சீனாவின் ஹாங்ஸு நகரில் நடந்துவரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதின. மழையால் தாமதமாகவே தொடங்கியது இந்தப் போட்டி. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

Pakistan v Bangladesh

தொடர்ந்து போட்டிகள் நடப்பதால் செஜாங் பல்கலைக்கழக மைதானத்தில் ரன்கள் அடித்து என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. கடந்த சில போட்டிகளாகவே தொடர்ந்து குறைவான ஸ்கோர்களே அடிக்கப்பட்டு வந்தது. இதனால் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடங்கியது பாகிஸ்தான். ஐந்து ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் அடித்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் 5 ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டு DLS முறைப்படி வங்கதேச அணிக்கு 65 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

10 விக்கெட்கள் கையிருப்பிலிருக்க, ஐந்து ஓவர்களில் 65 அடிப்பது சற்றே எளிதானதுதான். செஜாங் பல்கலைக்கழக மைதானமும் அளவில் சிறிய மைதானம்தான். அப்படியிருந்தும் முடிந்தளவு போராடியது பாகிஸ்தான் அணி. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் அர்ஷத் இக்பால். ஆனால், அடுத்து வந்த அஃபிப் ஹுசைன் 11 பந்துகளில் 20 ரன்கள் அடித்து வங்கதேச இன்னிங்ஸை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவந்தார்.

யாசிர் அலி 16 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். குறிப்பாகக் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6, 2, 6, 2 என 16 ரன்களை முதல் நான்கு பந்துகளில் சேர்த்தார் அவர். ஐந்தாவது பந்தில் யாசிர் அலி அவுட்டாகக் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டன. புதிதாகக் களத்திற்கு வந்த ரக்கீபுல் ஹசன் பவுண்டரி அடித்து வங்கதேசத்துக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கியது வங்கதேசம்.

Pakistan v Bangladesh

இதுவரை இந்த ஆசியப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றிருக்கிறது வங்கதேசம். இரண்டுமே கிரிக்கெட்டில்தான். ஆசிய அளவில் ரேங்கிங் அடிப்படையில் இரண்டாவதாக இருந்த பாகிஸ்தான் அணி பதக்கம் எதுவும் இல்லாமல் வீடு திரும்புகிறது. பாகிஸ்தான் பெண்கள் அணியும் கிரிக்கெட்டில் பதக்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.