அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில் மகனையும், மருமகளையும் இழந்த 75 வயது மூதாட்டி கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலாயி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் தீபம் என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிக்க கூடிய பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். ஆலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் யாழ் அன் கோ என்ற பெயரில் வெடிகள் விற்பனை செய்வதற்கான கடையும் நடத்தி வருகிறார்.

இவருடைய ஆலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள், தஞ்சாவூர் திருவையாறை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பத்து பேர், விரகாலூர் கிராமத்தில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பத்து பேர் என ஆண்கள், பெண்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

அரியலூர் பட்டாசு ஆலை விபத்து

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இரவு பகலாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஆலையிலிருந்து வெடி குண்டு வெடித்ததை போன்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகினர். அதன் பின்னரே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

ஒரு குடோனில் வெடி வெடித்து தீ அடுத்த குடோனுக்கும் பரவியதால் அடுத்தடுத்த குடோன்களிலும் வெடித்தது. இதனால் பட்டாசு சத்தம் கேட்டு கொண்டே இருந்ததுடன் அந்த இடமே புகைமண்டலமாக மாறியது. உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன ஆனதோ என பலரும் பதறினர். வெடி விபத்து ஏற்பட்ட தகவல் எங்கும் பரவியது. இதனை தொடர்ந்து பல ஊர்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க மணிக்கணக்கில் போராடினர்.

விபத்து நடந்த ஆலை

தீ அணைத்த பிறகு பலரும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். பலர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கதறினர். அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 11 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயமைடைந்தனர். மாவட்ட ஆட்சியர். எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.

எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள் கேட்டு கொண்டே இருந்தன. பாலாயி என்ற மூதாட்டியின் மகன் ரவி, அவரது மனைவி சிவகாமி இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் மகனுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மகன், மருமகளை பறிக்கொடுத்த துக்கத்தில் பாலாயி, `அய்யோ அய்யோ’ என கதறிக்கொண்டே `இனிமேல் எனக்கு யார் இருக்கா?’ என்று கலங்கி துடித்தார்.

சோகத்தில் உறவினர்கள்

உறவினரை இழந்த பெண்கள் பலர், `முகத்தை கூட பார்க்க முடியாத சாவை கொடுத்துட்டியே கடவுளே உனக்கு கண்ணில்லையா?’ என மார்பில் அடித்து கொண்டு கதறியவர்களை தேற்ற முடியவில்லை. தீபாவளி பண்டிகைக்காக வெடி தயாரிக்கப்பதற்கான மருந்து அதிகளவில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெடி தயாரிக்கப்பட்டு அங்கே இருந்துள்ளது. வெடியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து விசாரித்த போது, `பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. தலை தனி, உடல் தனியாகவும் தூக்கி எறியப்பட்டு கிடந்தன. 11 மணிக்கு மேல் விபத்து ஏற்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கும். பலர் காலை உணவு சாப்பிட சென்ற சமயத்தில் விபத்து ஏற்பட்டதால் சிலர் உயிர்பிழைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

சிவகாசியிலிருந்து வேலைக்கு வந்த சிலர், இந்த ஆலையில் எந்த பாதுகாப்பு வசதியும் இல்லை. வெடிகளுடனே இருக்கும் எங்களுக்கே இங்கிருக்கிற நிலையை பார்த்து நடுக்கம் உண்டாகிறது. இனி எங்களால் வேலை செய்ய முடியாது அப்படி செய்தால் நாங்கள் உயிருடன் போவோமா என்பது சந்தேகம் தான் என கிளம்பியுள்ளனர். ராஜேந்திரன் அவர்களிடம் இரண்டு நாளில் நீங்கள் கிளம்பி விடலாம் என கெஞ்சி இருக்க வைத்துள்ளார். அவர்கள் பயந்தது போலவே நடந்து விட்டது.

ஆலையை சுற்றியிருக்கும் பழங்குடியினர், பட்டியலினத்தவர் பலர் ஆலையில் வேலை செய்தனர். இதில் அவர்களும் இறந்துள்ளனர். உறவுகளை பறிக்கொடுத்த அவர்கள், `எங்களுக்கு ஒண்ணு என்றால் யார் வருவார்கள், எங்களை மனிதர்களாக கூட யாரும் பார்ப்பதில்ல்லை. வயிற்று பிழைப்பிற்காக போன எங்க மக்களுக்கு ஏற்பட்ட நிலையை பாருங்கள்’ என சத்தம் போட்ட அவர்களை போலீஸார் அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர்.

அரியலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்

விதிமுறைகள் பின்பற்றாததே இந்த கோர விபத்துக்கு காரணம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு எப்படி விபத்து ஏற்பட்டது அல்லது அதிகாரிகள் கண்துடைப்பிற்காக ஆய்வு செய்தார்களா என்பதும் கேள்வியாகி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக ராஜேந்திரன் அவரின் மருமகன் அருண் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.