திருவாரூர் அருகே, ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால் அவர்களுடைய வீடுகளுக்கு வீட்டு வரி, குடி நீர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றியதுடன், தன் சொந்தப் பணத்தில் அந்த வரியை செலுத்தியிருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா கணேசன்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள 18 புதுக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திவ்யா (28). பி.இ பட்டதாரி. இவரின் கணவர் கணேசன் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு பெண், ஓர் ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 18 புதுக்குடி ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வந்துள்ளது.

தங்கள் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நினைத்த திவ்யா அதற்காகப் பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், `ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் வீட்டு வரி, குடி நீர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு

இது குறித்து திவ்யாவிடம் பேசினோம். “அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக ஆசிரியர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் பல விதமான செயல்களில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. பல ஊர்களில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசும் பல விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எங்கள் ஊராட்சியில் 400 வீடுகளுக்கு மேல் உள்ளது. ஆனாலும் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தது. ஊராட்சிக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று இருப்பதால் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே சேர்ப்பதும் தொடர்ந்தது.

அரசுப் பள்ளி

பல்வேறு கூட்டங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இது தொடர்பாக கவலை தெரிவித்தனர். நம் ஊர் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என் கணவர் கணேசன் என்னிடம் தெரிவித்தார். ஊராட்சியில் உள்ள குழந்தைகளுக்கு செலவே இல்லாமல் சிறப்பான கல்வியை வழங்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது.

இதையடுத்து நிகழ் கல்வி ஆண்டு தொடக்கத்தின்போதே தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் வீடு வீடாகச் சென்று, ’பிள்ளைகளை நம் ஊர் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்’ எனத் துண்டு பிரசுரம் கொடுத்தோம். 100 நாள் வேலை நடைபெறும் இடம், பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று இதை எடுத்துக் கூறினேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா கணேசன்

அப்போது, ’நம் ஊர் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பவர்களுக்கு வீட்டு வரி, குடி நீர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்று அறிவித்தேன். இரண்டு வரியும் சேர்த்து வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு 600 ரூபாய் வரும் என்பது. இந்த அறிவிப்பு ஊராட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தின்போதே 16 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். தனியார் பள்ளியில் படித்த மாணவர்களை கூட அழைத்து வந்து எங்கள் ஊராட்சி அரசுப் பள்ளியில் சேர்த்தனர். தற்போது 89 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வரும் வருடம் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

திவ்யா

வரிவிலக்குத் தொடர்பாக முறையாக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினேன். வரிப்பணத்தை ஊராட்சி மன்றமே செலுத்துவதற்கு அரசு விதியில் வழிமுறை இல்லாததால் 16 மாணவர்களுடைய வீடுகளுக்கு என் சொந்தப் பணத்தில் வீட்டு வரி, குடி நீர் வரி செலுத்தினேன். அனைத்து தரப்பு பெற்றோருக்கும் இவை சென்று சேர்கின்ற வகையில், கடந்த சுதந்திர தினத்தில் விழாவாக நடத்தி இதனை செயல்முறைப் படுத்தினேன்.

வரும் ஆண்டுகளிலும் நானே வரி செலுத்த இருக்கிறேன். அரசு, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இது போன்று வரி விலக்கு அளித்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரிய அளவில் அதிகரிக்கும். இதே போல் திருட்டை தடுப்பதற்காக என் சொந்த பணத்தில் ஊராட்சி முழுவதும் 55,000 ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறேன்’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.