விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகாவுக்குட்பட்டது சிவலிங்காபுரம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்வழி, ஆங்கில வழி‌ என இரண்டு பாடப்பிரிவுகளைக்கொண்ட இந்தப் பள்ளியில் சிவலிங்கபுரம், நரிக்குளம், மேட்டு வடகரை, வடகரை, தென்கரை, அருணாசலபுரம், கோவிலூர், பெத்தலேகம், வலையபட்டி. மேலான்மறை நாடு உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக பள்ளிக்குச் சரியான சாலை வசதி இல்லை, பேருந்து நிழற்குடை இல்லை என பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.

மாரிமுத்து

இது குறித்து மாரிமுத்து நம்மிடம் பேசுகையில், “சிவலிங்காபுரம்-ராஜபாளையம் சாலையிலுள்ள இந்த அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் நான். எனக்கு தெரிந்து அப்போதிருந்து, இப்போது வரையிலும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தப்பாடில்லை‌. மழையோ, வெயிலோ அதன் தாக்கத்திலிருந்து சற்று இளைப்பாறிவிட்டு ஏறிச் செல்வதற்கு மாணவ-மாணவிகளுக்கு அங்கு பேருந்து நிழற்குடை இல்லை. இதனால் மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வெட்டவெளியில் நின்றுதான் பஸ் ஏறிச் செல்லவேண்டிய நிலை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இங்கு பேருந்து நிழற்குடை இருந்தது. ஆனால், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்திவிட்டனர்.

அதன் பிறகு, மாணவ மாணவிகள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும். பள்ளிக்குச் செல்ல சாலை வசதியை செய்து தர வேண்டும் என பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ நிதியும்கூட இதற்காக ஒதுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆகவே, எது உண்மையென்று எங்களுக்குத் தெரியவில்லை.

கொட்டும் மழை

இது ஒருபுறம் இருக்க நேற்று இடைவிடாது பெய்த கனமழையில் நனைந்தபடி பேருந்துக்காக சுமார் 20 நிமிடங்கள் மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் காத்திருந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இந்தநிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வளவு போராடினோம். ஆனாலும் அதிகாரிகள் மெத்தனத்தாலும் அலட்சியத்தாலும் மாணவ மாணவிகள் நேற்று மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அதேபோல அருணாசலபுரம், கோவிலூர் பெத்தலேகம், வலையப்பட்டி மேலான்மறை நாடு உள்ளிட்ட ஊர்களுக்கு பள்ளி நேரங்களில் மாணவர்கள் சென்றுவர பேருந்து வசதி இல்லை. இந்த ஊரைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே நரிக்குளத்தில் வந்துதான் பள்ளிக்குச் சென்றுவர வேண்டும். ஆகவே, இனிமேலாவது தாமதிக்காமல் கோரிக்கைகளை நிறைவேற்றி மாணவ மாணவிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

வெம்பக்கோட்டை தாசில்தார், “சிவலிங்காபுரத்தில் மாணவ மாணவிகளுக்கு பேருந்து நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது உண்மைதான். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. கோரிக்கை மனுக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவர்தான் இந்த விஷயத்தைப் பின்தொடர்ந்து நிறைவேற்றித் தர முடியும்” என கைகாட்டிவிட்டு முடித்துக்கொண்டார்.

வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசியதற்கு, “இப்போதுதான் புதிதாக இந்த இடத்துக்குப் பணிக்கு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் சொல்லும் விஷயம் பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. எனவே, நேரடியாக இடத்துக்குச் சென்று கள ஆய்வு செய்துவிட்டு உங்களுக்குச் சரியான பதில் தருகிறேன்” என முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், சிவலிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதியிடம் பேசுகையில், “பேருந்து நிழற்குடை பிரச்னை நீண்ட காலமாகவே இருக்கிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் இருக்கிறது. ஏனென்றால் ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த நிழற்குடை நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருக்கிறது எனக் கூறி இடித்து அகற்றப்பட்டதன் காரணமாகப் புதிதாக எந்தக் கட்டுமானமும் அங்கு கட்ட முடியவில்லை. சரி, அந்த இடத்தை விட்டு சற்றுத்தள்ளி நிழற்குடை கட்டலாமென்றால், பட்டா நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மாணவ-மாணவிகள்

எனவே, எதிர்ப்பாளர்களைச் சமாதானம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு இவ்வளவு நாளும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது நீதிமன்ற விசாரணையில், மாணவ மாணவிகளுக்கு நிழற்குடை அமைத்து தருவதற்கும் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தவும் ஆவண செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பேருந்து நிழற்குடை அமைப்பதில் பிரச்னை வராமல் இருப்பதற்கு பட்டா நில உரிமையாளர்களிடம் பேசி தீர்வு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறையின் பாதுகாப்பைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி விரைவில் வேலை தொடங்கப்படும் என நினைக்கிறேன்” என உத்தேசமாக பதிலளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.