உலகப்போர் என்றவுடனேயே சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவங்களும் அரசியல் தலைவர்களும்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் இந்தப் போர்களில் மிக முக்கியமான பங்கு விஞ்ஞானிகளுக்கும் உண்டு! அவர்கள் முதலாம் உல​கப் போரில் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டார்கள்.

மருத்துவ முன்னேற்றங்கள் ராணுவ வீரர்களுக்கு உதவின. அறுவை சிகிச்சையில் முன்னேற்றங்கள், காயங்களை விரைவில் ஆற்றுவதற்கான வழிமுறைகள் என்று மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்ததில் ராணுவத்தினர் பெரும் பயன் அடைந்தார்கள். குறிப்பாகத் தொற்று நோய்கள் குறித்து ராணுவங்கள் பெரிதும் கவலைப்பட்டன. காரணம் போர்க்களத்தில் ஒருசிலருக்கு அந்த நோய்கள் உண்டானால் அது விரைவில் பலருக்கும் பரவிப் பல போர்த் திட்டங்களுக்குத் தோல்வியை அளிக்கக்கூடும். இந்த நிலையில் தொற்று நோய்க்கான சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டதில் அவை பெரிதும் நிம்மதி அடைந்தன.

நச்சு வாயுக்களால் தாக்குதல்

ஆனால் விஞ்ஞானிகளின் முயற்சிகள் அழிவுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டன. நவீன போர்க் கருவிகளை உருவாக்குவது – அவற்றில் மிக முக்கியமானது, சொல்லப்போனால் குளோரின், கடுகு வாயு போன்ற நச்சு வாயுக்களை எதிரிகள் தரப்பில் செலுத்துவதன் மூலம் பெரும் சேதத்தை விளைவிக்கலாம் என்பதைக் கண்டறிந்து அதை உருவாக்கிக் கொடுத்தது விஞ்ஞானிகள்தான்.

போர்க் காலத்தில் ஒரே அணியில் உள்ள நாடுகள் ஒன்றுக்கொன்று தகவல்களை அனுப்ப நேர்ந்தது. அவை எதிரி நாடுகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது. இதற்கு விஞ்ஞானம் கைகொடுத்தது. விஞ்ஞானிகளும் கணிதவியல் மேதைகளும் இணைந்து சங்கேதக் குறியீடுகளைக் கண்டுபிடித்து அதன்மூலம் தகவல் பரிமாற்றத்தை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்னும் நிலையை உண்டாக்கினர். குறிப்பாகப் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் தாமஸ் டுடே இதில் முக்கிய பங்கு வகித்தார்.

வானியல் வெகு வேகமாக முன்னேற்றம் கண்டது. போரில் பங்குபெற்ற நாடுகள் மிக வேகமாகவும் சாமர்த்தியமாகவும் செல்லும் விமானங்களை உருவாக்க விஞ்ஞானிகளை ஊக்குவித்தனர். முதலாம் உலகப் போர்க் காலகட்டத்தில் முக்கிய பங்கு கொண்ட வானியல் விஞ்ஞானிகள் என்று ரைட் சகோதரர்கள், இகோர் சிகோர்ஸ்கி மற்றும் ஆன்டனி ஃபோக்கர் ஆகியோரை குறிப்பிடலாம். வானிலையைத் தெளிவாகக் கணிப்பது என்பது போர்க் காலத்தில் மிக முக்கியமான ஒன்று. தகுந்த வெப்பச் சூழல் என்பது தாக்குதல்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

ரைட் சகோதரர்கள்

ஆனால், அதே சமயம் இந்தப் பொறுப்புகளால் பல சங்கடங்களுக்கும் தவிப்புகளுக்கும் உள்ளான விஞ்ஞானிகள் உண்டு. நாகரிகத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் புறம்பான நச்சு வாயுக்களைத் தயார் செய்வது என்பது அவர்களில் பலருக்கும் தயக்கத்தை உண்டு பண்ணியிருக்கக் கூடும். என்றாலும் அரசின் கட்டாயம், தாய் மண்ணுக்காக எதையும் செய்யலாம் என்கிற தீவிர நாட்டுப்பற்று, மறுத்தால் தண்டனைக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் போன்ற பலவற்றின் காரணமாக இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டி வந்தது.

