உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர், தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள பதிப்பகமான எல்சேவியர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப (Sci-Tech) நிறுவனம் இணைந்து, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவியல் பதிப்புகளைப் பற்றி ஆராய்ந்தனர்.

படச்செயலாக்க முறை

உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 2% விஞ்ஞானிகளின் பட்டியலை, அமெரிக்காவில் இயங்குகிற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த விஞ்ஞானிகளின் பட்டியலில், பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் என சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில், இந்தியாவில் இருந்து சுமார் 3,500 விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வெவ்வேறு துறை பேராசிரியர்கள் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்… 2022-ம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளின் பட்டியலில், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியல் துறைப் பேராசிரியர் பி. பாலசுப்ரமணியம், வேதியியல் துறைப் பேராசிரியர்கள் எம்.ஜி சேதுராமன், எஸ். மீனாட்சி, இயற்பியல் துறை பேராசிரியர் கே. மாரிமுத்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பேராசிரியர் பி. பாலசுப்ரமணியம்

பி. பாலசுப்ரமணியம்

சாதனை பேராசிரியர்களுக்கு விகடன் சார்பில் வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவர்களிடம் பேசினோம். பேராசிரியர் பி. பாலசுப்ரமணியம், ’’நான், Doctorate of Science (D.Sc) என்ற உயரிய படிப்பை இப்பல்கலைக்கழகத்தில் முடித்தேன். நாட்டின் முதுகெலும்பு, விவசாயம். விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது, பயிர்களில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு. இக்குறைபாடுகளை, படச்செயலாக்க முறை, உள்ளுணர்வு தெளிவற்ற தொகுப்பு முறையைக் கொண்டு கண்டறியும் வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளேன்.

நமது ரத்த அணுக்களிலிருந்து வெள்ளை அணுக்களைப் பிரித்தெடுத்து, அதுபற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் சில நுட்பங்களை, இந்தப் படச்செயலாக்க முறையில் இடைவெளி மதிப்புள்ள தெளிவற்ற முறையை பயன்படுத்தி விளக்கியுள்ளேன். மருத்துவத்தில் மிகப்பெரிய சவாலான, மூளையில் உள்ள கட்டிகளைக் கண்டறியும் செயல்முறைக்கும் இது உதவுகிறது. அப்படிப்பட்ட சவால்களுக்கும் நாம் ஒரு புதிய முறையிலான வழிமுறையை படசெயலாக்கத்தின் முறையில் கொடுத்துள்ளோம்.

Water testing lab

பல நேரங்களில் நாம் எடுக்கும் படங்களானது நமக்குத் திருப்தி தருவதில்லை. அந்தத் தருணங்களில் நமக்குப் பட இணைவு முறை பெரிதும் கை கொடுக்கிறது. இந்த முறையிலும் உள்ளுணர்வு தெளிவற்ற தொகுப்பு முறையைப் பயன்படுத்தி மிகச்சிறப்பான வழிமுறையை வெளிப்படுத்தி இருக்கிறேன். இந்த முறையானது, அநேக துறைகளில் குறிப்பாக மருத்துவத்துறையில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

கிரிப்டோகிராஃபி மூலம் Text, Audio, Video, Image கோப்புகளை அனுப்புபவர் மற்றும் அதனை பெறுபவர் மட்டும் பார்க்கும் வகையில், சிப் வடிவில் மொபைல்போனில் பொருத்தி, அதற்கு பாஸ்வேர்ட் அமைத்து அதன் மூலம் நாம் அனுப்பும் தகவல்களை வேறு யாரும் பார்க்க இயலாத வகையில் அனுப்புனர் மற்றும் பெறுநர் மட்டுமே பார்க்கும் வசதியை கொண்டுவந்துள்ளேன். பட குறியாக்கவியல் (image encryption), ஒலி குறியாக்கவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு நிச்சயம் தீர்வுகள் பெறப்படும்” என்று தனது ஆய்வு குறித்து விளக்கினார்.

பேராசிரியர் எம்.ஜி. சேதுராமன்

எம்.ஜி. சேதுராமன்

பேராசிரியர் எம்.ஜி.சேதுராமன், “அறிவியல் ஆராய்ச்சிகளை எளிதில் மற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், அத்துடன் இந்தச் சமூகத்திற்கும் எடுத்துக் கூறுவது, இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த ஆய்வில், தாவரங்களில் இருந்து கரிமச் சேர்மங்களை எடுத்து, அதன்மூலம் உலோக அரிமானத்தைத் தடுக்கும் ஆய்வைச் செய்தோம். தற்போது தாவரத்திலிருந்து கார்பன் துகள்களை எடுத்து, அதைப் பயன்படுத்தி புற்றுநோய் மாதிரியான நோய்களைக் குணப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம்.

