காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஜூன் மாதம் கொலைசெய்யப்பட்டார். ‘ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் உளவாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது’ என்று கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்தார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்திருக்கிறது. ‘கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அரசியல் ரீதியான வெறுப்புக் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. இத்தகைய சூழலில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களும், கனடாவுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருக்கும் இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

கனடாவில் சுமார் 2,30,000 இந்திய மாணவர்களும், சுமார் 7,00,000 வெளிநாடு வாழ் இந்தியர்களும் கனடாவில் வசிப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அங்கு நிரந்தர குடியுரிமைப் பெற்ற இந்தியர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மிக மிக சிறிய எண்ணிக்கையிலான நபர்களே காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்கள். தற்போதைய சூழலில், அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி கனடா வாழ் இந்தியர்களில் பலர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

அவர்கள் தெரிவிக்கும் தகவல்களையும் கருத்துக்களையும் வைத்துப் பார்க்கும்போது, கனடாவில் இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றே தெரிகிறது. ‘இன்னும் சில வாரங்களில் இயல்பான சூழல் திரும்பிவிடும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். கனடாவுக்கு தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில், பஞ்சாபியர்கள் அதற்கு பொருத்தமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதேபோல, கனடாவின் பொருளாதாரத்துக்கு இந்திய மாணவர்கள் பெருமளவில் பங்காற்றுகிறார்கள். எனவே, படிப்புக்காகவோ, வேலைக்காகவோ கனடாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கான விசா முறையை தற்போதைய பிரச்னை பாதிக்காது என்றும் கனடா வாழ் இந்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதில் அரசியல் இருக்கும் என்று கருதுவதாக கனடா வாழ் இந்தியர்களில் சிலர் கூறுகிறார்கள். 2025-க்கும் முன்பாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 7.7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர்கள் பஞ்சாபி வாக்காளர்கள். இதன் பின்னணியிலும் இந்தியா மீதான குற்றச்சாட்டைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

நரேந்திர மோடி, ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்திருக்கக்கூடாது என்று கருதும் கனடா வாழ் இந்தியர்கள், அவர் அந்த குற்றச்சாட்டை தெரிவித்ததைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றச் சூழல் உருவானது என்கிறார்கள். அதனால், கனடாவில் படித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் பதற்றத்துக்கு ஆளானார்கள்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு பதிலாக, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். மாறாக, 2 சதவிகித பஞ்சாப் வாக்குகளைக் குறிவைத்தே அவர் அப்படிப் பேசிவிட்டார் என்றும் கனடா வாழ் இந்தியர்கள் சிலர் கூறுகிறார்கள். தற்போதைய சூழலில், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வீட்டு நெருக்கடி போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவருவதாகக் கூறும் அவர்கள், இந்தப் பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவது போல ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கை இருக்கிறது என்கிறார்கள்.

மோடி – ட்ரூடோ

இந்தக் கொலை கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த நிலையில், இத்தனை நாட்களாக பிரதமர் ட்ரூடோ ஏன் இது பற்றி பேசவில்லை என்ற கேள்வியையும் கனடா வாழ் இந்தியர்களில் சிலர் எழுப்புகிறார்கள். வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் பிரதமரின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. இப்படியான நேரத்தில், இந்தப் பிரச்னையை அவர் எழுப்புகிறார் என்ற பேச்சும் கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது.!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.