“நான் தாதா இல்லை… தாத்தா… ஜோக்கர்… எந்தக் குற்றத்திலும் இப்போ ஈடுபடுறதில்லை. பரம்பரைச் சொத்துல வர்ற வருமானத்துல ஜாலியா இருக்கேன். என் பேரப்பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும்” என்று மீடியாக்களிடம் சொல்லிவந்த பிரபல தாதா வரிச்சியூர் செல்வம், தன் கூட்டாளியைக் கொடூரமாகக் கொன்ற வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வரிச்சியூர் செல்வம்

“தனக்காகப் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவரையே கொலைசெய்து, ஆற்றில்போட்ட வரிச்சியூரானை நம்பியிருக்கும் நம் நிலைமையும் ஒருநாள் இப்படித்தான் ஆகுமா?” என்று கூட்டாளிகளும், வரிச்சியூரானுக்குப் பலவகைகளிலும் உதவிசெய்து ஆதாயமடைந்த காக்கி அதிகாரிகளும் ஆடிப்போயிருக்கின்றனர்.

“உட்கார்ந்த இடத்திலேயே லட்சம் லட்சமாகக் கிடைக்கும் ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வேலைகளை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுவாரா… தொடர்ந்து செய்துகொண்டுதான் இருந்தார். அது குறித்து எந்தப் புகாரும் வராததாலும், அப்படியே வந்தாலும் மதுரை மாநகர் லிமிட்டிலும், புறநகர் லிமிட்டிலும் காக்கி அதிகாரிகள் உதவி செய்வதால், கிலோக்கணக்கில் நகைகளை அணிந்துகொண்டு, ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு, சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருந்தார் செல்வம். தற்போது தென்மண்டல ஐ.ஜி-யாக அஸ்ரா கார்க் இருப்பதால்தான், இந்தக் கைது நடைபெற்றிருக்கிறது, இல்லையென்றால் நிச்சயம் சிக்கியிருக்க மாட்டார்” என்றார் வழக்கறிஞர் ஒருவர்.

வரிச்சியூர் செல்வம்

ஒரு பிரச்னையில் தன்னுடைய தந்தையைக் கொலைசெய்தவரை 18 வயதிலேயே கொலைசெய்துவிட்டு சிறைக்குச் சென்ற செல்வம், சிறையிலிருந்து வெளியே வந்ததும் வரிச்சியூர் செல்வமாக போலீஸ் ரெக்கார்டுகளில் அடையாளப்படுத்தப்படும் வகையில் மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

20 வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு கொலை வழக்கில் அப்போது பொறுப்பிலிருந்த முக்கிய அரசியல்வாதியுடன் சேர்ந்து கைதானதால், ரொம்பவும் பிரபலமானார். அந்த வழக்கிருந்து விடுதலையான பிறகு, அரசியல்வாதிகளுக்கு இன்னும் நெருக்கமானார்.

2000 முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல்வேறு கொலை, கொலை முயற்சி, பணம் பறிப்பு, ஆள்கடத்தல், வெடிகுண்டு வழக்குகளில் வரிச்சியூரானின் பெயர் அடிபட்டுவந்தது. மூன்று முறை என்கவுன்ட்டரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய பெருமையும் இவருக்கு உண்டு.

கைதுசெய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம்

க்ரைம் அட்ராசிட்டி ஒரு பக்கமென்றால், என்டர்டெயின் அட்ராசிட்டி தனிரகம். அமெரிக்காவில் பல்கலைக்கழகம் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு, அடிக்கடி தமிழகத்துக்கு வந்து டாக்டர் பட்டங்களை அள்ளி வழங்கிவந்த செல்வின்குமார் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்திடம் சிக்கிக்கொள்ள, உடனே அந்த செல்வின் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை மதுரையில் தொடங்கி, இளைஞர் பிரிவின் செயலாளராக வரிச்சியூர் செல்வத்தை அறிவித்தார். “மனித உரிமைகள் மீறலில் ஈடுபடும் நபரே அந்த அமைப்புக்குச் செயலாளரா?” என்று மதுரை மக்கள் அதிர்ச்சியுடன் சிரித்தார்கள்.

திடீரென்று சினிமா ஆசை வர, அதன் தொடக்க நிகழ்ச்சியை மதுரை காந்தி மியூசியத்தில் ஆட்டம், பாட்டு என்று நடத்தினார் வரிச்சியூர் செல்வம். “மகாத்மாவின் நினைவைப் போற்றும் ஒரு மையத்தில், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்?” என்ற சர்ச்சை அப்போது எழுந்தது. அந்தப் பட முயற்சி அப்படியே டிராப் ஆன நிலையில், `வரிச்சியூரான் வகையறா’ என்ற டைட்டலில் வேறு படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்.

