சந்திரயான் – 3 – கனவு நனவாகியிருக்கிறது. நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தைத் தரையிறக்கி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்து சாதனை படைத்திருக்கிறது இந்தியா.

இந்தச் சாதனைக்கு மூலக்காரணமானவர் இத்திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல். விழுப்புரத்தைச் சேர்ந்தவரான வீரமுத்துவேல், இந்த வெற்றிச் செயலின் மூலம் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். விகடனுக்கு அவர் அளித்த பேட்டியைப் பின்வருமாறு பார்க்கலாம்.

“பொதுவாக கிரிக்கெட் அல்லது சினிமா பிரபலங்களுக்குக் கிடைக்கும் இளைஞர்களின் வரவேற்பு, உங்களுக்கு, அதுவும் அறிவியல் துறையில் சாதித்த ஒருவருக்குக் கிடைத்து வருகிறது. இந்த உணர்வு எப்படியிருக்கிறது?”

“ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரயான் – 3 தரையிறங்குவதற்காக வேலைப் பார்த்தோம். இந்தச் சாதனை அறிவியல் துறைக்குச் சார்ந்தது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் சாதனைப் போல இருக்கிறது. எங்களை இச்சாதனைப் பெருமையாக உணர வைக்கிறது. நிலவில் தரையிறங்கியதற்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் பெருமை சேர்ந்திருக்கிறது. இந்தப் பெருமை இஸ்ரோவின் மூலம் கிடைத்தது என எண்ணும் போது அதிகப்படியான மகிழ்ச்சி. இஸ்ரோவில் உள்ள அனைவரும் வேட்கையோடு பணிகளை மேற்கொள்வோம். எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. மேலும் இது போன்ற பல செயல்களை நிகழ்த்துவதற்குத் தயாராக இருக்கிறோம்.”

வீரமுத்துவேல்

“ஒவ்வொரு முறை இஸ்ரோ சாதிக்கும்போதும் அதற்காக உழைத்த பெண் விஞ்ஞானிகள் அதைக் கொண்டாடும் தருணங்கள் வைரலாகும். சந்திரயான் – 3 மிஷனிலும் அது தொடர்ந்தது. இந்தத் திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு பற்றி…”

“பெண்கள் பலர் இத்திட்டத்திற்காக வேலை பார்த்திருக்கிறார்கள். நமது பிரதமர் எங்களது ஆபரேஷன் சிஸ்டத்திற்கு நேரடியாக வந்து எங்களைச் சந்தித்தார். அந்தச் சமயத்தில் இத்திட்டத்தில் வேலைப் பார்த்த அனைத்து பெண்களையும் சந்தித்தார். இங்குள்ள அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு அபரிமிதமானது. அனைத்து பாலினத்தவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கக்கூடியது இஸ்ரோ. யார் நன்றாக வேலைப் பார்த்தாலும் வாய்ப்பு அளிக்கப்படும். இது மாதிரியான மிஷன் மூலம் இளைஞர்களிடம் அறிவியல் துறை சார்ந்த ஆர்வத்தை விதைக்க முடியும். பெண்களுக்கும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். பல நிறுவனங்களில் பெண்கள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றனர். முன்பிருந்த பெண்களின் நிலைமை தற்போது மாற்றம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன். இஸ்ரோ மட்டுமின்றி பல இடங்களிலும் பெண்கள் முக்கியமான பங்காற்றி வருகிறார்கள். இனி வரும் காலகட்டங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் என எண்ணுகிறேன்.”

“சந்திரயான் 2-விலும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். சந்திரயான் 2 தோல்வி டு சந்திரயான் 3 வெற்றி – இந்த இரண்டிற்குமான காலகட்டத்தில் உங்களின் மனநிலை எப்படி இருந்தது? வெற்றியை நோக்கி ஓட உங்களுக்கு எது உத்வேகம் அளித்தது?”

“சந்திரயான் – 2 தோல்வியைச் சந்தித்த அடுத்த நாளே நாங்கள் ஒரு கமிட்டி தொடங்கி அதில் செயலாற்றத் தொடங்கிவிட்டோம். தோல்விக்குக் காரணமென்ன, இனி நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதைக் கலந்து ஆலோசித்து ஒரு ரிப்போர்ட்டைத் தயார் செய்தோம். அந்த ரிப்போர்ட் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். இஸ்ரோவில் அனைத்திற்கும் ஒரு கமிட்டி இருக்கிறது. அடுத்த புராஜெக்ட்டிற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தோம். உடனடியாக மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது. 2019-ம் ஆண்டின் இறுதியில் நான் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டேன். 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்தது.

சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்த இலக்கைச் சாத்தியப்படுத்துவதற்கு அனைவரும் முனைப்புடன் வேலைப் பார்த்தோம். டிசைன்களையும் மேலும் வலிமைப்படுத்தினோம். சென்சார் கோளாறு ஏற்பட்டாலும் இன்ஜின் வேலை செய்யவில்லை என்றாலும் அதனைக் கையாளும் திறனை அறிந்து தரையிறக்க வேண்டும் என்கிற உறுதியுடன் செயல்பட்டோம். இது போன்ற பல வழிமுறைகளை சந்திரயான் – 2 விண்கலத்திற்குச் செய்யவில்லை.

