அன்றைய தினம் சென்னைப் பல்கலைக்கழக வளாகம், எல்லா நாள்களையும் போல் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அவசர அவசரமாக வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களும் வகுப்புக்குத் தேவையான குறிப்பேடுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சில மாணவர்கள் மட்டும், கூட்டமாக மடிக்கணினிகளில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும் மாணவர்களை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். பத்திரிகையாளர்கள் படம் பிடிக்கும் அளவுக்கு, அந்த மாணவர்கள் என்ன செய்தார்கள்?

சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி வெளியிட்ட குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்ததே இந்த கவன ஈர்ப்புக்கு காரணம். இதென்ன பெரிய சாதனையா? ஆமாம். இன்றைய இந்தியாவில் இந்தச் செயல் நிச்சயம் சவாலான காரியம்தான்.

கவனம் ஈர்த்த மாணவர் கூட்டத்தை வழிநடத்தியவர் ஓர் இளம் பெண். அவரைச் சுற்றி அனைத்து மீடியா கேமராக்களும் சூழ்ந்தன. அவர் முகத்தில் அச்சமும் பதற்றமும் துளியும் இல்லை. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் அரசின் மீதுள்ள கோபத்தை, மீடியா முன் அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்திய அந்த இளம் பெண்ணின் பெயர் மிருதுளா. நீட் போராட்டம், தேசியக்கல்விக் கொள்கை போராட்டம், விவசாயிகள் போராட்டம் என மிருதுளாவின் போராட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவள் விகடனின், போராட்டக் களத்தில் பெண்கள் என்ற இத்தொடரின் முதல் களப் போராளி மிருதுளாவை சந்திப்போமா….

மிருதுளா

மிருதுளா, பிறந்து வளர்ந்தது எல்லாமே வட சென்னை திரு.வி.க நகர். ஆறாவது படித்து முடிக்கும் வரை அங்கேயே வாழ்ந்து வந்துள்ள மிருதுளா, குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வீடும் பள்ளியும் மாற வேண்டிய சூழல். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நடத்திய பள்ளியில் படித்தபோதுதான், சமூக அக்கறையும் அரசியல் பார்வையும் மிருதுளாவிடம் எட்டிப் பார்க்கத் தொடங்கின. வாழ்க்கைச்சூழல் மீண்டும் வடசென்னை, மத்திய சென்னை என்று மிருதுளாவை அலைக்கழித்துள்ளது.

மிருதுளாவின் குடும்பம், நாடகப் பின்னனியை உடையது. அதனால் மிருதுளாவுக்கும் நாடகத்திலும் ஈடுபாடு உண்டு. கல்வி, நாடகம் என்று ஓடிக்கொண்டிருக்கையில், மிருதுளாவுக்கு `இந்திய மாணவர் சங்கம்’ அறிமுகமானது. மிருதுளா, “நான் படித்த பள்ளியில் குடிதண்ணீர் பிரச்னைக்காக, இந்திய மாணவர் சங்கம் குரல் கொடுக்கவும், உரிமைகளை மீட்கவும் சங்கம் இருப்பதன் அவசியத்தை உணர்ந்தேன்” என்கிறார்.

பள்ளியில் நடந்த குடிதண்ணீருக்கான போராட்டம், மிருதுளாவின் போராட்ட வாழ்க்கைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளது. மிருதுளா, இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்ததில் இலருந்து தனக்குள்ளும், சமூகத்திலும் சிந்தனை மாற்றத்துக்கான போராட்டத்தை தினம் தினம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். தான் படித்த பள்ளியில் இந்திய மாணவர் சங்கக் கிளை உறுப்பினராக சமூகப் பணியைத் தொடங்கியவர், தற்போது மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினராகவும், மாநில இணைச் செயலராகவும் கூடுதல் பொறுப்புக்குத் தகுதிபெற்று, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இவர் எதிர்கொண்ட அனுபவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. பெண் என்ற பாலின பேதத்துடன் சமூகப் போராட்டத்திலும் ஈடுபடுவது சாதாரணமானது அல்ல.

பெண்கள், சமூக வாழ்க்கையில் ஈடுபடும்போது குடும்பத்தின் ஏச்சுகள், பெண் என்ற காரணத்தால் ஆணாதிக்கத்தின் தாக்குதல், பொருளாதாரச் சிக்கல், களத்தில் சந்திக்கும் சவால்கள் என அனைத்து பக்கமும் கத்திமுனைகள் போல் பிரச்னைகள் சூழ்ந்திருக்கும். அவற்றை எல்லாம் மீறி போராட்டக் களத்தில் பெண்கள் நிற்கிறார்கள் என்றால் சமூகத்தின் மீதான அதீத காதல்தான் காரணமாக இருக்க முடியும். சாதாரணமாகவே பெண் வேலைக்குச் செல்வதற்கே குடும்பங்கள் தடை விதிக்கும் போது சமூக இயக்கங்களில் பெண் ஈடுபடுவதை விட்டு வைக்குமா?

