உறவுகள்கூட சிலருடைய வாழ்க்கையில் தாம்பத்திய உறவுக்கு வில்லனாக அமைந்து விடலாம். அதற்கு உதாரணமாக, கேஸ் ஹிஸ்டரி ஒன்றை பகிர்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

”அந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 வருடங்கள்தான் ஆகியிருந்தது. காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார்கள். கையில் ஒன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தை. ‘குழந்தை பிறந்ததுல இருந்து என் மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுக்கிறா. ஆரம்பத்துல உடல் பலவீனமா இருக்கிறதால மறுக்கிறாள்னு நினைச்சேன். அதுக்கப்புறம் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நாளாக ஆக அதெல்லாம் காரணமில்ல. நான் உறவுக்கு கிட்ட போனாலே இவளுக்கு என் மேல கோவம் வருதுன்னு தெரிஞ்சுது. அதுக்கப்புறம்தான் இவளை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன். இவ என்னைப் பார்க்கிற பார்வையிலேயே வெறுப்பு தெரியுது. நான் என் மனைவியை ரொம்ப நேசிக்கிறேன் டாக்டர். அவளும் என்னை ரொம்ப நேசிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்போ ஏன் என்னை இந்தளவுக்கு வெறுக்கிறா… இது ஏதாவது செக்ஸுவல் பிராப்ளமா டாக்டர்…’ என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார் அந்தக் கணவர்.

Sexologist Kamaraj

அந்த மனைவியின் பிரச்னைக்குக் காரணம் உடலா, மனதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, கணவரை சற்று நேரம் காத்திருக்கச் சொன்னேன். அந்தப் பெண் மிகத் தெளிவாக என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“டாக்டர் நானொரு வொர்க்கிங் வுமன். எனக்கு அம்மா கிடையாது. அதனால, திருமணம் முடிஞ்சதும் என்னோட மாமியார்தான் என் குழந்தையை வளர்த்துட்டு வர்றாங்க. ஆரம்பத்துல என் மேல ரொம்ப பிரியமா தான் இருந்தாங்க. நான் மெட்டர்னிட்டி லீவ் முடிஞ்சி வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்கிட்ட சண்டை பிடிக்க ஆரம்பிச்சாங்க. நான் ஆரம்பத்துல பொறுமையா தான் போனேன். ஆனா, அவங்க கெட்ட வார்த்தை பேச ஆரம்பிச்சதும் நானும் கோபப்பட ஆரம்பிச்சிட்டேன். இதுக்கப்புறம்தான் ஒரிஜினல் பிரச்னையே ஆரம்பிச்சிது. என் ஹஸ்பண்ட் முன்னாடி என்கிட்ட நார்மலா இருக்கிறவங்க. அவர் தலை மறைஞ்சதும் வேலைக்குப்போற என்னைப்பத்தி அசிங்க அசிங்கமாக பேச ஆரம்பிச்சாங்க. இதைப்பத்தி என் ஹஸ்பண்ட் கிட்ட சொன்னா ‘என் அம்மா அப்படியெல்லாம் பேசவே மாட்டாங்க’ன்னு ஒரேயடியா என் வாயை அடைச்சிட்டாரு. என்னை நம்ப மாட்டேங்கிறாரே அப்படிங்கிற வேதனையில இருந்தப்போ, ஒருநாள் அவங்க அக்காவுக்கு போன் செஞ்சு ‘அம்மா நம்ம கிட்ட நடந்துக்கிற மாதிரியே என் வொய்ஃப் கிட்டேயும் பேச ஆரம்பிச்சிட்டாங்க’ன்னு சொல்லிட்டு இருந்தாரு. இதை நான் எதேச்சையா கேட்டுட்டேன். அந்த நாளோட இவர் மேல இருந்த காதல் எனக்கு சுத்தமா போயிடுச்சு. அதுக்கப்புறம் இவர் என்கிட்ட நெருங்கினாலே இவரோட ரெட்டை வேஷம்தான் எனக்கு நினைவுக்கு வருது. கூடவே கோபமும் வருது. அப்புறம் எப்படி டாக்டர்…” என்றார்.

Sex Education

அடுத்து கணவரை உள்ளே அழைத்து விஷயத்தை எடுத்துச் சொல்லி, “உங்கள் மனைவியிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. உங்கள் அம்மாவின் இயல்பாலும், உங்கள் பொய்யாலும்தான் உங்கள் மனைவி பாதிக்கப்பட்டிருக்கிறார். நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொல்லி அனுப்பினேன். கணவர் மாறியிருப்பார் என்றே நம்புகிறேன். ஆண்களுக்கு ஒரு வார்த்தை, மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுக்கிறார் என்றால், அது செக்ஸுவல் தொடர்பான பிரச்னையாக மட்டுமே இருக்கும் என்று அர்த்தமில்லை. அது உங்கள் குடும்பத்தினராலும் நிகழலாம். உறவுகள் குடும்பத்தின் நீட்சி மட்டுமே… மாமியார், மருமகள் பிரச்னையால் தாம்பத்திய உறவைத் தொலைத்தவர்கள் இங்கு அதிகம். இந்தப் பிரச்னையுடன் என்னை நாடி வந்தவர்களும் மிக அதிகம். செக்ஸ் லைஃபை காலி செய்கிற முக்கியமான பிரச்னை இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர் காமராஜ்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.