காவிரி நதிநீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் குறித்தும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்தும் நேற்று இரவு (09.10.2023) திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது பேசிய அவர், “காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக திமுக அரசு இன்று சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தில், “காவிரிவ் நீர் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும்” என்ற வார்த்தைகளை அதில் சேர்க்கச் சொன்னார் எடப்பாடியார். இதில் எங்கே தவறு இருக்கிறது..?

‘காவிரித் தண்ணீரை தர மாட்டோம்’ என்று சொல்வது யார்… கர்நாடக அரசு. அந்த அரசின் முதலமைச்சர் யார்… I.N.D.I.A கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் சித்தராமையா. எடப்பாடியார் சேர்க்கச் சொன்ன ஒரு வாக்கியம் குறித்து சட்டமன்றத்திலேயே பதிலளிக்க வக்கில்லாத இந்த முதலமைச்சர், சட்ட அமைச்சரைவைத்து, சட்டமன்றத்துக்கு வெளியிலேயே ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். நாங்கள் பாஜக-வுக்குத் துணைபோகிறோம் என்று அறிக்கைவிடுகிறார். யார் பாஜக-வுக்குத் துணை போகிறார்கள்… தமிழகத்தின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதிமுக அதை எதிர்த்து குரல் கொடுக்கும், செயல்படும், செயல்பட்டுவந்திருக்கிறது. இதுவரை அதுதான் சரித்திரம்.

தமிழ்நாடு சட்டமன்றம்

ஆனால், காவிரிப் பிரச்னையானாலும், இலங்கைப் பிரச்னையானாலும், முல்லைப்பெரியாறு பிரச்னையானாலும்… தனது சொந்த நலனுக்காக, சுயநலத்துக்காக விட்டுக்கொடுத்த இயக்கம் தி.மு.க. இன்று கிளிப்பிள்ளைபோல் பேட்டியளித்திருக்கும் ரகுபதி அவர்களுக்கும், ஸ்டாலின் அவர்களுக்கும் நாங்கள் சொல்கிறோம்… காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜக-வின் மத்திய அரசை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்த தைரியமுள்ள தமிழன் எங்களுடைய எடப்பாடி பழனிசாமி. இந்த அரசுக்கு தைரியம் இருக்கிறதா… ‘இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனச் சொன்ன பின்னர்… மத்திய அரசாங்கம், நீதிமன்ற அவமதிப்பைட்ஜ் தவிர்க்க வேண்டும் என்பதற்காக 01.06.2018 அன்று காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி 175 டி.எம்.சி தண்ணீர் ஆண்டொன்றுக்கு தமிழகத்துக்குத் தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. காவிரிப் பிரச்னையில் வழக்கை முதலில் தாக்கல் செய்தது விவசாய சங்கம்தான். அதிலே தமிழக அரசை இணைத்துக்கொண்டது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

இடைக்காலத் தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதமிருந்து வழக்கைத் தாக்கல் செய்ததும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அரசு இதழிலே வெளியிடச் சொன்னவர் ஜெயலலிதா. காவிரி நதிநீர் தொடர்பாக ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்து, அந்த உரிமையை பெற்றுக்கொடுத்த முதலமைச்சர் எங்களுடைய எடப்பாடியார். இந்த வரலாறெல்லாம் தெரியாமல், இன்றைக்குத் தங்களுடைய தவற்றை மறைப்பதற்காக இன்றைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காலம் கடந்து இந்தச் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். இந்தப் பிரச்னை எப்போது வந்தது, ஜூன் 12. மேட்டூரிலே தண்ணீரைத் திறக்க வேண்டும் என்றால், இந்த ஆண்டு எவ்வளவு மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையத்திடமிருந்து அறிக்கையைப் பெற்று, அதன் அடிப்படையிலேயே திட்டத்தை வகுத்து, விவசாயிகளுக்கு அந்தத் திட்டத்தை தெரிவித்து, தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே தெரியாத இந்த முதலமைச்சர், தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காக, ஏதோ குறித்த காலத்தில் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்பதற்காக, திட்டமிடாமல் ஜூன் 12 அன்று தண்ணீரைத் திறந்துவிட்டார்.

