அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம், ஆளுநருடனான மோதல், கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப்பூசல் என ஆளும் தி.மு.க அரசை நெருக்கும் விஷயங்களில், புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது `விலைவாசி உயர்வு.’ மக்களின் அத்தியாவசியத் தேவை தொடர்பான இந்தப் பிரச்னை, தி.மு.க அரசுக்குப் புது `தலைவலி’யை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கப்போகிறது தி.மு.க அரசு?!

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக, தக்காளியின் விலை மக்களை `கிறுகிறுக்க’வைத்திருக்கிறது. ஒரு வாரமாகவே சந்தையில் தக்காளியின் விலை சதம் தொட்டு, ரூ.120 என்ற அளவிலேயே விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இஞ்சி ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

ரேஷன் கடை

சின்ன வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. இப்படியாக, காய்கறிகள் ஏற்ற நிலையில் இருப்பதுபோல், இறைச்சி விலையும் அதிகரித்திருக்கிறது. மேலும், மளிகைப்பொருள்களான துவரம் பருப்பு ரூ.160, உளுந்தம் பருப்பு ரூ.150, கடலைப் பருப்பு ரூ.70, சீரகம் ரூ.700, மிளகு ரூ.550, வெந்தயம் ரூ.84, கடுகு ரூ.74, புளி ரூ.150, பூண்டு ரூ.150, சுக்கு ரூ.350, நிலக்கடலை ரூ.125 என அத்தியாவசியமான பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது.

திடீரெனப் பெய்த மழை காரணமாக தட்டுப்பாடு அதிகரித்து, உணவுப்பொருள்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. உணவுப்பொருள்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் குளிர்சாதன வசதி மட்டுமின்றி, சாதாரண கிடங்குகள் அமைக்க 50% முதல் 20% வரை மானிய உதவிகளை வழங்கிவருகின்றன. அதைப் பயன்படுத்திக்கொண்டு நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் ஏராளமான கிடங்குகளில் உணவுப்பொருள்கள் அதிக அளவில் பதுக்கப்பட்டிருப்பதே விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதை முறையாக அரசு கண்காணிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

பெரியகருப்பன்

தக்காளி விலை அதிகரித்துவருவதைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், “முதற்கட்டமாக தக்காளி விலையேற்றத்தைக் குறைக்க, சென்னையிலுள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்க ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் 32 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 25 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், 27 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் நடமாடும் கடைகள் 2 என மொத்தம் 111 இடங்களில் குறைந்த விலையில் விற்பனை மேற்கொள்ளப்படும். தலைநகரத்தில் தொடங்கியிருக்கும் இந்த முயற்சி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கும்போது, தக்காளி தொடர்பாக மட்டும் ஆலோசனை நடத்திருப்பது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம். நம்மிடம் அவர், “அரசின்கீழ்தான் வேளாண்மைத்துறை இயங்கிவருகிறது. எந்த மாவட்டத்தில், எந்தக் காய் அதிகம் விளைகிறது என்னும் புள்ளிவிவரம் அரசிடம் இருக்கும்தானே… அப்படியிருக்கும்போது, ஓர் ஆண்டில் தக்காளி அதிக விலைக்கு விற்கப்பட்டால், அடுத்த ஆண்டு விவசாயிகள் பலர் தக்காளியைப் பயிரிடுவார்கள். இதனால் வரத்து அதிகமாகி விலை குறைந்துவிடும். இதைக் காரணமாக வைத்து மீண்டும் தக்காளி பயிரிடுவதைத் தவிர்த்துவிடுவார்கள். இதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. இதை நெறிப்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

விக்கிரமராஜா

குறிப்பாக, வேளாண்மைத்துறை அலுவலர்கள் சார்பாக அதிகமாகப் பயிரிடப்படுவது கண்காணிக்கப்பட்டாலும், விவசாயிகள் சிலர் கேட்காமல் பயிரிடுவதும் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதைச் சீர்செய்யவும், அதிகமான வரத்து வரும்போது அதை விவசாயிகளிடமிருந்து வாங்கி சேமிப்புக் கிடங்குகளில் வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்குக் காலம் கடந்தாலும் நல்ல விலை கிடைக்கும். போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் தக்காளியைக் குப்பையில் கொட்டும் அவலநிலை தடுக்கப்படும்.

பல நேரங்களில் செயற்கையாகவோ, உணவுப் பதுக்கல் நடந்தோ தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதைக் கண்காணிக்க கமிட்டி அமைக்க வேண்டும். விற்பனையாளரான எங்களுக்கே ஒரு மாதத்துக்கு முன்பே வரத்து குறைவது தெரியும். அதை அரசால் கணிக்க முடியாதா… பருப்பு தொடங்கி சீரகம் வரை விலை கூடியிருக்கிறது. இந்த நிலைக்கும், வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அரசு முறையாகத் திட்டமிட்டால் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும்” எனக் கூறினார்.

ராமா ராவ்

இது குறித்து பொதுமக்கள் அமைப்பின் தலைவர் ராமராவ் நம்மிடம், “இந்த உடனடி விலையேற்றத்தால் பாதிக்கப்படும் நபர்களாக அடிதட்டு மக்களே இருக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப்பொருள்களை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தற்காலிகமாக அல்லாமல், நிரந்தரமாகச் செய்ய வேண்டும். இதற்கு கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, தக்காளி விலை ஏற்றத்தைச் சமாளிப்பதற்காகக் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், முறையாக அதை அமல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. குறிப்பாக, சென்னையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே தக்காளி தீர்ந்துவிட்டதால், மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். எனவே, இந்தச் சிக்கலையும் சரிசெய்து, தக்காளியோடு நின்றுவிடாமல் மற்ற மளிகைப் பொருள்களையும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம். “இந்தியா முழுவதிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்குத் தன்னிச்சையாக மாநிலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இருப்பினும், இதைக் கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் உணவுப்பொருள்களை வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்டமாக, சென்னையிலுள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது.

சிவ ஜெயராஜ்

இதைத் தமிழகம் முழுவதிலும் விரிவுப்படுத்த அரசு பணிகளை மேற்கொண்டுவருகிறது. காய்கறிகளைத் தொடர்ந்து மற்ற உணவுப்பொருள்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. எனவே, அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் அரசால் நடத்தப்பட்டுவருகின்றன.

ஏற்கெனவே, துவரம் பருப்பை ரேஷனில் கொடுத்துவருகிறோம். அதேபோல் மற்ற பொருள்களையும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள், இந்த வாரத்துக்குள் இறுதிசெய்யப்படும். அதனுடன் நடமாடும் காய்கறிக் கடைகள் அமைக்கவும் அரசு ஆலோசித்துவருகிறது. இது விலைவாசி அதிகரிப்பால் சிரமத்தைச் சந்திக்கும் மக்களை மீட்க உதவும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.