சென்னை ஐஐடியின் வேதியல் துறை பேராசிரியர் ப்ரதீப் தலப்பிள், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வழிகாட்டியுள்ளார். இத்தனை ஆண்டுக்கால சிறந்த பணிக்குப் பத்ம ஸ்ரீ விருதையும் வாங்கியுள்ளார். பிரதீப் தலப்பிள் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் செய்த சிறப்பான பணிகளுக்காக மத்திய அரசு அவருக்குப் பத்ம ஸ்ரீ விருதை 2020ல் அளித்துள்ளது.

ப்ரதீப் தலப்பிள்

தண்ணீரிலுள்ள பூச்சிக்கொல்லிகளை நானோகெமிஸ்ட்ரி முறையில் அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் இவர். இதன் தொடர்ச்சியாக, தண்ணீரிலுள்ள ஆர்செனிக், யுரேனியம் மற்றும் பல நச்சுப் பொருள்களை அழிக்க அவரும் அவரது குழுவும் ‘Water Positive’ பொருள்களை உருவாக்கினர். இந்தத் தொழில்நுட்பம் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பல கோடி மக்களுக்கு உதவி வருகிறது.

இந்த வெற்றிகரமான ஆராய்ச்சிக்காக, பேராசிரியர் பிரதீப்புக்குச் சர்வதேச உயரிய விருதான இத்தாலியின் ENI விருது வழங்கப்பட உள்ளது. எனி விருது, உலகளவில் மிகவும் மதிப்பிற்குரிய விருதாகக் கருதப்படுகிறது. அறிவியலில் மிகவும் தரமான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும், தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவர்களுக்கும் மட்டுமே இந்த விருது வழங்கப்படும். நோபல் பரிசு பெற்றவர்களை உள்ளடக்கிய தேர்வுக் குழு இதற்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. CNN, இவரின் தொழில்நுட்பத்தை உலகத்தையே மாற்றக்கூடிய தொழில்நுட்பங்களில் ஒன்றாகத் தேர்வு செய்தது.

ENI விருது

”நான் கேரளாவில் தினமும் நான்கு கிமீ நடந்து பள்ளிக்குச் செல்வேன். முப்பது ஆண்டுகளாக சென்னை ஐஐடியில் பணியாற்றி வருகிறேன். நீர் சம்பந்தமான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளேன். நீர் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. நீரின் தன்மையை வைத்து, அந்த நகரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை, பொருளாதாரத்தை, மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படக்கூடிய உடல்நிலை பாதிப்புகள் வரை கண்டுபிடிக்க முடியும். இந்தத் துறையில் பெயர், புகழ், பணத்தைத் தாண்டி உண்மையான மன நிம்மதியையும் பெற முடியும்” என்றார்.

விரைவில் இத்தாலியின் அதிபரிடமிருந்து விருது பெற இருக்கும் பேராசிரியர் ப்ரதீப் தலப்பிளுக்கு வாழ்த்துகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.