`தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சரை நீக்க ஆளுநருக்கு சட்டப்படி அதிகாரமில்லையெனில், ஊழல் புரிந்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ள ஒருவரை அமைச்சராக வைத்திருக்க எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?’ என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து, நீக்கி உத்தரவிட்ட தனது அறிவிப்பை, ஆளுநர் நேற்று (29-ம் தேதி) நள்ளிரவு வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கிறார். ஜூன் 13-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணை, அதைத் தொடர்ந்து 14-ம் தேதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவிட்டது செல்லுபடியாகுமா… ஆகாதா… சட்டபூர்வமானதா… சட்டவிரோதமானதா… அவருக்கு அதிகாரம் இருக்கிறதா… இல்லையா… என்ற நியாயமான விவாதங்களும்; ஆளுநருக்கு எதிரான தி.மு.க-வின் அநியாயமான, அராஜகமான ’கோயபல்ஸ் பிரசாரம்’ போஸ்டர் வடிவத்திலும் நேற்றே தொடங்கப்பட்டுவிட்டது. அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறவே ஆளுநர் தனது உத்தரவை நிறுத்திவைத்திருக்கிறார் எனச் சொல்லப்பட்டாலும்கூட, அந்த முக்கியமான அறிவிப்பைக் கொடுப்பதற்கு முன்பாகவே ஆலோசனை நடத்தியிருந்தால் வீணாக எதிர் பிரசாரத்துக்கு வாய்ப்பு கொடுக்காமலிருந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.

கிருஷ்ணசாமி

இது போன்ற ஒரு சிக்கலான காலகட்டத்தில் சிறு சிறு குழப்பமான நடவடிக்கைகள் இருப்பினும், ஆளுநர் அவர்களின் நோக்கத்தையும் நடவடிக்கையும் குற்றம் சொல்ல முடியாது. இந்தியாவின் அரசியல் சாசனத்தின் எந்த ஓர் அதிகார மையத்துக்கும் வானளாவிய அதிகாரம் வழங்கப்படவில்லை. அது ஆளுநருக்கும் பொருந்தும், அமைச்சரவைக்கும் பொருந்தும். நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று இணைந்து ’Checks and Balance’ என்ற அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை அம்சம். மக்கள் வாக்களித்துவிட்டார்கள்.

சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம், அமைச்சராகிவிட்டோம் என்று சொல்லி எவரும் இந்திய அரசின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படவோ, நீதி தவறி மக்களின் சொத்துகளை கபளீகரம் செய்யவோ அதிகாரமில்லை. குற்றம் இழைப்பதற்கு இந்திய அரசியல் சாசனம் எவ்விதமான உரிமையையும் எவருக்கும் வழங்கவில்லை. நீதி தவறியவர்களைத் தண்டிப்பதற்கு என்றுதான் அனைத்து அமைப்புகளும் இருக்கின்றன. செந்தில் பாலாஜி தனது ’அமைச்சர் பதவியை’ பயன்படுத்தி தன்னுடைய சுயலாபத்துக்காகக் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உட்பட பலவித முறைகேடுகளின் காரணமாக கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

செந்தில் பாலாஜி

அவர்மீது எத்தனை வழக்குகள், என்னென்ன வழக்குகள், எப்படிப்பட்ட வழக்குகள் இருக்கின்றன என்பது அவரை விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். தற்போது இலாகா இல்லாவிட்டாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் அவர் தலைமைச் செயலகத்துக்குச் செல்ல முடியும். அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டி தன் வசப்படுத்திக்கொள்ள முடியும். தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறையால் எடுக்கப்பட்ட ஆதாரங்களைக்கூட அவர் அழிக்கவோ அல்லது அதிலிருந்து தப்பித்துப் போக உரிய நடவடிக்கைகளையோ மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில்தான் ஆளுநர் அவர்கள் தார்மீகரீதியாக செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது சரியல்ல என்று கூறினார். ஆளுநர் அவர்களுடைய நல்லெண்ணத்துக்குப் பாத்திரமாக ஓர் அமைச்சர் இல்லை என்று கருதியபட்சத்தில், அவரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க எண்ணியிருக்கலாம்.

Appointing Authority is also Dismissing Authority… அதாவது அமைச்சர்களைப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கூடிய ஆளுநர் அவர்களே, அவர்களை நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார்… என்று முதல்வர் ஸ்டாலினின் தந்தையார் கருணாநிதி மீது 1979-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அது குறித்த செய்தி பிரபல ஆங்கில நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, `ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க மட்டும்தான் அதிகாரம் உண்டு. அமைச்சர்களை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை’ என்பது வரட்டு வாதம்.

கிருஷ்ணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மாநில அரசையே ’அந்த அரசு சரியாகச் செயல்படவில்லை’ என்றால் அரசைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு அதிகாரம் இருக்கிறபோது, தன்னால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட ஓர் அமைச்சர் அந்தப் பதவியில் நீடிப்பது அந்த மாநிலத்தின் இங்கிதத்துக்கு கேடு விளைவிக்கும் என்று கருதுகிறபோது அந்தக் குறிப்பிட்ட அமைச்சரைப் பதவிநீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அமைச்சரை நீக்க ஆளுநருக்கு சட்டப்படி அதிகாரமில்லையெனில், ஊழல் புரிந்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ள ஒருவரை அமைச்சராக வைத்திருக்க எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.