பல்லுயிர் ஓம்பி பல பரிமாணங்களுக்கு வித்திட்ட காடுகள் இன்று பரிதாப நிலைக்கு நம்மால் தள்ளப்பட்டுள்ளன. குரங்கிலிருந்து மனிதன் வரும் வரை காடு,அனைத்து உயிர்களையும் காத்து வந்தது. மனிதன் பரிமாணப் படிகளில் ஏற ஏற காடுகள் சிதைபள்ளம் நோக்கி சீரழிய ஆரம்பித்து, இன்றைக்குமனிதன் காடுகளைக் காக்க வேண்டிய அவல நிலையும் அவசர நிலையும் ஏற்பட்டுள்ளது. காடுகளின் பயன்கள் பாதுகாப்பு மற்றும் காட்டுமர வளர்ப்பு பற்றி விரிவாகப் பார்ப்போம்…

அழகிய காடு

அழிவு நோக்கி அடவிகள்:

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பில் 57% (ஆறு பில்லியன் ஹெக்டேர்) ஆக்கிரமித்து அடவி (காடுகளின்தொகுதி), ஆசை அடங்கா அகம் கொண்ட ஆள்களால் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கத் தொடங்கியது. கெஜ்ரி மரங்களைக் காக்க தன் மூன்று மகள்களுடன் உயிர் நீத்த பீஷ்னாய் சமூகப் பெண்மணி அமிர்தா தேவி போன்ற போராளிகள் இருந்த போதும் 1800-களில் கானகத்தின் நிலப்பரப்பு 55% (5.8 மில்லியன் ஹெக்டர்) குறைந்தது. 1900-களில் மனிதச் சுரண்டல்களால் அடவியின் ஆக்கிரமிப்பு மேலும் 48% (5.1 பில்லியன் ஹெக்டர் ) குறைந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சுரண்டல்கள் சூடு பிடித்து 1950-களில் 44% (4.7 பில்லியன் ஹெக்டர்) குறைந்தது காடுகளின் நிலப்பரப்பு. 1973-ல் சுந்தர்லால் பகுகுணா தலைமையில் நிகழ்ந்த சிப்கோ இயக்கத்தின் முயற்சியால் 1980 -ல் இந்திராகாந்தி வனப் பாதுகாப்பு சட்டம் இற்றினார். இச்சட்டம் இமாலய மலைகளின் மரங்களை வெட்ட 15 ஆண்டுகள் தடையிட்டது. இது போன்ற கடுமையான சட்டங்கள் இருந்த போதும் இன்றைக்குக்காட்டின் பரப்பு 38% சுருங்கியுள்ளது என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறியுள்ளது. காடுகள் குறைந்து தொழிற்சாலைகளும் சுற்றலா மையங்களும் விவசாயநிலங்களும் பெருகினால் நாட்டின் வேலைவாய்ப்பும் வருவாயும் உயரத்தானே போகிறது பிறகு ஏன் காட்டுப்பரப்புக் குறைவதைப் பெரிய குறையாக எண்ணிப் பேசுகிறார்கள் என்று கூறுகிறீர்களா..? அதற்கான பதிலைப் பார்ப்போம்.

அள்ளி வழங்கும் காடுகள்…

ஒரு வருடத்திற்கு 11 டன் கரியமில வாயுவை ஒரு ஹெக்டர் காட்டுப்பரப்பு சேமிக்கிறது. உணவுச் சங்கிலியைச் சீரமைப்பதிலும் உயிர் பன்மயத்திற்கு உதவுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது வனங்கள். நீர் சுழற்சியில் நீங்கா இடம் பிடித்துள்ள காடுகள் நீர் மேலாண்மையிலும் தவிர்க்க முடியாதவை ஆகும். பருவநிலையைச் சமன் செய்வதிலும் மழைப்பொழிவு பெருக்கம் மற்றும் அதன் விளைவுகளான நிலச்சரிவு மண்ணரிப்பு வெள்ளப்பெருக்கு முதலியவற்றைத் தடுப்பதிலும் சீரிய பங்கு வகிக்கின்றன இந்த தில்லங்கள்.

