கோயம்புத்தூர் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் பத்து மாணவர்கள், இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஐரோப்பாவின் மொனாக்கோவில் நடக்கவுள்ள `மொனாக்கோ ஆற்றல் படகுப் போட்டி’யில் (Monaco Energy Boat Challenge) ‘Team Sea Sakthi’ என்ற பெயரில் பங்கேற்கவுள்ளனர். தங்களின் படகுக்கு `யாழி’ என்றும் தமிழில் பெயர் வைத்துள்ளனர். மொனாக்கோவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களுடன் போட்டிப் போட்டு, இவர்கள் வடிவமைத்த படகைக் காட்சிப்படுத்தி இயக்க வேண்டும். 

Team Sea Sakthi

இக்குழுவைச் சேர்ந்த முதன்மை உற்பத்திப் பொறியாளரும் போட் பைலட்டுமான மாணவர் ஸ்வாமிநாதன், “கடந்த வருடம் நாங்களாகவேதான் இது போன்ற ஒரு போட்டி மொனாக்கோவில் வருடா வருடம் நடைபெறுவதைக் கண்டுபிடித்து அதற்கு விண்ணப்பித்தோம். ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சுழலுக்குப் பாதுகாப்பான, அதிக பயன் தரும் படகைப் பங்கேற்பாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். கடந்த ஆண்டு வெறும் மூன்றே மாதத்தில் சூரிய சக்தியால் இயங்கக் கூடிய படகை உருவாக்கி உலக அளவில் ஆறாவது ரேங்கிங்கைப் பெற்றோம். மேலும் ‘Communication Prize’ என்ற விருதையும் வென்றுள்ளோம்.” 

நான்கு மாணவிகள் உட்படப் பத்து பேர் கொண்ட இக்குழுவில் இரண்டு பேர் படகு ஓட்ட உரிமம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினருக்கான ஆராய்ச்சி செலவு, மொனோக்கோவிற்குப் படகைக் கொண்டு சென்று திரும்புவதற்கான போக்குவரத்து செலவு என மொத்தம் ரூ.65 லட்சம் தேவைப்பட்டுள்ளது. அதில் ரூ.30 – 35 லட்சத்தை கோயம்புத்தூரில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள, தமிழக அரசு சார்பில் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகையைக் கல்லூரியே ஏற்று மாணவர்களுக்கு முழு ஊக்கமும் அளித்துள்ளது.

“இந்தப் படகை முழுமையாக, இன்ஜின் உட்பட, இந்தியாவில் உருவாக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு நாங்களே செய்துள்ளோம். இந்தியாவில் இதற்கு முன் இப்படி ஒரு படகை யாரும் உருவாக்கியதில்லை. இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை கார், பைக் போன்ற வாகனங்களில் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால், முழுக்க முழுக்க இந்தியப் பாகங்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பான வாகனங்களை நாம் உருவாக்க முடியும். 

இப்போது நாங்கள் செய்திருக்கும் படகு மீனவர்களுக்குத்தான் அதிகம் பயன்படும். இதன் விலை ஆரம்பத்தில் அதிகமாகத் தெரிந்தாலும், இது ஒரு முறை முதலீடுதான். மீனவர்களே இதை இயக்கி பழுது பார்த்துக்கொள்ளும் அளவிற்கு மிகவும் சுலபமான விதத்தில் வேறெந்த செலவுகளையும் கொடுக்காது. அதேபோல சுற்றுலாத்துறையிலும் இதைப் பயன்படுத்தலாம். கேரளாவில் வாட்டர் மெட்ரோ, படகு மெட்ரோ போன்ற பல கண்டுபிடிப்புகளை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அது போன்ற சுற்றுலாப் பயன்பாட்டிற்கும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பாகங்களைப் படகில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Team Sea Sakthi Students
மொனாக்கோ படகுப் போட்டி
Team Sea Sakthi
மொனாக்கோ படகுப் போட்டி

மொனாக்கோ போட்டியில் சுமார் எட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வெல்பவர்களுக்கு பணப்பரிசும் உண்டு. இதைத் தாண்டி அந்த நிகழ்ச்சிக்குப் பல முதலீட்டாளர்களும், சர்வதேச தளத்தில் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும்கூட பங்குபெறுவார்கள். அவர்கள் வென்றவர்களைத் தாண்டி, போட்டியில் பங்கேற்கும் திறமையான மாணவர்களுக்குத் தகுந்த வாய்ப்பையும் அளிப்பார்கள். கடந்த ஆண்டும் எங்களுக்குப் பல மாநில, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்த ஆண்டு முதலமைச்சரே எங்களுக்கு ஆதரவு கொடுத்தது இன்னும் உத்வேகமாக இருக்கிறது” என்கிறார் ஸ்வாமிநாதன்.

மொனாக்கோ படகுப் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கும் ஒரே அணி நம் தமிழக மாணவர்களின் இந்த அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.