ஜூன் மாதம் 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் சீரானதும் புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறையில் இருந்த அவரை தற்போது சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டிருப்பதே தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்.

செந்தில் பாலாஜி

விசாரிக்கப்பட்ட செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கடும் சட்ட போராட்டங்களை நடத்தி, ஒருவழியாக அமைச்சரை 5 நாள் காவலில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 7-ம் தேதி உத்தரவு பிறபித்தவுடன் புழல் சிறைக்கு ஓடோடி வந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

மாலை 6 மணிக்கு அதிகாரிகள் குழுவினர் புழல் சிறை வளாகத்துக்குள் நுழைந்தனர். 7.45 மணிக்கு கூடுதல் அதிகாரிகள் உள்ளே செல்லவே.. இரவு 8 மணிக்கெல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினரின் வாகனத்தில் ஏற்றி இருபக்கமும் போலீஸாரை அமர வைத்து 9 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர். அன்றிரவே விசாரணை தொடங்கிய நிலையில் நள்ளிரவு வரை விசாரணை நீண்டதாகவும் தெரிகிறது.

அதிரடித்த ரெய்டுகள்… அடுக்கடுக்காய் கேள்விகள்!

கடந்த மே 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி அமைச்சரின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின் ஆகஸ்ட் 5-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு கணக்கில் வராத பணமும் முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும், அரசுப்பணிக்கு ஆணை வழங்க பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்கிறது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

5 நாட்களும் இங்கதான்!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கவிருக்கிறது அமலாக்கத்துறை. அங்கேயே அவருக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவேளை செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலோ… விசாரணையை 5 நாள்களுக்குள் முடிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை காலத்தை நீட்டிக்க கோரி மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுக வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் தெரிவிக்கும் பதில்களை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவரும். அவரிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளை இந்த 5 நாட்களில் முன்வைக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

தொடரும் ED-யின் ஆட்டம்!

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “விசாரணையின்போது செந்தில் பாலாஜி அளிக்கும் வாக்குமூலங்களை பொறுத்தே அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னவென்பது முடிவாகும். குறிப்பாக அமைச்சரின் தம்பி அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் குறிவைத்திருக்கிறார்கள். ஏற்கனவே 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அசோக் குமார் தற்போது உடல்நிலையை காரணம் காட்டி ஆஜராகாமல் இருக்கிறார். அவரை கைது செய்வதற்காக வேலைகளில் அமலாக்கத்துறையினர் குதித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி – அசோக்

அதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜியின் பினாமிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிலரையும், அவரின் பணப்பரிவர்த்தனை பார்த்துக் கொண்டவர்கள் சிலரையும் தனது ரேடாருக்குள் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டது அமலாக்கத்துறை. குறிப்பாக செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் சங்கர், பிரகாஷ் ஆகியோரையும் அமலாக்கத்துறை விட்டுவிடவில்லை. அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி அதிரடித்துள்ளது அமலாக்கத்துறை.

செந்தில் பாலாஜி விவகாரம் மட்டுமல்ல, ஏற்கனவே அமைச்சர் பொன்முடியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கும் அமலாக்கத்துறை தயாராக இருக்கிறது. மேலும் 11 தி.மு.க அமைச்சர்களையும் தனது லிஸ்ட்டில் வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. அவர்கள் தொடர்புடைய வழக்குகளில் மூக்கை நுழைக்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டனர். குறிப்பிட்ட 11 தி.மு.க அமைச்சர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அமலாக்கத்துறை நெருங்கினாலும் ஆச்சரியத்துக்கு இடமில்லை” என்கிறார்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.