காலையில் எழுந்தவுடன் பால் வாங்க `கூகுள் பே’ செய்து, அடுத்து ஆன்லைன் ஆபிஸ் மீட்டிங்க்கு `கூகுள் மீட்’டில் தயாராகி, பின்பு வழிதெரியாத இடத்துக்கு `கூகுள் மேப்’ உதவியோடு சென்று என ஒரு நாள் ஆரம்பித்த 2 மணி நேரங்களிலே ஒரு சாமானிய ஊழியரின் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது கூகுள். இத்தகைய நிறுவனம் தனது 25வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது.

முதன் முதலாக கூகுள் தொடங்கப்பட்ட இடம்

ஒரு காலத்தில் சாதாரண சிறிய கேரேஜில் தொடங்கிய கூகுளின் கதை இன்று 6 கண்டங்கள் விரிந்து, அந்தக் கண்டங்களையும் நம் கைக்குள் கொண்டுவந்துள்ளது. நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில், வேலை செய்யும் முறையையும், தொடர்பு கொள்ளும் விதத்தையும் அது புரட்டி போட்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் கூகுள் செய்தது என்ன? ஒரு சிறிய மீள்பார்வை!

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அமெரிக்க நாட்டிலுள்ள  கலிபோர்னியாவில் ஒரு சிறிய கேரேஜில், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக Ph.D மாணவர்கள் ஒரு புதிய சர்ச் இன்ஜினைத் தொடங்குகின்றனர். அதாவது இணையத்தில் நாம் எதைப் பற்றித் தேடுகிறோமோ, அதனைத் தேடித் தரும் தொழில்நுட்பம். அதற்கு அவர்கள் முதலில் வைத்த பெயர் “பேக்ரப்” (BackRub). அது ஒரு வலைத்தளத்தை எடுத்து அதன் சிறப்புகளைக் கூறி வந்தது.

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்

பின்னாளில் அவர்கள் அதை ‘கூகுள்’ என்று மாற்றினர். இது ‘கூகோல் (Googol)’ என்ற வார்த்தையிலிருந்து மருவி உருவானது. கூகோல் என்றால் எண் 1 ஐத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களைக் குறிக்கும் கணிதச் சொல்லாகும். இது பின்னாள்களில் அண்டமும் எண்ணில் அடங்கும் என்ற செய்தியினைச் சொன்னது. ட்விட்டரில் கூகுள் தனது முதல் ட்வீட்டினை கூட ஒன்று மற்றும் பூஜ்ஜியம் அடங்கிய பைனரி மொழியிலே வெளியிட்டது.

கூகுள் ஆரம்ப நாள்களில் எளிமையாகச் சிறந்த தேடல் முடிவுகளை வழங்குவதில் உறுதியான கவனம் செலுத்தியது. அதை வேகமாகவும், துல்லியமாகவும் தரத் தொடங்கியது. கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் “I am feel lucky” என்ற பொத்தானை முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம், கூகுளுக்கு ஆண்டுக்கு 110 மில்லியன் டாலர் செலவினத்தை உண்டாக்கியது. அதாவது விளம்பர வருவாயைக் குறைத்தது. இருப்பினும் விளம்பரங்களைத் தவிர்த்துவிட்டு நேரடியாகத் தேடல் முடிவுகளுக்குச் செல்ல அனுமதித்தது கூகுள். இது ஆரம்பக் காலகட்டத்தில் கூகுள் வளர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. பின்னர் அந்தத் தொழில்நுட்பத்திலிருந்து பின்வாங்கியது.

கூகுள்ப்ளெக்ஸ், கூகுள் தலைமையகம்

1998-ம் ஆண்டு நடைபெற்ற பர்னிங் திருவிழாவில் தன்னுடைய முதல் கூகுள் டூடுலை வெளியிட்டது. கூகுள் வளர வளர அதன் லட்சியங்களும் வளர்ந்தன. அதன் முதல் அலுவலகத்தை 1999-ம் ஆண்டு கலிபோர்னியாவில் மவுன்ட்டெயின் வியூ என்ற இடத்தில் ஆரம்பித்து அதற்கு Google Plex எனப் பெயரிடப்பட்டது. கூகுள்ப்ளெக்ஸில் ஊழியர்களுக்கு இலவச உணவுகள், ஆன்-சைட் மசாஜ்கள் மற்றும் பௌலிங் விளையாட்டு என்று ‘கூகுள் ஒரு நிறுவனம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை’ என்று பெருமிதம் கொண்டது.

அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு, AdWords என்ற தொழில்நுட்பத்தை கூகுளில் சேர்த்துக் கொண்டனர். மற்ற நிறுவனங்களுக்கு அதன் விளம்பரங்களைத் தயார் செய்து வெளியிடும் ஓர் இடத்தினை அது கொடுத்தது. அதுவரைத் தனித்துச் செயல்பட்ட கூகுள், மக்களின் நிதி உதவியைப் பெற 2004-ம் ஆண்டு முதல் Initial Public Offering-ஐ (IPO) வெளியிட்டது. வந்த வேகத்தில் 1.67 பில்லியன் டாலரை மக்களிடம் திரட்டி சாதனை படைத்தது. இது அக்காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வர்த்தக பரிமாற்றம் எனச் சொல்லலாம்.

YouTube

கூகுளின் வளர்ச்சிக்கு மற்றொரு காரணமாக அதன் தொலைநோக்கு பார்வையைச் சொல்லலாம். ஒரு நிறுவனம் வளர்ந்துவரும் நேரத்திலேயே அது எத்தகைய வளர்ச்சியை அடையும் என்பதைக் கணக்கில் கொண்டு அதைத் தனதாக்கி (Acquisition) கொள்ளும் தந்திரத்தோடு செயல்பட்டது. அப்படிதான் வேகமாக வளர்ந்து வரும் YouTube தளத்தினை 1.65 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியது. ஆனால் அந்தத் தொகையை இப்போது மூன்று வாரத்திலேயே எடுத்துவிடுகின்றனர். அடுத்ததாக இன்று நாம் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களை உருவாக்கிய ஆண்ட்ராய்டு நிறுவனத்தையும் கையகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு 1.5 கப்கேக்கில் தொடங்கி வரப்போகும் ஆண்ட்ராய்டு 15 வெண்ணிலா ஐஸ்கிரீம் வரை பல தலைமுறை விரல்களை மொபைல் ஸ்கிரீன் வழியாகத் தினமும் தொட்டுக்கொண்டு இருக்கிறது கூகுள்.

அதேபோல தொழில்நுட்பங்களிலும் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியதிலும் கூகுளுக்குப் பெரிய பங்குண்டு. அப்போதிருந்த இணைய பிரவுசர்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க 2008-ம் ஆண்டில் Google Chrome-ன் வருகை, அதை அடியோடு மாற்றி எழுத ஆரம்பித்தது. குறுகிய நாள்களில் அதிக நபர்களால் பயன்படுத்தும் பிரவுசராக கூகுள் குரோம் மாறியது. அதுமட்டுமல்லாமல் கூகிள் பிளஸ் என்ற சமூகவலைத்தளத்தையும் அடுத்தாக டேட்டாவைச் சேமித்து வைக்க கூகுள் டிரைவ் என்ற ஸ்டோரேஜ் தளத்தினையும் உருவாக்கியது. ஓட்டுநர்கள் இல்லாதத் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்க வேமோ (Waymo), அறிவியல் மற்றும் நீண்ட ஆயுள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த கேலிகோ (Calico), செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராய்ச்சி செய்ய டீப் மைண்ட் (Deep Mind) எனப் பல்வேறு கிளை நிறுவனங்களை உருவாக்கியது.

G Bard AI

அதுமட்டுமில்லாமல் அலுவலகப் பணிகளுக்கு அனைவரும் ஒன்று கூடும் கூகுள் மீட், போகின்ற இடங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கும் கூகுள் மேப், 100க்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்க்கும் கூகுள் ட்ரான்ஸ்லெட்டர் எனப் பல்வேறு பயனுள்ள தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது கூகுள். சொல்லப்போனால் தற்போது AI யுகத்தில் Chat GPT-க்குப் போட்டியாக ‘பார்டு’ (Bard) எனும் A-ஐ உருவாக்கி செயற்கை நுண்ணறிவிலும் தன் கால் தடத்தைப் பதித்துள்ளது.

சாதாரண கேரேஜில் இரண்டே நபர்களால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம். கால் நூற்றாண்டில் டெக் உலகமே வியந்து பார்க்கும் டெக் ஜாம்பவானாகக் கோலோச்சியுள்ளது வியக்கத்தக்க வளர்ச்சி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.