ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கோடை விடுமுறை போன்ற சமயங்களில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. அதனால் மணிக்கணக்கில் காத்திருந்து டிக்கெட்டுகளை மக்கள் முன்பதிவு செய்துவருகின்றனர். தட்கல் முறை டிக்கெட்டுகளைப் பெற மக்கள் ஒரு மல்யுத்தமே நடத்தவேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை எடுக்க காத்திருப்பவர்களைக் குறிவைத்து டிப்டாப் ஆசாமி ஒருவர் நூதன முறையில் ஏமாற்றுவதாக, ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

அதனால் அந்த நபரைப் பிடிக்க ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் ரயில்வே எஸ்.பி பொன்ராமு மேற்பார்வையில், டி.எஸ்.பி ரமேஷ், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், ரயில் நிலைய முன்பதிவு டிக்கெட் மையங்களிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது வெள்ளை ஷர்ட், பேன்ட் அணிந்து டிப்டாப்பாக வரும் ஒருவர், முன்பதிவு டிக்கெட்டுகளை எடுக்க வரிசையில் காத்திருக்கும் வடமாநிலத்தவர்களிடம் பேசி அவர்களிடமிருந்து பணத்தை வாங்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதனால் அந்த டிப்டாப் ஆசாமியைப் பிடிக்க போலீஸார் காத்திருந்த நேரத்தில், கடந்த 18-ம் தேதி சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய முதல் தளத்திலுள்ள டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர் அருகே டிப்டாப் ஆசாமி வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

உடனடியாக ரயில்வே போலீஸார் அங்கு சென்று அந்த டிப்டாப் ஆசாமியைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் ஜிதேந்திர ஷா என்றும், அவர் சென்னை கொடுங்கையூரில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ரயில்வே போலீஸார் நம்மிடம் பேசுகையில், “ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்திர ஷா, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அவரின் அப்பா பாபுலால் ஷா சென்னையிலுள்ள கடையில் வேலை பார்த்திருக்கிறார். அதனால் பாபுலால் ஷா குடும்பத்துடன் சென்னையில் செட்டிலாகிவிட்டார். பாபுலால் ஷா இறந்த பிறகு, ஜிதேந்திர ஷா வேலையில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்.

ஜிதேந்திர ஷா

அதனால் சொந்த மாநிலத்துக்குச் செல்ல முடிவுசெய்த ஜிதேந்திர ஷா, ரயில் டிக்கெட் எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு முன்பதிவு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் முன்பதிவு ரயில் டிக்கெட் பெற அதிக அளவில் கூட்டம் இருந்ததையும் ஜிதேந்திர ஷா பார்த்திருக்கிறார். உடனே முன்பதிவு ரயில் டிக்கெட்டைவைத்து குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக போலி ரயில் டிக்கெட்டுகளைத் தயாரிக்க வெள்ளைத்தாள், ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருள்களை வாங்கியிருக்கிறார் ஜிதேந்திர ஷா. இதையடுத்து பயணிகள் தன்னை நம்ப ரயில்வேயில் உயரதிகாரிகள் அணியும் வெள்ளை நிற ஷர்ட், பேன்ட்டையும் வாங்கி அவற்றை அணிந்திருக்கிறார். தினமும் அந்த உடையில் டிப்டாப்பாக ரயில்வே முன்பதிவு டிக்கெட் மையத்துக்குச் செல்லும் ஜிதேந்திர ஷா, அங்கு வரிசையில் நிற்பவர்களை முதலில் நோட்டமிட்டு அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த யாரிடமாவது பேச்சுக் கொடுப்பார். இந்தியில் பேசும் ஜிதேந்திர ஷா, தன்னை ரயில்வே ஆபீஸர் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வார். பின்னர், தானே ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளைத் தருவதாகக் கூறி, சம்பந்தப்பட்டவரின் பெயர், எந்த ரயிலில் செல்ல வேண்டும் உள்ளிட்ட விவரங்களை, தான் வைத்திருக்கும் வெள்ளைத்தாளில் எழுதி, அதில் ஆந்திரா, ஹைதராபாத், தெலங்கானா ரயில்வே நிர்வாக அலுவலர் என்று முத்திரையிட்டு பந்தாவாகக் கையெழுத்திடுவார்.

அந்தத் தாளில் ரயிலின் பெயர், நம்பர், பயணிப்பவர்களின் பெயர், அவர்களின் செல்போன் நம்பர், ஆதார் நம்பர், முன்பதிவு இருக்கைக்கான ரயில் பெட்டியின் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். பின்னர் பணத்தை வாங்கிக்கொள்ளும் ஜிதேந்திர ஷா, `இந்த டிக்கெட்டை டி.டி.ஆரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும். அவர் உங்களை முன்பதிவு ரயில் டிக்கெட்டில் பயணிக்க அனுமதிப்பார்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவார். இப்படி வடமாநிலத்தவரை ஏமாற்றிப் பணத்தை மோசடி செய்த தகவல், டி.டி.ஆர் மூலம் எங்களுக்குத் தெரியவந்தது.

ரப்பர் ஸ்டாம்ப்

ரயில்வே தரப்பில் எங்களுக்குக் கொடுத்த புகாரையடுத்து ஜிதேந்திர ஷாவைக் கைதுசெய்து அவரிடமிருந்து போலி ரயில் டிக்கெட், ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிநோம். ஜிதேந்திர ஷாவிடம் விசாரித்தபோது, கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே ஸ்டைலில் டிக்கெட் விற்றபோது எழும்பூர் ரயில்வே போலீஸார் கைதுசெய்து, சிறையிலடைத்த தகவலைத் தெரிவித்தார். அதன் பிறகு சிறையிலிருந்து வெளியில் வந்த ஜிதேந்திர ஷா, மீண்டும் தன்னுடைய ஸ்டைலில் போலி ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்திருக்கிறார். சென்னை கொடுங்கையூரில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் ஜிதேந்திர ஷா, தினமும் சிலரை ஏமாற்றிப் பணத்தைப் பெற்று, அதைக்கொண்டு ஜாலியாக வாழ்ந்துவந்ததும் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.