சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதத்தை இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழி பேச எழுந்தபோது, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் கூச்சல் போடத்தொடங்கினர். அப்போது பேசிய கனிமொழி எம்.பி, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆனால், பா.ஜ.க அதை அரசியலாக்குகிறது. 1996-ம் ஆண்டு பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்தது.

கனிமொழி

அப்போதே கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை தி.மு.க ஆதரித்தது. அதன் பிறகு, வாஜ்பாய் தலைமையிலான அரசு செயல்பட்டபோது, இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. அப்போதும் மசோதா நிறைவேறவில்லை. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆதரித்து நான் பேசினேன். ஆனால், மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை. தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசுகிறேன். இந்த மசோதா குறித்து பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருக்கிறது.

எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கடமை பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. பா.ஜ.க 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது பிரதமருக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரும், 2017-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியிருக்கின்றனர். மகளிர் இட ஒத்துகீடு மசோதாவை நிறைவேற்றுமாறு கடிதம் எழுதியிருந்தனர். இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க சார்பில் டெல்லியில் பேரணியும் நடத்தினோம். அப்போதெல்லாம், ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டுவரப்படும் என்று பா.ஜ.க உறுதியாக கூறியது.

கனிமொழி

ஆனால், தற்போது எத்தகைய ஒருமித்தக் கருத்து ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இது தொடர்பாக எந்த விவாதமும் இதுவரை நடக்கவில்லை என்றே தெரிகிறது. நாடாளுமன்ற பணியாளர்களின் சீருடை ரகசியமாக மாற்றப்பட்டதுபோல, இந்த மசோதாவும் ரகசியமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பது குறித்து உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சூழலிலும் இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும், இந்த மசோதா, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் திட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது.

அப்படியானால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் இந்தச் சட்டம் அமலாகும் என்றால், அது எப்போது நடக்கும்… இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க கொண்டு வந்திருப்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண்கள் பிரதிநிதித்துவத்தைவிட நமது நாட்டின் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு.

கனிமொழி

ஆண் தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை நமது சமூகம் ஏற்கிறது. அதுவே ஒரு பெண் தனது தைரியத்தை வெளிப்படுத்தினால், அதை ஏற்க மறுக்கிறது. இந்து மதத்தின்மீது பா.ஜ.க மிகுந்த நம்பிக்கை கொண்ட கட்சி. உங்களிடம் நான் கேட்கிறேன். காளி தைரியான தெய்வம் இல்லையா… ஏன் பெண்கள் தைரியமானவர்களாக இருக்கக் கூடாது. பெண்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லையா… நமது நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தைரியமானவராக இருக்கவில்லையா… ஏன் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பெண் தலைவர்கள் தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கவில்லையா?

இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை அல்ல. இது சலுகை எனச் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது பெண்களுக்கான உரிமை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படுவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், பெரியார் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது… ‘பெண்களை மதிப்பதாகவும், பெண்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுவதுபோலவும் ஆண்கள்நடந்துகொள்வது, பெண்களை ஏமாற்ற ஆண்கள் செய்யும் தந்திரம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.