`மேட்டூர்’ அணை

எனவே, இந்த அரசை நம்பி, 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் டெல்டா விவசாயிகள் பயிர் செய்தார்கள். ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை… தண்ணீர் இல்லை. கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடகா அணையிலே தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஆனால், `நாங்கள் தண்ணீர் தர மாட்டோம்’ என்று அடாவடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு 5 லட்சம் ஏக்கரில், 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிப்போய்விட்டன. ஒரு விவசாயி, தான் வைத்த பயிர் கருகிப்போனது தாங்காமல், தன் கண்ணெதிரே தான் வளர்த்த குழந்தை இறந்ததுபோல எண்ணி, இன்றைக்கு உயிர் நீத்திருக்கிறார். அதற்குக்கூட இந்த அரசு ஓர் அனுதாபம் தெரிவிக்கவில்லை, இழப்பீடு தரவில்லை.

தன்னை `டெல்டாக்காரன் டெல்டாக்காரன்’ என்று சொல்லி, வாய்ச் சவடால் பேசிக்கொண்டிருக்கும் இன்றைய முதலமைச்சர், டெல்டாவுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார். இன்றைக்கு டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘அந்த விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாயை தமிழக அரசு நிதியாக வழங்குகிறது’ என்று வாரிக்கொடுத்ததைப்போல இன்றைக்கு மார்தட்டிக்கொள்கிறார் முதலமைச்சர். ஆனால் எங்களுடைய எடப்பாடியார் ஆட்சியில், டெல்டா பகுதியில் இதே போன்ற நிலைமை ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு வழங்கினார். தேசியப் பேரிடர் நிதி 17,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று சொன்ன பிறகும், தமிழக முதலமைச்சர் 13,500 ரூபாயை மட்டும் தருவதற்கு என்ன காரணம்… பேரிடர் மேலாண்மை வாரியம் கொடுக்கச் சொன்னதையும் ஏன் இந்த அரசு கொடுக்க மறுக்கிறது?

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்

டெல்டாக்காரன் என்று மார்தட்டிப் பேசிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ஏன் உங்களால் கொடுக்க முடியவில்லை… திமுக அங்கம் வகிக்கிக்கும் I.N.D.I.A கூட்டணியில்தான் காங்கிரஸும் இருக்கிறது. பெங்களூரில் அதற்கான கூட்டம் நடந்தபோது, அங்கு சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்… அந்தக் கட்சியின் தலைவரிடமோ அல்லது ராகுல் காந்தியிடமோ தனிப்பட்ட முறையில் சந்தித்து, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முறையிட்டீர்களா… உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூற வேண்டாம்… ‘மனிதாபிமான அடிப்படையிலாவது, 5 லட்சம் ஏக்கர் குறுவை விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தீர்களா… அப்போது எதற்காக நீங்கள் ஒரு முதலமைச்சராக இருக்கிறீர்கள்… உங்களுடைய கூட்டணியிலே பேசி, வெற்றிபெற்று மத்தியிலே ஆட்சிக்கு வந்து, அந்த அமைச்சர் பதவியைப் பெற்று அனுபவிக்க மட்டும் செல்ல நினைக்கும் நீங்கள்… தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையைப் பேசுவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்… என்ன பயம், என்ன அச்சம்… அது என்னவென்றால், கொள்ளையடித்த பணமெல்லாம் கர்நாடகாவிலேயே சொத்துகளாக இருக்கிறது.

எடப்பாடியார் ஒரு வாக்கியத்தைச் சேர்க்கச் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது… உடனே, நாங்கள் பாஜக-வுக்கு வக்காலத்து வாங்குகிறோம் என்கிறார்கள். யார் பாஜக-வுக்கு வக்காலத்து வாங்குவது… `பரதேசி, பண்டாரம்’ எனச் சொல்லிவிட்டு… ‘எப்போது அண்ணன் சாவான் திண்ணை காலியாகும்’ என்று, நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதும், உள்ளே சென்று அமைச்சர் பதவி வாங்கி அனுபவித்தார்கள்தானே நீங்கள்… நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தபோதும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அரசு இதழில் வெளியிட்ட செய்திக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கிய இயக்கம் அதிமுக. இதே பாஜக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது எங்களுடைய எடப்பாடியார். 39 எம்.பி-க்களை வைத்திருக்கிறாயே, ஒரு எம்.பி-யையாவது வைத்துப் போராட்டம் பண்ணியிருக்கிறீர்களா… அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக, மணிப்பூருக்காக, ஜம்மு காஷ்மீருக்காக போராடுகிறது இந்த திமுக. ஆனால், ஓட்டுப்போட்ட தமிழக மக்களுக்காகப் பேசாத இந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன?

