திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 ஊராட்சிகளில், அடுத்து வரக்கூடிய சில ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் 10,000 பனைவிதைகளை விதைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒரு திட்டத்தை வகுத்து, மாவட்ட அளவிலான `பனை விதை வங்கி’ என்ற அமைப்பை உருவாக்கினார். இந்தத் திட்டத்தின்கீழ் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களையும் இணைத்து, ஒவ்வோர் ஒன்றியத்திலும் `பனைவிதை வங்கி’ மூலம், அதிலுள்ள ஊராட்சிகளில் சேகரிக்கப்படக்கூடிய பனைவிதைகளைப் பாதுகாத்து வைத்து, பின்னர் அவற்றைத் தேவைப்படும் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட ஒன்றியங்களில் அதிக அளவில் பனை மரங்கள் இருப்பதால், அந்த ஒன்றியங்களில் பனைவிதைகளைச் சேகரித்து, மாவட்டத்தில் பனை மரங்கள் இல்லாத ஊராட்சிகளுக்கு அந்தப் பனைவிதைகளைக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸின் திட்டப்படி, இந்தப் பனை விதை வங்கி, தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும்.

அதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 526 ஊராட்சிகளிலும் 2,000 பனைவிதைகள் விதைத்தால், 5 ஆண்டுகளில் 10,000 விதைகள் விதைக்கப்படும். அந்த விதைகளில் குறைந்தபட்சம் 5,000 செடிகளாவது வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் மாவட்ட ஆட்சியரும், பனைவிதை வங்கிக் குழுவினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

பனைவிதை சேகரிப்பு
பனைவிதை சேகரிப்பு
பனைவிதை சேகரிப்பு
பனைவிதை சேகரிப்பு
பனைவிதை சேகரிப்பு

இந்தப் பனைவிதை வங்கியானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, பனைவிதைகள் சேகரிப்பு மற்றும் நடவு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிலையில், பனை விதை வங்கியின் இரண்டாம் ஆண்டு பணிகளைக் கடந்த ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே மாவட்ட ஆட்சியர் தொடங்கிவிட்டார். முதற்கட்டமாக, அப்போதைய மாவட்டக் கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குநருமான ரிஷப்பின் மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலும், கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிவரை, பனைவிதை வங்கியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் பாலகிருஷ்ணன், கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து, ஒன்றிய அளவில் செயல்படும் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள், பணிதள பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், அனைத்து ஊராட்சிகளிலும் பனைவிதை சேகரிப்பு, விநியோகிப்பு மற்றும் விதைப்பு பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், “தற்போது, பனைமரங்கள் அதிகமுள்ள ஊராட்சிகளில் பனைவிதைகளைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வோர் ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 5,000 பனை மரங்கள் இருக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புற மக்கள் பனை சார்ந்த தொழில்கள் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்.

கூட்டம்
கூட்டம்
கூட்டம்
கூட்டம்

மாவட்ட நிர்வாகத்தின் இந்த முன்னெடுப்பு மற்றும் ஒத்துழைப்பின் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டம், பனைத்தொழிலில் சிறந்த மாவட்டமாக விளங்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் திட்டம் பிற மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு, பனைத்தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.