தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடும் நிலையில் சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்) என்ற இளைஞன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுகிறார். அதே மருத்துவமனையில் சுவாதியும் (அம்மு அபிராமி) தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அனுமதிக்கப்படுகிறார். இருவரும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் இம்முடிவினை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்செயலாக நடந்த இவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து எத்தகைய நிகழ்வுகளுக்கு எடுத்துச் செல்கிறது என்பது ஒரு கதை.

Vaan Moondru Review

அடுத்து காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோஷுவா (வினோத் கிஷன்) – ஜோதி (அபிராமி வெங்கடாசலம்) இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றன. அங்கு ஜோதிக்கு மூளைப் பக்கவாத நோய் ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது. நோயின் விளைவாக உடலில் ஒவ்வொரு பாகங்களாகச் செயலிழக்கும் என்ற நிலை. இந்நிலையில் தங்களது காதல் திருமணத்தால் பிரிந்த தனது தந்தையைப் பார்க்க விரும்புகிறார் ஜோதி. இந்த கையறு நிலையை இருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது இரண்டாவது கதை.

Vaan Moondru Review

இறுதியாக 40 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவி சித்ராவுக்கு (லீலா தாம்சன்) இதய கோளாறு ஏற்படுவதை அறிகிறார் கணவர் சிவம் (டெல்லி கணேஷ்). அதைச் சரி செய்ய 7 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தைத் திரட்ட அவர் என்ன செய்கிறார் என்பதுதான் மூன்றாவது கதை.

இப்படி வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த மூன்று ஜோடிகளின் காதல் கதைகளைத் தத்துவமாக, கவித்துவமாகச் சொல்ல முற்பட்டு இருக்கிறது ஆஹா தமிழ் ஓ.டி.டி-யில் வெளியாகியிருக்கும் இந்த `வான் மூன்று’ ஆந்தாலஜி சினிமா!

தன் வாழ்க்கைத் துணையை இழக்கப் போகிறோம் என்ற வேதனையையும், பெற்ற பிள்ளையினால் ஏற்படும் ஏமாற்றங்களையும் தேர்ந்த நடிப்பினால் கடத்தியிருக்கிறார் டெல்லி கணேஷ். கனமான இந்தக் கதாபாத்திரத்துக்கு இணையான ஒரு நடிப்பினைத் தந்திருக்கிறார் இவருக்கு ஜோடியாக நடித்துள்ள லீலா தாம்சன். காதலுக்கான கெமிஸ்ட்ரியை சரியான மீட்டரில் இயல்பாகத் தந்திருக்கிறார்கள் இருவரும். ஆனால், மற்ற இரண்டு ஜோடிகளிடமும் இந்த கெமிஸ்ட்ரி எங்குத் தேடியும் காணவில்லை.

Vaan Moondru Review

மிகவும் முதிர்ச்சியோடு அணுக வேண்டிய பாத்திரத்தில் வினோத் கிஷனிடம் செயற்கைத்தனமான நடிப்பே வெளிவருகிறது. அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். மற்றொரு நாயகனாக வரும் ‘96’ ஆதித்யா பாஸ்கருக்கு, நடிகராக இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது.

படம் ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு ஜோடிகளுக்கான பிரச்னைகளை மெதுவாகச் சொல்லி நகர்கிறது திரைக்கதை. அதில் சுவாரஸ்யமே இல்லாமல் எளிதில் கணிக்கக்கூடிய காட்சிகளே மேலோங்கி இருக்கின்றன. வெறும் ஆறு கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையில், அக்கதாபாத்திரங்களே தட்டையாக எழுதப்பட்டு இருப்பது படத்தின் பெரிய பலவீனம்.

Vaan Moondru Review

மெலோ டிராமா வகையான படங்களின் பலமே யதார்த்தமான வசனங்கள்தான். அது எத்தனை ஆழமாக இருக்கிறது என்பதை பொறுத்துத்தான் காட்சிகளின் தாக்கமும் இருக்கும். ஆனால் இப்படத்தில் வருகிற அனைத்து பாத்திரங்களும் ஏதோ தத்துவப் புத்தகத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒப்பிக்கும் உணர்வினையே தருகின்றனர். போகப் போகத் தத்துவ ஊசிகளின் டோஸ் அதிகமாக அயர்ச்சியே ஏற்படுகிறது.

அறைக்கு வெளியில் எடுக்கப்பட்ட இயற்கையான காட்சிகளில் சிறப்பாக ஒளிப்பதிவினைக் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ். இருப்பினும் அறைக்குள் முழுமையில்லாத கோணங்கள், உண்மைத்தன்மையைக் குறைக்கும் பச்சைநிற லைட்டிங் எனச் சற்று சறுக்கியுள்ளார். எடுக்கப்பட்ட மூன்று கதைகளைச் சிறப்பாகக் கோர்க்க முயற்சி செய்துள்ளார் படத்தொகுப்பாளர் அஜே மனோஜ். இருப்பினும் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு மாறும் உணர்ச்சி மாற்றங்களைக் கண்டுபிடித்து கத்திரி போட்டுத் தைக்கும் இடத்தினைத் தவறவிட்டுள்ளார்.

Vaan Moondru Review

பாடல்கள் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் ‘பீல் குட்’ இசைக்கான முயற்சியினை ‘ஆர் 2 ப்ரோஸ்; கூட்டணி செய்துள்ளது. முழுக்க முழுக்க மருத்துவமனையையே சுற்றி நடக்கும் கதைக்களத்தில், கலை இயக்கத்தில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் மருத்துவமனை என்ற உணர்வைத் தராமல் தங்கும் விடுதி போன்ற தோற்றமே உண்டாகிறது.

எடுக்கப்பட்ட மூன்று கதைகளுமே மனிதர்களின் வலியையும், வேதனையையும் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு கதைகளையும் ‘அகம் புறம்’ என்று ஆராய அத்தனை விஷயங்கள் நிரம்பி இருக்கின்றன. அப்படி இருக்கையில் மூன்று கதைகளையும் ஒரே படத்தில் பேச நினைத்ததால் மேலோட்டமாகவே திரைக்கதையைக் கையாண்டுள்ளார் அறிமுக இயக்குநர் ஏ.எம்.ஆர்.முருகேஷ். அதனால் கதாபாத்திரங்களின் அவஸ்தைகள் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்தப்படவில்லை. இதனால் படத்தோடு ஒன்றி பயணிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

Vaan Moondru Review

மொத்தத்தில் நல்லதொரு திரைக்கதை அமைத்து நம் உணர்வுகளைக் கிளறும் வாய்ப்பை உள்ளடக்கிய கதைகள் இருந்தும் அதனைப் புதுப்பித்து எழுதத் தவறியதாலும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைச் சரியாகக் கடத்தத் தவறியதாலும் இந்த `வான் மூன்று’ நட்சத்திரங்களற்ற பகல் வானமாக வெக்கையை மட்டுமே வீசுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.