வரிச்சியூர் செல்வம்

இதைவிடக் கொடுமையாக, கடந்த தி.மு.க ஆட்சியின்போது பத்திரிகை ஒன்றைத் தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் இருந்தார். நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் நாள்கணக்கில் கியூவில் நிற்க, வி.வி.ஐ.பி-யாக வரிச்சியூர் செல்வம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குச் சில போலீஸ் அதிகாரிகள் உதவி செய்ததாக அப்போது சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான், ‘நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன், எந்தக் குற்றத்திலும் ஈடுபட மாட்டேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு மதுரை எஸ்.பி-யிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்தார். நடமாடும் நகைக்கடையாக வலம் வந்துகொண்டே வழக்கமான வேலைகளையும் செய்துவந்தார் வரிச்சியூர் செல்வம். தன்னை காட்ஃபாதர்போல நினைத்துக்கொண்டு, பின்னணி இசையுடன் ரீல்ஸ் வெளியிட ஆரம்பித்ததும், வரிச்சியூரானின் நடவடிக்கையைக் கண்காணிக்கும்படி டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து மதுரை போலீஸுக்கு உத்தரவு வந்தது.

வரிச்சியூர் செல்வம் பிரஸ் மீட்டின்போது

அதோடு பயந்துபோன வரிச்சியூர் செல்வத்துக்கு நெருக்கமான காக்கி அதிகாரிகள், ‘மதுரை, சென்னையில் பிரஸ் மீட் நடத்தி கோமாளிபோலப் பேசு’ என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்க, அதுபோல ஒரு பிரஸ் மீட்டை மதுரையிலும் சென்னையிலும் நடத்தினார். அதில், “நான் தாதா இல்லை… தாத்தா, ஜோக்கர், கோமாளி, குற்றச்செயல்களில் ஈடுபடுவதில்லை. குடும்பச் சொத்தில் வருமானம் வருகிறது. வருமான வரி செலுத்துகிறேன், அதனால் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு ஜாலியாக இருக்கிறேன்” என்றும் பேசி, சிம்பதி கிரியேட் செய்தார். இடையில் தி.மு.க அல்லது பா.ஜ.க-வில் சேரப்போகிறார் என்ற தகவலும் பரவியது.

ஏற்கெனவே மதுரையில் எஸ்.பி-யாகப் பணியாற்றியதால், வரிச்சியூரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் தற்போதைய ஐ.ஜி அஸ்ரா கார்க். இந்த நிலையில்தான், மூன்று வருடங்களுக்கு முன்பு குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணராஜ், ஊராட்சி உதவியாளர் முனியசாமி கொலைச் சம்பவத்தில் வரிச்சியூர் செல்வத்தின் தம்பியையும், பாலகுரு என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். மற்றொரு குற்றவாளியான வரிச்சியூரானின் கூட்டாளி செந்தில்குமாரை போலீஸார் தொடர்ந்து தேடிவந்தனர். ஆனால், அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதையடுத்து, கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

அந்த நேரம்தான், விருதுநகர் அல்லம்பட்டியில் வசிக்கும் செந்தில்குமாரின் மனைவி முருகலட்சுமி, வரிச்சியூர் செல்வத்திடம் வேலை செய்த தன் கணவரைக் காணவில்லை என்று விருதுநகர் போலீஸில் புகார் கொடுத்தார். ஐ.ஜி அஸ்ரா கார்க், ஏ.எஸ்.பி தலைமையில் தனிப்படையை அமைத்தார். வரிச்சியூர் செல்வம், அவருடைய உறவினர்கள் உட்பட அனைவரின் போன்களும் ட்ராக் செய்யப்பட்டன. செந்தில்குமாரின் போன் கால்கள், லொகேஷன் அனைத்தும் எடுக்கப்பட்டன. அதில், செந்தில்குமார் கொலைசெய்யப்பட்டது உறுதியான பிறகு, வரிச்சியூர் செல்வம் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் ஐ.ஜி-யின் டிஜிட்டல் கிராபிக் முறையிலான நடவடிக்கையை உயர் நீதிமன்றமே பாராட்டியது.

ஐ.ஜி அஸ்ரா கார்க்

எப்போதுமே போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்டால் அப்படியே பம்ம ஆரம்பித்துவிடுவாராம் வரிச்சியூர் செல்வம். ஏற்கெனவே என்கவுன்ட்டரிலிருந்து தப்பியபோதும், அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார். இப்போதும் போலீஸ் கைதுசெய்ய வந்தபோது, ‘காணாத கடவுளுக்கும், காக்கும் காக்கி கடவுளுக்கும் என்றுமே பணிந்து நடப்பேன்’ என்று டயலாக் விட்டிருக்கிறார். போலீஸுடன் செல்லும்போது அவர் எந்த ஆபரணமும் அணியவில்லை.

“உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்த பின்பும், வரிச்சியூர் செல்வம் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும், அவருக்குச் சில போலீஸ்காரர்கள் உதவியதாகவும் சொல்லப்படுகிறதே?’’ என்று ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் கேட்டோம். நம்மிடம் பேசியவர், “தொடர்ந்து விசாரணையில் அனைத்தும் விசாரிக்கப்படும். இந்தக் கொலை வழக்கை விசாரிக்க ஆடியோ-வீடியோ கிராபிக் முறை பயன்படுத்தப்பட்டது. முழுமையான விசாரணைக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
 
வரிச்சியூர் செல்வம் கைதுசெய்யப்பட்டிருப்பது பலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.