ட்விட்டரில் நேற்றிரவு தேசிய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்தது சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட். ஆனால், அது ஆர்ப்பரிக்கும் அவரது இசைக்காக அல்ல. ஒற்றை நிகழ்ச்சி எப்படி உள்ளே இருந்தவர்களையும், வெளியே சாலையில் சென்றவர்களையும் ஒருசேர மொத்தமாகப் பாதித்தது என்பதற்காக. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் என்னவெல்லாம் தவறாகப் போக முடியுமோ, அது அனைத்துமே இந்த நிகழ்ச்சியில் நடந்தேறின. அப்படி என்னவெல்லாம் நடந்தது, எங்களது நேரடி அனுபவம் இங்கே…

Marakkuma Nenjam – Rahman Concert

டிராஃபிக்:

பொதுவாக சென்னையில் நந்தனம் YMCA கல்லூரி மைதானம், தீவுத்திடல், நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற இடங்களில்தான் இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும். இம்முறை, இந்த கான்சர்ட் சென்னைக் கிழக்குக் கடற்கரை சாலையில் (ECR) இருக்கும் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட இடங்களுக்கு புறநகர் ரயில், மெட்ரோ, பஸ் என போக்குவரத்து வசதிகள் அதிகம். ஆனால், நேற்று கான்சர்ட் நடந்த ஆதித்யாராம் பேலஸ் சிட்டியைச் சென்றடைய ஒரே முக்கிய வழி, ECR சாலை மட்டும்தான்.

Marakkuma Nenjam – Rahman Concert – ECR Traffic

இது அல்லாமல் கலைஞர் கருணாநிதி சாலையில் குறுகிய சாலைகள் மற்றும் மண் ரோடு மூலம் வரமுடியும் அவ்வளவே. இதனாலேயே மதியம் 3 மணி அளவிலேயே மொத்த ஈ.சி.ஆர் சாலையும் வாகனங்களால் ஸதம்பித்து போனது. வெறும் 7 கிலோமீட்டர் தொலைவில் சோழிங்கநல்லூரிலிருந்து புறப்பட்ட எங்களுக்கே உள்ளே சென்று சேர இரண்டரை மணிநேரம் ஆனது. சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் பற்றி யோசித்துப்பாருங்கள். இது அல்லாமல் அன்றாடம் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இங்கு சிக்கித்தவித்ததை பார்க்க முடிந்தது. அவசர வேலைகளுக்களுக்காக அந்தச் சாலையை அன்று பயன்படுத்தியவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்!

Marakkuma Nenjam – Rahman Concert – Route

இதுதான் கான்சர்ட்டுக்குச் செல்ல ஒரு பாதை என்றால் நம்ப முடிகிறதா?

பார்க்கிங்:

இந்த ட்ராபிக்கைக் கடப்பதே பெரும் சவாலாக இருந்ததால் வண்டிகளைக் கடற்கரைக்குச் செல்லும் தெருக்களிலும் சாலைகளின் ஓரங்களிலும்தான் பலரும் விட்டுச்சென்றனர். அப்படிதான் நாமும் நம் வாகனங்களை ஒரு தெருவில் விட்டுவிட்டு வந்தோம். அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து நிகழ்ச்சி நடக்கும் ஆதித்யராம் பேலஸ் சிட்டியை அடைந்தோம். அப்படிக் கேட்பாரற்று வண்டியை விடுவது பாதுகாப்பு இல்லை என நினைத்தவர்கள் பலரும் வராத அந்த யூ-டர்னைத் தேடி ECR சாலையில் பல கிலோமீட்டர்கள் பயணித்தனர்.

Marakkuma Nenjam – Rahman Concert – Route

எவ்வளவு தூரம் கழித்து போலீசார் யூ-டர்னுக்கு அனுமதித்தனர் என்பது அப்படிச் சென்றவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இவை எல்லாவற்றையும் கடந்து கான்சர்ட் இடத்தின் பார்க்கிங் வந்து சேர்ந்தவர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. சரியாகக் கவனிக்கப்படாத புல்வெலிகளுக்கு நடுவே சேறும் சகதியுமாக வண்டியை சிலர் விடவேண்டியதாக இருந்தது. இதற்கு பார்க்கிங் டோக்கனுக்கு வேறு தனியாக பணம் கட்டச்சொன்னார்கள். (அதற்கென டோக்கன் எல்லாம் பிரின்ட் செய்திருந்தார்கள். இந்த முனைப்பை விழா ஏற்பாட்டிலும் காட்டியிருக்கலாம்.)