கூடவே நிலவில் இருப்பது போன்ற சூழலைச் செயற்கையாக உருவாக்கி அதில் சில முயற்சிகளைச் செய்து பார்த்தோம். முதலில் நினைத்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்தோம். இந்த முயற்சிகள்தான் விண்கலத்தை ஏவுவதற்கு நம்பிக்கை கொடுத்தது.”

வீரமுத்துவேல்

“பிரக்யான் ரோவர் வாழ்நாள் முடிந்த பிறகு அதை ரீபூட் செய்வதற்கான முயற்சிகள் நடந்ததாகச் செய்தி வந்ததே… அதற்கு அணுசக்தி வளங்கள் தேவை என்றும் சொன்னார்கள். அந்த முயற்சி என்ன? அது குறித்து விளக்க முடியுமா?”

“நமக்கு அணுசக்தி வளங்கள் கிடையாது. சூரிய சக்தியைச் சார்ந்ததுதான் பிரக்யான் ரோவர் இயங்கியது. இரவு நேரங்களில் நிலவில் வெப்பநிலை குறைவாக இருக்கும். நாங்கள் புதுமையாக விக்ரம் லேண்டரிலும் பிரக்யான் ரோவரிலும் ‘Sleep & Wake up’ சிஸ்டத்தை வடிவமைத்திருந்தோம். சூரிய ஒளி பிரக்யான் ரோவரிலும் விக்ரம் லேண்டரிலும் விழும் போதும் விழித்துக் கொள்ளும். அதுவும் வெப்பநிலை -10 டிகிரி சென்டிகிரேட் வரும் போது மின்சாரம் கிடைத்து லாண்டரும் ரோவரும் விழித்துக் கொள்ளும். விழித்துக் கொள்வதற்கான பவர் சிஸ்டத்தை முழுமையாக நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். அந்த விஷயத்தில் அதிகப்படியான நம்பிக்கை இருந்தது. பிரக்யான் ரோவர் செயல்பட்டாலும் அது செயல்படுகிறதா என்பது குறித்து நமக்குத் தெரியாது. ஏனென்றால், விக்ரம் லேண்டர் மூலமாகத்தான் பிரக்யான் ரோவர் இயங்குவது குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். வருங்காலத்தில் நீண்ட இயங்கு முறைக்கு நாம் அணுசக்தி வளங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் அந்த டெக்னாலஜி கிடையாது.”

“மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்கு முன்னெடுப்பாக இயந்திரங்கள் வராத நிலையில் இந்த விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியமா என்ற விமர்சனம் எப்போதும் எழுகிறதே… இது குறித்து உங்கள் பார்வை என்ன?”

“எப்போதும் விண்வெளி துறையில் இந்தக் கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. விக்ரம் சாராபாயின் காலகட்டத்திலிருந்தே இந்தக் கேள்வி இருந்து வருகிறது. ஆனால் இன்றைய நாள்களில் அந்தக் கேள்வி குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நம்முடைய பயன்பாடுகள் அந்த அளவிற்கு இருக்கிறது. சாதாரண மனிதனுக்கும் நாம் விண்வெளியைப் பயன்படுத்தியிருக்கிறோம். ரிமோட் சென்சிங்கிற்கும், தொடர்பிற்கும், அறிவியல் ஆய்விற்கும் நாம் விண்வெளியைப் பயன்படுத்தியிருக்கிறோம். அறிவியல் ஆய்வுகளுக்கு நேரடி பயன்பாடு இருக்காது. வருங்காலத்தில் மனிதர்கள் நிலவிற்குச் சென்று தங்குவதற்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கின்றன. இன்று அதற்கான முயற்சிகள் எடுத்தால்தான் வருங்காலத்தில் மனிதர்கள் ஆய்வு செய்ய முடியும். இது மாதிரியான பார்வை விக்ரம் சாராபாய், அப்துல் கலாம், சதீஷ் தவான், ஹோமி பாபா ஆகியோருக்கு இருந்தது. தொலைநோக்கு பார்வை என்பது மிகவும் முக்கியம். இன்று இது உடனடியான நன்மைகள் கொடுக்காமல் இருக்கலாம். வருங்காலத்தில் இது பொது மக்களுக்குப் பயனளிக்கும் வடிவில் இருக்கும்.”

வீரமுத்துவேல்

“சில வாட்ஸ்அப் வதந்திகளுக்கு உங்களின் பதில்கள்…

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கவேயில்லை, அது பிலிம் ஷூட்டிங்கில் எடுத்தது என அப்போதிருந்தே பேசுகிறார்களே, இது குறித்து உங்கள் பார்வை என்ன?

அது உண்மை என்றால் 1972-க்கு பிறகு நாம் ஏன் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவில்லை?

அப்போதே மனிதர்களை இறக்கிவிட்டோம் என்றால் தற்போது ஒரு ரோவரைத் தரையிறக்கியதையே ஏன் நாம் பெரிய சாதனையாகக் கொண்டாட வேண்டும்?”

“நிச்சயமாக அவர்கள் நிலவில் இறங்கியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதேபோல…

முழுமையான பதிலைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.