எனினும் அவர்களது கண்டுபிடிப்புகள் அந்தப் போரில் எதிரிகளின் தரப்பு மீது மட்டுமேதான் பயன்படுத்தப்படும் என்றும் சொல்ல முடியாதே. அவை வருங்காலத்தில் மனிதக் குலத்துக்கே பெரும் அபாயங்களை உண்டு பண்ணிவிடக் கூடாது என்ற தவிப்பும் அவர்களில் பலருக்கு இருந்தது.

அவசரகதியில் பல மருந்துகளை அவர்கள் உருவாக்க வேண்டியிருந்ததால் அவற்றைச் சரிபார்க்கக் காயமடைந்த ராணுவ வீரர்களைச் சோதனை எலிகள் போலப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டானது. இதனால் பல விபரீதங்கள் உருவாகின.

பொதுவாகப் பல நாட்டு விஞ்ஞானிகளும் சேர்ந்து விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது உண்டு. தங்கள் சோதனைகள் குறித்து ஒருவருக்கொருவர் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் இப்போது தங்கள் நாட்டு அணி, எதிரி நாட்டு அணி என்று பிரிந்துவிட, தேசத்தின் பக்கம் நிற்க வேண்டுமா அல்லது பிற நாடுகளோடு கூட்டாக இணைந்து அறிவியல் முன்னேற்றங்களுக்குத் துணை நிற்க வேண்டுமா என்பதை விஞ்ஞானிகள் முடிவு செய்ய வேண்டியிருந்தது.

James Chadwick (left) with Major General Leslie R. Groves, Jr.

போதாக்குறைக்கு, எதிரி நாடுகள் படையெடுக்கும்போது விஞ்ஞானிகளும் அதில் முக்கியமாகக் குறிவைக்கப்பட்டார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர் சர் ஜேம்ஸ் சாட்விக். அக்டோபர் 20, 1891 அன்று பிறந்த ஜேம்ஸ் சாட்விக் மிக அதிகம் அறியப்படுவது நியூட்ரான் கண்டுபிடிப்புக்காகத்தான். (நியூட்ரான் என்பது மின்சார்பு இல்லாத அணுவின் பகுதி). 1935ல் இயற்பியலில் இவருக்கு நோபல் பரிசு கூட வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ராணுவத்தில் பொறியியல் பிரிவில் இவர் அதிகாரியாக பணியாற்றினர். ராணுவ தொழில்நுட்பங்கள் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

பின் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் சில ஆராய்ச்சிகளைச் செய்வதற்காகச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் முதலாம் உலகப்போர் வெடிக்க, ஜெர்மனி அரசு இவரை நான்கு வருடங்கள் தன் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தது. கிட்டத்தட்டச் சிறைதான். சிறைப்பட்டிருந்த சமயத்திலும் பல வித பரிசோதனைகளை அவர் செய்து கொண்டிருந்தார். அவர் மீது பரிதாபப்பட்ட சில ஜெர்மன் ராணுவ வீரர்களும் இதற்கு உதவினர்.

எர்னஸ்ட் ​ரூதர்ஃபோர்ட்

போர் முடிவுக்கு வந்ததும் இங்கிலாந்துக்குத் திரும்பி தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவரது முக்கிய ஆலோசகராக விளங்கியவர் பிரபல விஞ்ஞானி எர்னஸ்ட் ​ரூதர்ஃபோர்ட்.

பின்னர் இரண்டாம் உலகப்போரில், இவரது அணுக்களின் மோதல் மற்றும் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகள் மிக முக்கியமான பங்கு வகித்தன. சொல்லப் போனால் மன்ஹாட்டன் திட்டத்தில் அணுகுண்டு உருவாக இவரது கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவின.

– போர் மூளும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.