பாலிவுட் நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயாபச்சன் சில நாள்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் முதியோர் பிரச்னை குறித்து பேசினார். அப்போது அவர், ”70 வயதை கடந்த முதியோர்கள் மருத்துவக் காப்பீடு பெற தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர். மாதாந்தர தவணை அடிப்படையில் அவர்களுக்குக் கடன் கிடைப்பதில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை. எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்றவர்களைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது.

முதியோர்கள் அனைத்து விதமான வரிகளையும் செலுத்துகின்றனர். 65 வயது வரை மருத்துவக் காப்பீடு கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் முதியோர்களுக்கு இந்தியாவில் எந்தவித திட்டமும் இல்லை. அவர்களுக்கு ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்ய வழங்கப்பட்டு வந்த 50% சலுகையையும் நிறுத்திவிட்டனர்.

முதியோர்

ஆனால் முதியோர்களான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இந்த சலுகை ஏன் மறுக்கப்படுகிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தியாவில் முதியோராக இருப்பதே குற்றமா?

முதியோர்களை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்? முதியோர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பினால் தேர்தலில் அது பிரதிபலிக்கும். இதனால் அரசுக்கு பிரச்னை ஏற்படும். அரசை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அவர்களை புறக்கணிக்காதீர்கள். அரசை மாற்றிய அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அவர்களை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

முதியோர்கள் மீது அரசு கவனம் செலுத்தவில்லையெனில், 65 வயதை கடந்த அனைவரையும் அரசு சாகடிக்க வேண்டும். முதியோர்களுக்கு ஏராளமான திட்டங்கள் தேவை. அரசு முதியோர் நலத்திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிடுகிறது. ஆனால் அத்திட்டங்கள் முதியோரை சென்றடையவில்லை. வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பதால் முதியோர்களுக்கு வருமானமும் குறைந்துகொண்டே வருகிறது. அப்படியே முதியோர்கள் ஓய்வூதியம் வாங்கினாலும் அதற்கும் வருமான வரி செலுத்தவேண்டியிருக்கிறது.

முதியோர்களுக்கு ரயில், விமானத்தில் பயணம் செய்ய சலுகை வழங்கப்பட வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். முதியோர்கள் உயிரோடு இருக்கும் வரை மருத்துவக் காப்பீடு கொடுக்கப்படவேண்டும். அதற்கான பிரீமியத்தை அரசு செலுத்தவேண்டும். அனைத்து நகரங்களிலும் முதியோர் இல்லம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவேண்டும். வழக்குகளில் முதியோருக்கு முன்னுரிமை கொடுத்து முடிக்கவேண்டும்” என்று பேசியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.