சுந்தரவன காடு

அருங்கானகத்திலேயே அருமருந்துகளும்; அன்றாட வாழ்வியலுக்கு அவசியமான உணவு, மரக்கட்டை, கால்நடை தீவனங்கள் என அனைத்தும் உருவாகின்றன. இரண்டே இரண்டு மரங்கள் ஒரு மனிதனின் சுவாசத்‌தேவைக்கான ஆக்சிஜனை வழங்குகின்றன. அதற்கான மதிப்பீடு இந்திய மதிப்பில் ஓராண்டுக்கு ரூபாய் 47 கோடியே 45 லட்சங்கள் ஆகும். இரண்டு மரங்களே பல கோடி மதிப்பிலான உயிர் வாழ்வுவை விலை இன்றி வழங்கும் போது ஒரு காடு பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலானவற்றை வழங்கி உலக உயிர்களைக் காக்கின்றன. இவ்வளவு சேவைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கும் வனங்கள் நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு குறைந்து கொண்டே வருகின்றன. கற்பகத் தருவாக அனைத்தையும் வழங்கும் காடுகளைக் காக்க வேண்டியது நமது கடன் அல்லவா?

வன பாதுகாப்பும் வனவிலங்கு பாதுகாப்பும்

உயிரி பன்மய சமன்பாட்டிற்கு வனவிலங்குகள் இன்றியமையாதவை ஆகும். சுற்றுலாத்துறை வருமானத்திற்கு வனவிலங்குகளின் பங்கும் உண்டு. இந்தியாவில் 1970 முதல் 2014 வரை வன உயிரினங்களின் எண்ணிக்கை 52% குறைந்துள்ளது. காடுகளின் பரப்பு சுருங்குதல் மற்றும் அதீத பயன்பாடு இவற்றால் வெள்ளை காண்டாமிருகம், தங்கத்தேரை, இமாலயக்குயில் முதலிய பல விலங்குகள் அழிவுற்றுள்ளன. மேலும், ராமேஸ்வரம் பாராசூட் சிலந்தி, சைபீரியா கொக்கு முதலியனவை அழிவின் விளிம்பில் உள்ள நிலையில்‌ இந்திய காண்டாமிருகம், நீலகிரி வரையாடு முதலியன அழிவை நோக்கி உள்ளன. ஒவ்வொரு வகை உயிரும் உலக சமன்பாட்டிற்கு அவசியம். வனம் பாதுகாப்பு வனவிலங்கு பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். இதற்குச் சான்றாகப் பல நிகழ்வுகள் உள்ளன.

வன விலங்குகள்

சமீபத்திய சான்றாக கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் நாம் அடைபட்ட போது காட்டு விலங்குகள் எவ்வளவு சுதந்திரத்துடன்‌ மகிழ்வுடன் தன் இருப்பை வெளிப்படுத்தின என்பதைப் பல காணொளிகள் காட்சிப்படுத்தியதைக் கூறலாம். 1986 -ல் ரஷ்ய நாட்டின் செர்னோபில் பகுதியில் அணு உலை வெடித்து சிதறி, மனிதன் வாழ தகுதி இல்லா இடமானது. சில ஆண்டுகளிலேயே தாவர வளர்ச்சியால் சிறு காடாக மாறியது செர்நோபில். மனிதன் நடமாட்டம் இல்லாத பகுதியில் பல விலங்குகள் பல்கிப் பெருகி வாழ்கிறது இப்பொழுதும். இதுவே, காட்டின் பாதுகாப்பே விலங்குகளின் பாதுகாப்பு என்பதற்குச் சிறந்த சான்றாகும்.

காடுகளைக் காக்கும் வழிமுறைகள்

மரங்களின் தொகுப்பே காடுகள். ஆகையால், காட்டு மர வளர்ச்சியே காடுகளின் பாதுகாப்பிற்கு வித்திடும். காட்டின் பாதுகாப்பு என்பது ஒரு அரசாங்கத்தாலோ; ஒரு சமூக அமைப்பாலோ தனித்து செய்ய இயலாது. அது ஒரு கூட்டு முயற்சி. சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இது 100% சாத்தியமாகும். நாம் ஒவ்வொருவரும் நமது பிறந்தநாள் அல்லது மனதிற்கு நெருங்கியவரின் பிறந்தநாள், திருமணநாள் முதலிய சுப தினங்களின் அடையாளமாக மரக்கன்றுகளைப் பொது இடத்தில் அல்லது நமது சொந்த இடத்தில் நட்டு பராமரிக்கலாம். மேலும் சுப நிகழ்ச்சிகளில் தாம்பல பையோடு மரக்கன்றுகளையும் விதை பந்துகளையும் வழங்கி வனம் செழிக்கச் செய்யலாம் இதை ஆண்டுதோறும் கடைபிடித்தால் பல நினைவுகளோடு ஒவ்வொருவரும் ஒரு குறுங்காட்டை உருவாக்கலாம்.

