தென்கொரியாவின் தீம் பார்க் ஒன்றில் முதன் முறையாக ஒரு பான்டா கரடி இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது தாயும் இரண்டு குட்டிகளும் நலமுடன் இருப்பதாக, அந்த தீம் பார்க் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

பான்டா கரடி

கொரியாவின் தலைநகரான சியோலுக்கு அருகிலுள்ள எவர்லேண்ட் எனப்படும் தீம் பார்க்கில் Ai bao எனப் பெயரிடப்பட்ட பான்டா ( இது ராட்சத பான்டா எனவும் அழைக்கப்படுகிறது) கரடி அண்மையில் இரண்டு‌ குட்டிகளை ஈன்றெடுத்தது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு குட்டிகள் தான், இந்த ஆண்டு உலகளவில்‌ பிறந்த முதல் பான்டா குட்டிகள். மேலும் தென்கொரியாவில் இந்த வகை ராட்சத பான்டா ஒரே நாளில் இரட்டை குட்டிகளை ஈன்றிருப்பது இதுவே முதல் முறை.

 இந்த செய்தியைக் கேட்டதில் இருந்து சீன மற்றும் தென் கொரிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனெனில் இந்த பான்டாவானது சீன மற்றும் தென்கொரிய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வந்தது. ஒன்பது வயது நிரம்பிய இந்த பான்டா முதல் குட்டியை அதிகாலை 4.52 மணிக்கும், இரண்டாவது குட்டியை காலை 6.39 மணிக்கும் ஈன்றது. இதில் முதல் குட்டி 180 கிராம் எடையும், இரண்டாவது குட்டி 140 கிராம் எடையும் கொண்டுள்ளது.

பிறந்த குட்டி பான்டா

தற்போது தாய் பான்டா மற்றும் அதன் இரு குட்டிகளும் சீரான ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பதாக, சீனாவின் பான்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பான்டா கரடி

மேலும் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “இது ரொம்பவே மகிழ்ச்சியான செய்தி. இந்த வகை பாண்டாக்கள் சீனாவின் அடையாளம் மற்றும் பொக்கிஷம். அதுமட்டுமின்றி இவை சீனாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்த உதவும் தூதுவராகவும் செயல்படுகிறது.

இதில் முதல் குட்டியை தென் கொரிய மக்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். மேலும் இந்த குட்டிகளின் பிறப்பால் நாட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி இவை வளர்ந்த பிறகு இதன் சகோதரி Fu bao போல், மக்களுக்கு இடையே நட்புணர்வையும் மற்றும் நாடுகளுக்கு இடையே நல்லுறவையும் மேம்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார்.

பிறந்த குட்டி பான்டா

Ai bao எனப்படும் தாய் பான்டா மற்றும் அதன் இணையான Le bao இரண்டும் 15 ஆண்டு குத்தகையின் பேரில், மார்ச் 2016-ல் தென் கொரியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. இவை 2020-ல் Fu bao என்று பெயரிடப்பட்ட தனது முதல் குட்டியைப் பெற்றெடுத்தன.

பிறந்த குட்டி பான்டா

தற்போது பிறந்திருக்கும் இவ்விரு இரட்டைக் குட்டிகளின் புதிய வரவு இரு நாட்டு இணையவாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலர் பான்டா பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களைச் சொன்னதுடன், சிலர் குட்டிகளுக்கான பெயர்களையும் பரிந்துரை செய்யத் துவங்கினர். மேலும் இவை பிறந்த அன்று இவ்விரு குட்டிகள்தான் சீனாவின் ட்ரென்டிங் ஹேஷ்டாக்காக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.