கரூரைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரிப் பெண் பிரியங்கா, துருக்கியைச் சேர்ந்த தன் காதலரை, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. பி.டெக் படித்துள்ள இவர், தற்போது டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். டெல்லியில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஹமத் ஜெமில் கயான் என்பவருடன், பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர், டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வருகின்றார்.

பிரியங்கா – அஹமத் ஜெமில் கயான்

நண்பர்களாக அறிமுகமாகிய இவர்கள், கடந்த 6 மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று கரூரில் உள்ள பிரியங்கா வீட்டில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

காதல் பயணம் குறித்து பிரியங்காவிடம் பேசினோம். “நாங்க ரெண்டு பேரும் முதன்முதலாக டெல்லியில் சந்திச்சோம். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இவரை தெரியும். ட்ராவல் பண்ணும்போதுதான், இவரை சந்திச்சேன். ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஸா பழகினோம். அப்புறம், ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான், புரொப்போஸ் பண்ணிக்கிட்டோம்.

அதுக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் எங்களோட வீட்டுல பேசினோம். அவங்க வீட்டுல பத்து நிமிஷத்துல ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம், வீடியோ கால் பண்ணிப் பேசினோம். எங்க வீட்டுல ஒரு வாரம் கழிச்சு ஒத்துக்கிட்டாங்க. இவரை கரூருக்கு கூட்டிட்டு வந்து, எங்க ஃபேமிலிகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சேன். இவரை எங்க வீட்டுல எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சுபோச்ச்சு. நாடு, மொழி, மதம்னு வேறுபாடு இருந்தாலும், எங்க ரெண்டு பேரையும் புரிஞ்சிக்கிட்டு சம்மதம் தெரிவிச்சிட்டாங்க. இப்போ மொழிதான் பிரச்னையா இருக்கு. நான் துருக்கி மொழி கத்துக்கிட்டு இருக்கேன். அவர், தமிழ் கத்துக்கிட்டு இருக்கார். இன்னும் ஆறு மாசத்துல முழுசா பேச ஆரம்பிச்சிடுவோம். அவரை தமிழ் பேச வெச்சிடுவோம்’’ என்று சிரித்தவர்,

நேரில் வாழ்த்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

’’நான் சொல்றத, அவர் அவங்க குடும்பத்துக்கிட்ட ட்ரான்ஸ்லேட் பண்ணிச் சொல்லுவாரு. நானும் அப்படித்தான் எங்க குடும்பத்துக்கிட்ட சொல்லுவேன். எங்க ரெண்டு குடும்பத்துக்கும், ஒருத்தவங்க பேசுறது மத்தவங்களுக்குப் புரியாது. ஆனா, மொழி தாண்டி கொஞ்சம் கொஞ்சமா மனுஷங்களை புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” எனப் பூரிப்புடன் பேசினார் பிரியங்கா.

வாழ்த்துகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.