காவிரி விவகாரம்

பாஜக-வை எதிர்க்கிறோம் என்று சொல்லும் இந்தத் தமிழக முதலமைச்சரைப் பார்த்துக் கேட்கிறேன்… ஒரு நாளாவது நாடாளுமன்றத்தை உங்களால் முடக்க முடிந்திருக்கிறதா… ஆனால், கூட்டணியில் இருந்தபோதும் 22 நாள்கள் பாராளுமன்றத்தை முடக்கிய இயக்கம் அதிமுக. தேசியக் கட்சிகளான பாஜக-வாக இருந்தாலும், காங்கிரஸாக இருந்தாலும் தமிழக நலன் என்று வரும்போது இதுவரை இரு கட்சிகளும் எந்த நன்மையும் செய்ததில்லை. அருகிலே இருக்கும் மாநிலங்களில் அவர்களுடைய ஆட்சி இருக்கும்போது நமக்குப் பாதகமான நிலையைத்தான் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அதிலே நாங்கள் காங்கிரஸையும் பார்ப்பதில்லை, பாஜக-வையும் பார்ப்பதில்லை. எங்களுடைய கொள்கை தமிழகத்தின் நலன். அந்த நலனுக்கு ஏதேனும் பாதிப்பு வரும் எனும்போது, இதே பாஜக அரசைக் கீழே இறக்கிய தைரியமுள்ள தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்.

ஆகவே முதலமைச்சர் அவர்களே, நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள். இதையெல்லாம் உங்கள் தந்தை காலத்திலிருந்து நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த அரசுக்கு உண்மையிலேயே காவிரி விவகாரத்தில் அக்கறை இருக்குமேயானால், எங்களுடைய எடப்பாடியார் கூறியதுபோல… பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும். காவிரி நதிநீரைப் பெற்றுத்தருவதற்கு உண்மையான அக்கறையோடு இந்த அரசு செயல்பட வேண்டும். இப்போது குறுவைச் சாகுபடியை கெட்டு குட்டிச்சுவர் ஆக்கிவிட்டீர்கள். அடுத்து சம்பா பயிர் வைப்பதற்கு இந்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது… இதுவரை எந்தத் திட்டத்தையும் சொல்லவில்லை. அப்போது எதற்கு இந்த அரசு… பெருமையாக இன்று பேட்டி கொடுத்த ரகுபதி அவர்களைக் கேட்கிறேன். எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ‘அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று சொன்னதில் உங்களுக்கு என்ன கஷ்டம்… அப்படிக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுவதற்கு ஒரு முதலமைச்சருக்கு என்ன தயக்கம்… கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்கள் அனைத்துக் கட்சிகளோடு டெல்லி சென்று பார்க்கிறார்கள். நீங்கள் டெல்லி போனீர்களா… அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினீர்களா… இன்றைக்கு பாஜக-வை எதிர்ப்பதாக நாடகமாடி நடித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர்…

சி.வி. சண்முகம்

உதயநிதி, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனதும் பாரதப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் வாங்கிப் பேசவைப்பதற்கு மட்டும் அக்கறையுள்ள இந்த ஸ்டாலினுக்கு, இப்போது உங்களால் செல்ல முடியவில்லையா… ஏன் உங்கள் மகனை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அனுப்பிவைத்திருக்க வேண்டியதுதானே… ஏன் அனுப்பவில்லை, எல்லாம் நடிப்பு ஒரு கடமை. மத்திய நீர்வளத்துறை அமைச்சரைப் பார்த்த துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர்களோடு சென்றவர்கள்தான் பேசியிருக்கிறார்கள், இவர்கள் எதுவும் பேசவில்லை. இதுதான் திமுக. எப்படித் தமிழகத்தின் எல்லா வாழ்வாதாரப் பிரச்னைகளிலும் காட்டிக்கொடுத்ததோ திமுக, அதேபோல இன்று தந்தை வழியிலே ஸ்டாலினும் டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தையும் வஞ்சத்தையும் இழைத்துக்கொண்டிருக்கிறார். எனவே, காவிரி நீரைத் தர மறுக்கும் காவேரி காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டிக்க வேண்டும்.

“கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று உங்களுக்கு தைரியம் இருந்தால் நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் பார்ப்போம். அப்படி இயற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா… இல்லை. எனவே இந்த நடிப்பு, நாடகத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரிப் பூசுவதை நிறுத்திவிட்டு, முதலமைச்சர் என்ற அக்கறையோடு செயல்படுங்கள். ஊழல் செய்த அமைச்சர்களைக் காப்பாற்ற துடிக்கும் இந்த அரசு, விவசாயிகளைக் காப்பாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது?” என்றார் ஆவேசமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.