செரெங்கெட்டி தேசியப் பூங்கா

நாம் ஒவ்வொருவரும் ஆடம்பர தேவைகளுக்காக வனம் மற்றும் வனவிலங்கு சார்ந்த பொருட்களைத் தவிர்த்தாலே வனம் சார்ந்த அதீத சுரண்டலைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

எதிர்கால உலகின் தூண்கள் நம் இளைய சமுதாயமே. அவர்களிடம், ”உனக்குப் பிடித்த நடிகன் யார்? நடிகை யார்?” என்னும் அவசியமற்ற கேள்விகளைத் தவிர்த்து, “உனக்கு பிடித்த மரம் எது?” எனக் கேள்வி எழுப்ப ஆரம்பித்தாலேயே பச்சிளம் குழந்தைகளுக்கும் பசுமை நிறைந்த காடுகள் மேல் விருப்பமும் காதலும் வரும். பிடித்த ஒன்றிற்குத் தீங்குநேர எவரும் அனுமதிக்கமாட்டர். பிடித்த மரங்களையும் அழிக்க விடமாட்டர் நம் எதிர்கால சந்ததிகள்.

குறுங்காடு வளர்ப்பே ஒவ்வொரு விவசாயியையும் வனப் பாதுகாப்பிற்கு எடுக்கும் முதல் யுக்தி. ஒருவகைப் பயிர் மட்டுமே பயிரிட்டால் மண்ணின் ஒரு வகை சத்துக்கள் மட்டுமே சுரண்டப்படும். இது பல்லுயிர் பெருகத்திற்கு உதவாது. ஆகையால் பல வகையான மரங்களைக் கொண்டு குறுங்காடுகள் அமைக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் இன்றி பயணம் செய்வோர், நில ஆக்கிரமிப்பு செய்வோர், பயணச்சீட்டு இன்றி பயணிப்போர் எனச் சிறு குற்றம் புரிவோருக்கு தண்டனையாக 10 மரக்கன்றுகளை மூன்று மாதம் வளர்த்து பராமரித்து வருதல் ஒரு கூடுதல் மாற்றுத் தண்டனையாக விதிக்கலாம் நமது அரசு. ஒவ்வொரு வார இறுதியில் பராமரிப்புப் பணி செய்த புகைப்படங்களோடு சமர்ப்பித்தால் மட்டுமே குற்றத்திலிருந்து விலக்கு அளிக்க முடியும் என அரசு ஒரு புதிய முயற்சியை எடுக்கலாம். ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு முதலிய ஆதாரங்கள் வழங்கும் முன் பயனாளியை மரக்கன்று நட்டு பராமரிக்க சொல்லிப் புகைப்படங்களோடு இருந்தால் ஒப்புதல் அளிக்கலாம் என அரசு புதிய உத்தரவு கொண்டு வந்து மரம் வளர்ப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

குறுங்காடு

காடுகளை அழிப்போர்க்குத் தண்டனையை மிகவும் கடுமைபடுத்தினால், குற்றங்கள் குறையும். வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் முதலியவற்றின் எண்ணிக்கையை உயர்த்தி உயிரினப் பெருக்கத்திற்கு வழிவகுக்கலாம் நமது அரசு. வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குழுமங்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கி மேலும் பலரை அதில் ஈடுபடுத்த தூண்டலாம். இளையோருக்கு இயற்கை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பல போட்டிகள் நடத்தி ஊக்கமளிக்கலாம்.

“நான் விடும் மூச்சுக்காற்றில் தான் நீ வாழ்கிறாய்

என்னை அழிப்பது உன்னை நீயே வதைப்பதற்குச் சமம்.”

இக்கவிதையின் பொருளை ஆழமாக உள்ளதால் உணர்ந்து, சிந்தையால் சிந்தித்து, செயலாற்றி காட்டுமரம் வளர்ப்போடு காட்டை காப்போமாக!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.