Doctor Vikatan: என் முதல் பெண் குழந்தைக்கு 6 வயது. அடுத்த பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது. இருவருக்கும் அடிக்கடி வயிறு சரியின்றி போகிறது. வயிற்றுப்போக்கும் வாந்தியும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம்? தடுக்க முடியுமா?

Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

மருத்துவர் சஃபி

பொதுவாக 8 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டை பிரச்னையும், வயிறு தொடர்பான குடல் அழற்சி பிரச்னையும் (Enteritis ) சகஜமாக பாதிக்கலாம்.

இந்த இரண்டு பிரச்னைகளுக்குமே முக்கிய காரணம் கை சுகாதாரமின்மைதான். அந்த வகையில் உங்கள் இரு குழந்தைகளும் கை சுகாதாரத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்று பாருங்கள். அது மட்டுமன்றி, குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறவரின் கை சுகாதாரமும் ரொம்பவே முக்கியம்.

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டியது குழந்தைகள் குடிக்கும் தண்ணீர். எந்தத் தண்ணீரைக் குடிக்கிறார்கள், அது எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது, கொதிக்கவைக்கப்பட்டதா, இரு குழந்தைகளும் ஒரே டம்ளரில் தண்ணீர் குடிக்கிறார்களா, அவர்கள் குடிக்கும் தண்ணீர் டம்ளரின் உள்ளே கை வைத்துப் பரிமாறப்படுகிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலும் சுத்தமில்லாத தண்ணீரின் மூலம்தான் இப்படிப்பட்ட பிரச்னைகள் அதிக அளவிலும் அடிக்கடியும் பாதிக்கும். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்.

இவை தவிர இன்னொரு காரணமும் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கு அருகில் டைபாய்டு பாதித்த நபர் யாரேனும் இருக்கிறாரா என்று பாருங்கள். அந்த நபர் டைபாய்டு கிருமியைச் சுமக்கும் கேரியராக இருந்தாலும் அவரின் அருகில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற இன்ஃபெக்ஷன் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், சமைக்கும் விதம், பரிமாறும் விதம் என எல்லாவற்றிலும் அதிகபட்ச சுத்தமும் சுகாதாரமும் பின்பற்றப்பட வேண்டும். கேன் வாட்டர்தான் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் அதையும் காய்ச்சியே கொடுக்க வேண்டும்.

கை கழுவுதல்

இவற்றை எல்லாம் செய்தும் உங்கள் குழந்தைகளின் பிரச்னை சரியாகவில்லை என்றால் ரத்தம் மற்றும் மலத்தில் கல்ச்சர் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது அவசியம். குழந்தைகள்நல மருத்துவரை அணுகினால் அவரே இது குறித்து உங்களுக்கு ஆலோசனைகள் சொல்வார்.

வயிற்றிலுள்ள பூச்சிகளை நீக்க ‘டீவேர்ம்’ செய்திருக்கிறீர்களா என்று பாருங்கள். மலப் பரிசோதனையின் முடிவுகளை வைத்தும் டீவேர்ம் செய்வது குறித்து மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். மற்றபடி இது பயப்பட வேண்டிய அளவுக்கு சீரியஸான பிரச்னை அல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.