திருப்பூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தளி என்ற கிராமத்தில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் சித்ரா மகேஷ். ’தமிழ்க்காரி’ என்ற புனைப்பெயரில் அறியப்படும் இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்று கவிதை, நூல்கள் என்று எழுத்துத் தளத்தில் பயணித்து வருகிறார். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர், டல்லாஸ் (Dallas) நகர தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எனப் பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.

எழுத்தாளர் சித்ரா மகேஷ்

அமெரிக்காவில் இருந்தபடியே 1,330 குறள்களுக்கும் உரை எழுதி ’திருக்குறள் 3.0’ நூலை சமீபத்தில் சென்னையில் வெளியிட்டுள்ளவரிடம் பேசினோம். “உடுமலைப்பேட்டை அருகே உள்ள எங்கள் தளி கிராமத்தில், விவசாயக் குடும்பம் எங்களுடையது. சிறுவயதில் இருந்தே எனக்குத் தமிழ் மீது தீராத ஆர்வம். சிறு சிறு கவிதைகளை எழுதுவேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆங்கிலப் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும், பின்னர் முனைவர் பட்டமும் பெற்றேன்.

நூல்

திருமணத்துக்குப் பிறகு கடந்த 19 ஆண்டுகளாக அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கணவர் மகேஷ் மென்பொருள் பொறியாளர். ஒரு மகள் உள்ளார். அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தாலும் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வம் எனக்குக் குறையவில்லை. இதனால், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கவிதைகள், மற்றும் சமூகப் பிரச்னை சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தேன்.

அதன் தொடர்ச்சியாக, சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் 30 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த தலைமுறையினருக்கும் புரியும் வகையில் எளிமையான மொழியில் உரை எழுதினேன். அவற்றை ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களுடன் ’காதல் கதை சொல்லட்டுமா?’ என்ற நூலாக வெளியிட்டேன். பின்னர், 30 குறுந்தொகைப் பாடல்களை தேர்ந்தெடுத்து, எளிய உரை எழுதி, ஓவியர் உதயபாஸ்கர் உதவியுடன் ‘பூக்கள் பூத்த தருணம்’ என்ற நூலினை வெளியிட்டேன்’’ என்பவருக்கு, திருக்குறளுக்கான உரை ஆர்வம் ஒரு மேடையில் உதித்திருக்கிறது.  

திருக்குறள் விளக்கம்

’’அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகளிடம் தமிழ் மொழியை ஊக்குவிக்க, ஒரு திருக்குறள் கூறினால் ஒரு டாலர் வழங்கும் திட்டத்தை தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்வில் ஒருவர் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்தார். அப்போதுதான், நாமும் ஏன் 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதற்குத் தீவிரமாக  முயற்சித்து அடுத்த ஒரு மேடையில் ஒப்புவித்ததுடன், அந்த மேடையிலேயே 1,330 குறள்களுக்கும் பொருள் எழுதவுள்ளதாகவும் அறிவித்தேன்.

ஒரு வேகத்தில் அறிவித்தாலும், அதை அர்ப்பணிப்புடன் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி, சாலமன் பாப்பையா, தமிழண்ணல், மு.வா., சிற்பி பாலசுப்பிரமணியன் ஆகியோர் திருக்குறளுக்கு எழுதிய உரைகளை வாசித்தேன். நல்ல புரிந்துணர்வு கிடைத்தது. குறளுக்கான உரை மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினருக்கும் எளிதில் புரியும்படி, பிடிக்கும்படி ஓவியத்துடன் சொல்லத் திட்டமிட்டு, அதற்கான பணியை 2021-ல் தொடங்கினேன்.

திருக்குறள் விளக்கம்

முதற்கட்டமாக இன்பத்துப் பாலுக்கும், அடுத்து அறத்துப் பாலுக்கும், பின்னர் பொருட்பாலுக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நேரம் செலவிட்டு குறளுக்கான உரையை எழுதி முடித்தேன். இந்த ’திருக்குறள் 3.0’ நூலை சமீபத்தில் சென்னையில் சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டார். வெளிநாடு தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, தமிழ் வளர் மையத்தின் இயக்குநர் இரா.குறிஞ்சிவேந்தன், கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது’’ என்பவர், தனது அடுத்த தமிழ் திட்டங்களையும் வகுத்துவிட்டார்.

’’இப்போது மொழி மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழ் மொழியை 2கே கிட்ஸுக்கும் கொண்டு செல்லும் பணியைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. அதற்கான எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்’’ – உற்சாகத்துடன் சொல்கிறார் சித்ரா மகேஷ்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.