என்ட்ரி:

ஆதித்யராம் பேலஸ் சிட்டிக்குள் நுழைந்தால், விழா எங்கு நடக்கிறது என்பதைத் தெரிவிக்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் பெரிதாக முயற்சி எதுவும் எடுத்ததாக இல்லை. என்ட்ரி எது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி நின்றனர். அதுவே பெரிய கூட்டநெரிசலை ஏற்படுத்தியது. கூட்டத்தைத் தவிர்க்க முன்பே கையில் மாட்டிக்கொள்ளக்கூடிய டேக் ஒன்றை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் பெற்றுக்கொள்ள சொல்லியிருந்தார்கள். ஆனால், அதை வாங்கியவர்களால் உடனே உள்ளே செல்ல முடிந்ததா என்றால் அதுவும் இல்லை.

Marakkuma Nenjam – Rahman Concert

ஆன் தி ஸ்பாட்டில் டேக் வாங்க வருபவர்களுக்குப் போடப்பட்ட வரிசைகள் அனைவரும் செல்லும் வழியை மறைப்பதாக இருந்தன. கூட்டநெரிசலில் உடமைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு, உடன் வந்த குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு உள்ளே செல்வது என்பதே அங்கு அனைவருக்கும் பெரும் போராட்டமாக இருந்தது. அந்த டேக்கையும் யாரும் சரியாக செக் செய்து உள்ளே அனுப்பவில்லை.

ஒரு வழியாக கோல்ட் பாஸ் என்ட்ரிக்கு வந்தால் நிற்பதற்கு கூட இடமில்லாத அளவு கூட்டம். இருக்கைகள் உண்டு என குறிப்பிடப்பட்டே டிக்கெட்கள் விற்கப்பட்டன. ஆனால், இருக்கைகள் இருக்கும் இடத்திற்கே பலராலும் செல்லமுடியவில்லை. மிகவும் முன்பாக வந்தவர்களால் மட்டுமே இருக்கைகளைக் கைப்பற்ற முடிந்திருந்தது. ‘சீக்கிரம் வந்திருந்தால் இடம் கிடைத்திருக்கும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முன்பே திட்டமிட வேண்டும்’ போன்ற வாதங்களை இணையத்தில் பார்க்க முடிகிறது. முன்பே வருபவர்கள் முன் வரிசை இருக்கைகளைப் பிடித்து தாமதமாக வருபவர்களை பின்வரிசைகளில் அமரவைப்பதெல்லாம் சரிதான். அதுதான் ‘First Come First Serve’ கணக்கு. இங்கே கோல்ட் பாஸ் ஏரியாவில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இருக்கைகளே இல்லை.

Marakkuma Nenjam – Rahman Concert

பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தவர்களுக்கே இருக்கைகள் இல்லை என்பது நிர்வாகத் தவறுதானே. அதை ஏற்றுக்கொள்ளவோ, மாற்றுவழிகள் செய்து தரவோ எந்த முயற்சியும் ஒருங்கிணைப்பாளர்களால் எடுக்கப்படவில்லை.

மாறாக, கேள்விகள் கேட்கும் ரசிகர்களைக் கடிந்து பேசுவது, மொத்தமாகக் கண்டுகொள்ளாமல் இருப்பது என அலட்சியத்தின் முழு உருவமாக நின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்களின் பாதுகாப்பைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி மொத்தமாக அங்கிருந்து வெளியேறவும் செய்தனர். சரியான டிக்கெட் வைத்திருந்தும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதெல்லாம் எத்தனை பெரிய துயரம்!

Marakkuma Nenjam – Rahman Concert

உள்ளே சென்றால், எந்தக் காற்றோட்டமும் இல்லாமல் கூட்டத்தில் புழுங்கி இசைமழைக்குப் பதில் வேர்வையில் நனைந்துகொண்டிருந்தது ரசிகர்கள் கூட்டம். இந்த நெரிசலில் சில பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர். குழந்தைகளுடன் அந்தக் கூட்டத்தில் அவதிப்பட்ட பெற்றோரின் வேதனையை நேரில் காண முடிந்தது. இடமில்லாமல் தவித்த அனைவருக்குமே மிகவும் கசப்பான அனுபவமாகவே அது இருந்திருக்கும்.