தாவரங்களில் உள்ள ஆல்கலாய்டுகள், ஹெட்ரோ வளையச் சேர்மங்கள் ஆகியவை உலோக அரிமானங்களைத் தடுக்கும் தன்மை கொண்ட மூலப் பொருள்கள். இந்தச் சேர்மங்களை சுமார் 14 தாவரம் மற்றும் மூலிகையிலிருந்து பிரித்து எடுத்து, இதன் மூலம் உலோகத்தின் அரிமானத்தைத் தடுக்க வழிவகை செய்துள்ளோம். இந்த உலோகங்களில் எஃகு, காப்பர், அலுமினியம், கோபால்ட், இரும்பு ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் உலோக அரிமானங்களால் சுமார் ரூ.1200 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, இயற்கை பொருள்களில் இருந்து கிடைக்கும் சேர்மத்தை வைத்து உலோக அரிமானங்களைத் தடுக்கும் வகைமையை கண்டறிந்துள்ளேன். மாறாக, நாம் செயற்கை சேர்மங்களைப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது” என்றார்.

பேராசிரியர் எஸ். மீனாட்சி

எஸ். மீனாட்சி

வேதியியல் துறை பேராசிரியர் எஸ்.மீனாட்சி, ‘’இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுபட்டம் என அனைத்தையும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தேன். 1992-ல் பேராசிரியர் பணியில் சேர்ந்தேன். 31 வருடங்களாக பேராசிரியர் பணியோடு, அறிவியல் சார் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் சின்னாளப்பட்டியில் இயங்குகிற சாயப்பட்டறை தொழிற்சாலைகள் மூலம் நிலத்தடி நீரும் மண்ணும் மாசுபடும் அவலம் இருந்தது. இதனை களைவதற்காகவே கழிவு நீரிலும், குடிநீரிலும் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கான ஆய்வுகளை பேராசிரியர்கள் கார்த்திகேயன், அப்பாராவ் ஆகியோர் தலைமையில், முனைவர் பட்ட மாணவியாக முதன்முதலில் காந்திகிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் ஆய்வு மேற்கொண்டேன்.

அதன் பலனாக இந்திய அரசு, 8 திட்டங்களின் மீது ஆய்வு செய்வதற்காக DST, DRDO, UGC, CSIR மூலம் எனக்கு சுமார் 2 கோடி நிதியை, வெவ்வேறு காலங்களில் ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியின் மூலமாக என் பல்கலைக்கழக வேதியியல் துறையில் , Water testing lab உருவாக்கினேன். என் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்ற 20 மாணவர்கள் கழிவுநீர் மற்றும் குடிநீரில் இருந்து நச்சுகளை பிரித்தெடுக்கும் ஆய்வை செய்து வருகின்றனர்.

நீர் ஐம்பெரும் பூதங்களில் ஒன்று. அந்த நீரில் இருக்கிற ஃப்ளோரைடு ஹெவி மெட்டல்ஸ் உள்ளிட்ட நச்சுகளை களைவதற்காக Bio – Degreadable Organic – Polymer என்ற ஒன்றை பயன்படுத்துகிறோம். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை என்பதை எங்கள் ஆய்வில் உறுதி செய்திருக்கிறோம்.

தண்ணீர்

இதனை முதன்முதலில் என் தலைமையில் வேதியியல் துறையில் நாங்கள் செய்து காட்டினோம். என் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்ற என் மாணவர் முனைவர் விஸ்வநாதன், தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கழிவுநீர் மற்றும் குடிநீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ஃப்ளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் சாயக்கழிவுகளில் உள்ள நச்சுகளை, உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்” என்று நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

கே. மாரிமுத்து

அபாயகர கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் கே. மாரிமுத்து, ‘’பூமியின் அரிய தாதுக்களை கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு, மற்றும் அபாயகர கதிர்வீச்சை தடுப்பதற்கான கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

பேராசிரியர் கே. மாரிமுத்து

அபாயகர கதிர்வீச்சை தடுப்பதற்கு எப்படி இத்தகைய கண்ணாடிகளை உபயோகப்படுத்தலாம் எனவும் ஆராய்ச்சி செய்துள்ளேன். இதனால் அணு ஆராய்ச்சி மையப் பணியாளர்கள் கதிர்வீச்சின் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுவர். கதிரியக்கக் கவசக் சுண்ணாடியானது அணு ஆராய்ச்சி நிறுவனங்கள், பொருள் சோதனை இயந்திரங்கள் மற்றும் கதிரியக்கப் பொருள்களை ஆய்வு செய்வதற்கான கையுறைப் பெட்டி உபகரணங்களில் விஞ்ஞானிகளின் தேவைக்கான பாதுகாப்பை வழங்குகிறது.

நான் ரூ. 50 லட்சம் மதிப்பிலான தாதுக்களை கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் தொடர்பான திட்டங்களை முடித்துள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் 14 ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகளில் 577 இடங்களில் எனது ஆராய்ச்சி கட்டுரைகள் பிற ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. பூமியின் அரிய தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம், வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகர கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கதிர்வீச்சை தடுக்கும் ஆய்வானது மருத்துவத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

கதிர்வீச்சு

மிகச்சிறந்த அறிவியல்சார் படைப்புகள், ஆய்வுகள் மூலம் மிகச்சிறந்த முறையில் இந்த நால்வரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இந்த நால்வரும் இடம் பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக 2022-ம் ஆண்டுக்கான பட்டியலிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளது வெகு சிறப்பு!

வாழ்த்துகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.