ்டிராவில் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 80 சதவீதம் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகளாக மகாபலேஷ்வர் மற்றும் பஞ்ச்கனியில் விளைகிறது. மகாபலேஷ்வரில் குளிர்ந்த சூழ்நிலை இருக்கும். எனவே அது ஸ்ட்ராபெர்ரி விளைச்சலுக்கு உகந்ததாக இருக்கிறது. எனவே பெரும்பாலான விவசாயிகள் மகாபலேஷ்வரில் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்போது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டும் விளையக்கூடிய புளூபெர்ரி பழங்களை மகாபலேஷ்வரில் விவசாயிகள் விளைவிக்க ஆரம்பித்துள்ளனர். ஸ்ட்ராபெர்ரிக்கு என்ன சீதோஷ்ண நிலை தேவையோ அதே சீதோஷ்ண நிலைதான் புளூபெர்ரி பழங்களுக்கும் தேவையாக இருக்கிறது. புளூபெர்ரியில் சில ரகங்கள் வெப்பத்தை தாங்கி வளரக்கூடியதாக இருக்கிறது.

அந்த ரகங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து மகாபலேஷ்வர் மற்றும் பஞ்ச்கனியில் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய ஸ்ட்ராபெர்ரி விவசாயிகள் சங்க தலைவர் பாலாசாஹே பிலாரே கூறுகையில்,”ஸ்ட்ராபெர்ரிக்கு மாற்று பயிராக இப்போது புளூபெர்ரி பயிரிட ஆரம்பித்து இருக்கிறோம். ஸ்ட்ராபெர்ரியை ஒப்பிடும் போது புளூபெர்ரி மிகவும் லாபகரமான ஒன்றாக இருக்கிறது. அதோடு புளூபெர்ரி ஒரு முறை நடவு செய்தால் 20 ஆண்டுகளுக்கு கவலையில்லை. மழை காலத்தில் புரூனிங் செய்தால் மட்டும் போதும். ஆனால் ஸ்ட்ராபெர்ரியை ஒவ்வொரு ஆண்டும் பயிரிடவேண்டியிருக்கிறது. இதற்காக ஒரு ஏக்கருக்கு 2.9 லட்சம் வரை செலவிடவேண்டியிருக்கிறது. ஆனால் வருமானம் 4 லட்சம் மட்டும் தான் கிடைக்கிறது”என்றார்.

பஞ்ச்கனியை சேர்ந்த அம்பரிஷ் பிரதாபராய் என்பவர் ஆரம்பத்தில் ஸ்ட்ராபெர்ரி மட்டும் பயிரிட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது புளூபெர்ரி பயிரிடுவதோடு மற்ற விவசாயிகளும் புளூபெர்ரி பயிரிட தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக புளூபெர்ரி விவசாயம் செய்து அதனை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்கிறார். ஆரம்பத்தில் இந்த வகை பழங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இது குறித்து அம்பரிஷ் கூறுகையில்,”புளூபெர்ரி பயிரிடுவது மிகவும் எளிது. நான் கிரீன் ஹவுஸ் அமைத்து புளூபெர்ரி பயிரிட்டுள்ளேன். இவற்றை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயிரிடவேண்டும். இரண்டு வரிசைக்கு இடையில் 4 முதல் ஐந்து அடி இடைவெளி விடவேண்டும். இரண்டு செடிகளுக்கு இடைப்பட்ட தூரம் இரண்டடி இருக்கவேண்டும். உரமாக மாட்டுச்சாணம் கொடுக்கலாம். சொட்டுநீர் பாசனம் அமைத்து இருக்கிறேன். செடிகள் செப்டம்பரில் பூக்கத் தொடங்கும். எனது புளூபெர்ரி தோட்டத்தில் தேனிப்பெட்டிகள் ஆங்காங்கே வைத்திருக்கிறேன். இதனால் புளூபெர்ரி மகசூல் அதிகமாக கிடைக்கிறது. அதோடு அதிக தரத்துடன் பெரிய பழமாக கிடைக்கிறது.

அம்பரிஷ்

முதல் வருடத்தில் வரக்கூடிய பூக்களை பிடுங்கிவிடவேண்டும். இதன் மூலம் அடுத்த ஆண்டில் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 3 ஆயிரம் செடிகள் வைக்கலாம். நான்கு ஆண்டுகள் ஆன ஒரு செடியில் ஆண்டுக்கு இரண்டு கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ ஐநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 60 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. அமெரிக்காவில் சென்று நான் புளூபெர்ரி குறித்துக் கற்றுக்கொண்டு வந்து இங்கு அதனை அறிமுகப்படுத்தினேன்.

புளூபெர்ரி பழங்களை பிடுங்கி பதினைந்து நாள்கள் வரை கூட வைத்திருந்து விற்பனை செய்ய முடியும். புளூபெர்ரி செடிகள் அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவில் மட்டும் கிடைக்கிறது. ஒரு செடி 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திசு கல்ச்சர் மூலம் இந்தியாவிலேயே குறைந்த விலையில் செடிகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.