இது குறித்து மிருதுளா கூறுகையில், “சமூக வாழ்வில் ஈடுபடும்போது ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்பை என் குடும்பம் தெரிவித்தது. தந்தை புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர் என்பதால் சமூக வாழ்க்கைப் போராட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு அதிக காலம் எடுக்கவில்லை, தற்போது என் குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கிறார்கள்” என்கிறார்.

போராட்டக் களத்தில் மிருதுளா

விவசாயிகள் மீது லேஸ் கம்பெனி வழக்கு தொடர்ந்தபோது எல்லாப் பக்கமும் விவசாயிகள் போராடினர். விவசாயிகளுடன் இணைந்து மிருதுளாவும் போராடியுள்ளார். அவர், “எனக்கு லேஸ், குர்குரே ரொம்ப பிடிக்கும். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு அவற்றை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. ஆனா, இவற்றுக்குப் பின்னால் இருக்கும் குறிப்பிட்டவர்களின் லாபம் புரிந்ததால் எனக்குப் பிடித்திருந்தாலும் விவசாயிகளுக்காக லேஸ், குர்குரேவை விட்டுக் கொடுத்துவிட்டேன்” என்கிறார்.

சிறு வயதாக இருந்தாலும் போராட்டக்களம் மிருதுளாவை பக்குவப்படுத்தியுள்ளது. பல்நாட்டு நிறுவனங்களால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவசாயிகளின் போராட்டம் மிருதுளாவுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

மிருதுளா, டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் இளங்கலை சமூகவியல் முடித்துள்ளார். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த உரிமைக்கான போராட்டத்தில், மிருதுளாவுடன் போராடிய மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக் கண்டித்து போராடிய மிருதுளாவையும், அவரின் நண்பர்களையும் காவல்துறை தாக்கியுள்ளது. “காவல்துறை என் கழுத்தில் குத்தினர். மயங்கி விழுந்த நான் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் சுயநினைவுக்கு வந்தேன். முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபடும்போது, ஆண் காவலர்கள் தோள்பட்டையை இழுக்கும்போதும், உடல் பாகங்களில் கைவைக்கும்போதும் அசௌகர்யமான சூழ்நிலையை நித்தம் சந்திக்க நேர்கிறது” என நிதர்சனம் உணர்த்துகிறார்.

நாடக அரங்கேற்றத்தில் மிருதுளா

இவையெல்லாம் காவல்துறை கட்டவிழ்க்கும் கொடூரத்தன்மைக்கு சான்றாகச் சொல்லலாம். எத்தனை அசௌகர்யங்கள் ஏற்பட்டாலும் துணிச்சலுடன் போராட்டக் களங்களில் நிற்கிறார்.

மிருதுளா போராட்டத்தில் மட்டுமல்ல நாடகத்துறையிலும் சிறப்புற செயல்பட்டு வருகிறார். “நான், பாமா எழுதிய சாதியப் பிரச்னைகளைப் பேசும் `மிளகாய்ப்பொடி’ நாடகத்தில் முதன்முதலில் சிறுமியாக நடித்தேன். சமீபத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் `உள்ளுறம்’ நாடகத்தை பல இடங்களில் அரங்கேற்றியுள்ளேன். `உள்ளுறம்’ நாடக இயக்கத்தின்போது என்னுள் ஏற்பட்ட மனப் போராட்டங்களை என்னால் விவரிக்க முடியவில்லை” எனச் சிலிர்க்கிறார்.

21 வயதே நிரம்பிய மிருதுளா, சமூகம், குடும்பம், நாடகம், படிப்பு என்று ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். இந்த ஓட்டத்தில் அவர் இழந்தவை ஏராளம், சமூகத்துக்காக அவர் கொடுத்த உழைப்பும் அதிகம்.

“வாழ்க்கை ஓட்டமாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது களைப்பு ஏற்பட்டாலும் சமூகப்பயணம் பிடித்திருக்கிறது” என்கிறார். ஓடிக்கொண்டே இருந்தாலும் சமூகத்தின் மீதான காதலால் இந்தப் பயணம் மிருதுளாவுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.