ஆடியோ:

மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘நெஞ்சே ஏழு’ இசை நிகழ்ச்சியில் உயர்தர சவுண்ட் சிஸ்டம்களுடன் அப்போதே அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார் ரஹ்மான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு YMCA-வில் நடந்த கான்சர்ட்டைப் பற்றிப் பேசியவர்களும் சவுண்ட் குவாலிட்டியைக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்கள். அதை நம்பிதான் நாங்களும் சென்றோம், ரஹ்மான் ரசிகர்களும் வந்தனர். இத்தனை கலவரங்கள் நடந்த பின்னும் நின்றுகொண்டாவது இனி ரஹ்மானின் இசையை ரசிக்கலாம் என மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். ஆனால், அந்த விஷயத்திலும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தமாக எங்கள் பகுதியில் இருந்ததே இரண்டு பெரிய ஸ்பீக்கர்கள்தான். அதுவும் சரியாக வேலை செய்யவில்லை. அங்கு ரஹ்மான் பாடிக்கொண்டிருக்க இங்கு ஸ்பீக்கரை ஒரு குழு பழுதுபார்த்துக்கொண்டிருந்தது.

Marakkuma Nenjam – Rahman Concert

அந்த ஸ்பீக்கர் சரியாக இருந்திருந்தாலுமே அங்கிருந்த கூட்டத்திற்கு அவை போதுமானதாக இருந்திருக்காது. வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு போன் பேசினாலே என்ன நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது என எதிர்புறத்தில் இருப்பவர்கள் கண்டுபிடித்து சொல்லிவிடுவார்கள். ஆனால், ரஹ்மான் கான்சர்ட்டில் இருந்துகொண்டு நண்பர்களிடம் பேசியபோது, நான் கான்சர்ட்டில் இருந்து பேசுகிறேன் என்பதையே அவர்கள் கண்டுபிடிக்க இல்லை. நான்தான் சொல்லவேண்டியதாக இருந்தது. அதுதான் அங்கிருந்த ஆடியோவின் நிலை. முன்பாக வந்து இருக்கைகளில் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களுமே கூட இந்த விஷயத்தில் ஒத்துப்போவார்கள்.

Marakkuma Nenjam – Rahman Concert

இதற்கு நடுவில் ரசிகர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் டிஸ்ப்ளேக்களும் அவ்வப்போது `நோ சிக்னல்’ என அனைவரையும் சோதித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் `இது சரிவராது’ என விரக்தியில் நாங்கள் வெளியேறினோம். பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து உள்ளே வருவதற்கு ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி இறுதியில் ஒன்றுமில்லை என்றால் யாருக்குத்தான் விரக்தி ஏற்படாது!

முக்கிய குறைகளே இத்தனை இருக்கின்றன. சின்ன சின்ன விஷயங்களைக் குறிப்பிட ஆரம்பித்தால் அவ்வளவுதான். கழிவறைகள் எங்கு இருந்தன என்றே கடைசி வரை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான குறியீடுகளோ, பலகைகளோ எங்கும் வைக்கப்படவில்லை. குடிநீருக்கும் அதே கதைதான்.

இந்த மொத்த இன்னல்களுக்குக்கும் தாமே பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். ஆறு மணிநேரம் பெரும் சித்ரவதையை அனுபவித்த ரசிகர்கள் சார்பாக அவரிடமும் ஏற்பாட்டாளர்களிடமும் கேட்பதற்கு எங்களிடம் இருக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.

– எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் வந்துவிட்டதால்தான் இந்த நிலை என்கிறார்கள். ரஹ்மான் ஆங்கில நாளிதழுக்குக் கொடுத்த பேட்டியில் `எதிர்பார்க்காத நேரத்தில் வந்த புயல் போல’ என இதைக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட அளவில் டிக்கெட்கள் விற்கப்படும் நிகழ்ச்சி ஒன்றுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்கள் எப்படி வரமுடியும்? டிக்கெட் இல்லாதவர்களை அனுமதித்துவிட்டோம் என இந்த கான்சர்ட்டை நடத்திய ஏ.சி.டி.சி ஈவென்ட்ஸ் நிறுவனம் ஒப்புக்கொள்வதாக இதை எடுத்துக்கொள்வதா? அதுவும் நிர்வாகத் தோல்விதானே? இல்லை ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கைகளைவிட அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

– ஆகஸ்ட் 12-ம் தேதி நடப்பதாக இருந்து தள்ளிவைக்கப்பட்ட இந்த கான்சர்ட்டின் டிக்கெட்டை ரத்துசெய்ய முடியாது என அறிவித்திருந்தது ஏ.சி.டி.சி ஈவென்ட்ஸ். அப்படியிருக்கையில், கடைசிநாள் வரை புதியதாக டிக்கெட்களை விற்பனை செய்வதாக அறிவித்தது எப்படி? ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு விற்கப்பட்டதை விட அதிக டிக்கெட்கள் விற்கப்பட்டதாகதானே இதைப் புரிந்துகொள்ளமுடியும். மழையால் ரத்தானபோது ஏற்பட்ட செலவினங்களை ஈடுகட்ட எடுக்கப்பட்ட முயற்சியா இது? அப்போதே ஹவுஸ்புல்லாகி கவுன்டர் கிளோஸ் செய்யப்பட்ட ஒரு ஷோவுக்கு மீண்டும் டிக்கெட்கள் திறக்கப்பட்டது என்றால், அதற்கான ஏற்பாடுகளைச் சரியாக செய்திருக்க வேண்டாமா?

