சந்திரயான்-3 விண்கலத்துக்கான பரிசோதனைகள், சோதனை ஓட்டங்கள், எரிபொருள் நிரப்பும் பணி என அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

சந்திராயன்-3

`சந்திரயான்-3 விண்கலம், நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை வெளிக்கொண்டு வர உள்ளது. சந்திரயான் -3 விண்கலத்தின் சமிக்ஞைகள், நிலவை ஒருபடி மேலும் நெருங்கும். நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கவில்லை என்பதை நிரூபித்துக் காட்டும்.

சந்திரயான் -3ல் உள்ள தனித்துவமான அம்சங்கள், நிலவில் இருந்து நிலவை மட்டும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், நிலவிலிருந்து பூமியையும் கண்காணித்து, விண்வெளி துறையில் சாதித்துள்ள பெருமைமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்’ என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சந்திரயான் – 3 திட்டம் ஆண்களால் வழிநடத்தப்பட்டாலும் இதற்கு பின்னால் அதிகளவில் பெண்களே பணிபுரிகிறார்கள் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சந்திரயான்-3 திட்டத்தில் பொறியாளர்கள்/ விஞ்ஞானிகள் என மொத்தம் 54 பெண்கள் உள்ளனர். இவர்கள் இணை மற்றும் துணை திட்ட இயக்குநர்கள், திட்ட மேலாளர்கள் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

சந்திரயான்-3

சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 திட்டங்களுக்கு இடையே இயங்கும் பொதுவான விஷயமாக இருப்பது நிலவில் லேண்டரை மென்மையாக தரையிறக்குவது மற்றும் ரோவர் சில ரசாயன பரிசோதனைகளை மேற்கொள்வது போன்றவைதான். இது மட்டுமல்லாது இந்த இரண்டு திட்டங்களுக்கு பின்னாலும் அதிகளவில் பெண்களே பணிபுரிகின்றனர் என்ற பெருமையும் பெரிய ஒற்றுமையும் உள்ளது.

சந்திராயன்-2 திட்டத்துக்கு திட்ட இயக்குநர் எம்.வனிதா மற்றும் பணி இயக்குநர் ரிது கரிதல் ஶ்ரீவஸ்தவா ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். சந்திராயன்-3 திட்டத்துக்கு திட்ட இயக்குநராக மோகன் குமார், ராக்கெட் இயக்குநர் பிஜு சி.தாமஸ் மற்றும் விண்கல இயக்குநர் பி.வீரமுத்துவேல் ஆகியோர் உள்ளனர். இதுதான் இரண்டு திட்டத்துக்கும் உள்ள வித்தியாசம். மற்றபடி இதில் பணிபுரிபவர்களில் அதிகமானவர்கள் பெண்களே.

சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும்போது, அது இந்தியப் பெண்கள் வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல்லாக அமையும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.