முந்தைய தினம் மீண்டும் திறக்கப்பட்ட டிக்கெட்ஸ்!

– ஆகஸ்ட் 12-ம் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதே ரசிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், மழையின் மீது பழியைப் போட்டுவிட்டு நகர்ந்துசென்றனர். அன்றே ECR, OMR சாலைகள் ஸ்தம்பித்து முடங்கி நின்றன. தற்போது முழு அளவில் அனைவரும் வரும்போது அதேதான் நடக்கும் என்பதை விழா ஏற்பாட்டாளர்களாலும் காவல்துறையாலும் கணிக்கமுடியாதா? அதற்கான முன்னெச்சரிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டன?

– ஆகஸ்ட் 20-ம் தேதி கோயம்புத்தூரில் இதே குழுவினரால் இதே பெயரில் கான்சர்ட் நடத்தப்பட்டது. அங்கும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அதிலிருந்து ஒரு பாடம் கூடவா கற்கவில்லை இந்த நிர்வாகம்?

– கிட்டத்தட்ட கோல்ட் பிரிவில் மட்டும் 10,000-க்கும் அதிகமான ரசிகர்கள் இருந்திருப்போம். ஆனால், மொத்தமாக உள்ளே செல்லும் வழி இரண்டுதான். இத்தனை பெரிய கூட்டத்தை மொத்தமாக அனுப்பினால் தள்ளுமுள்ளு ஏற்படும் என்பது கூட புரியாமலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்வார்கள்? துணைப்பிரிவுகளுடன் முறையாக ஒவ்வொருவரையும் உள்ளே அனுப்பியிருந்தால் பல இன்னல்களைக் குறைந்திருக்க முடியும்தானே?

இப்படி இன்னும் கேட்டுக்கொண்டே போகலாம். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தேவை என ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை வைத்தாலும் ஏற்பாடுகளில் காட்டப்பட்ட அலட்சியமும் கையாளமுடியாத அளவு டிக்கெட்கள் விற்கப்பட்டதுமேதான் முக்கியக் காரணங்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு முந்தைய நாளில் நடைபெற்ற விஜய் ஆண்டனி கான்சர்ட்டில் இப்படி எதுவும் இன்னல்கள் ஏற்பட்டதாகப் பெரிய புகார்கள் எழவில்லையே!

ஏ.ஆர்.ரஹ்மான்

46,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையை ரஹ்மானே பேட்டியில் குறிப்பிடவும் செய்கிறார். கான்சர்ட் நடந்த இடத்தை இன்று கள ஆய்வு செய்த தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் ஐபிஎஸ், சுமார் 25,000 பேருக்கான ஏற்பாடுகளே செய்யப்பட்டதாகவும், ஆனால் 40,000-க்கும் அதிகமான பேர் வந்ததாகவும் கூறுகிறார். பார்க்கிங் மற்றும் பிற வசதிகள் குறித்தும் முழுவதுமாக ஏற்பாட்டாளர்களிடம் விசாரிக்கப்பட்டும் எனவும் கூறியிருக்கிறார். ஏற்கனவே ACTC நிறுவனத்தின் ஹேம்நாத் உள்ளிட்ட மூவர் நேரில் ஆஜராக வேண்டும் என கானாத்தூர் காவல் ஆய்வாளர் சதீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறை விசாரணைக்குப் பிறகு எங்கெல்லாம் குளறுபிடிகள் நடந்தன என்பது இன்னும் தெளிவாக தெரியவரலாம்.

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இதுபோன்ற விழாக்களை நடத்தும் ஏற்பாட்டாளர்களின் அலட்சிய போக்கைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை. வருங்காலத்தில் அசாம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க இதை கட்டாயம் செய்தாக வேண்டும். மேலும், தன்னை நம்பி வரும் ரசிகர்களின் நலன் மீது பிரபலங்கள் இன்னும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மறக்கமுடியாத நினைவைத் தருகிறோம் என்று சொல்லி, என்றும் அவர்கள் நினைவிலிருந்து அழிக்கமுடியாத கசப்பான நினைவை விதைத்துவிடக்கூடாது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.