புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா, கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் தமிழிசை, “சுனாமி வந்த பிறகு ஏறக்குறைய ரூ.46 கோடி அளவுக்கு மீனவ சகோதரர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். மக்கள் துன்பத்தில் இருக்கும்போது விரைந்து செயலாற்றுபவராக முதலமைச்சர் இருந்து வருகிறார்.

மீனவ சகோதரர்கள்மீது மரியாதை வைத்திருக்கிறார் என்பதை முதலமைச்சர் சொல்லாமல் சொல்லிவிட்டார். மீன் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்குப் பிடித்த உணவு என்றால் அது மீன்தான். மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டது. அப்போது மீன் உணவு சமைக்கப்பட்டது. அப்போது அவர்கள், `நாங்கள் மீன் உணவை அசைவம் என்று நினைப்பது இல்லை. சைவம் என்றுதான் நினைக்கிறோம்’ என்று குறிப்பிட்டார்கள்.

மீன்

முட்டையை சைவம் என்று சொல்லி பலர் இன்று அதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள் என்று நினைக்கிறேன். புதுச்சேரி முதலமைச்சர் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அவற்றையெல்லாம் நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் துணைநிலை ஆளுநராக இங்கு பணியாற்றிவருகிறேன். புதுச்சேரி கடல் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

ரூ.60 கோடியில் பாலம் கட்டித் தருவதாக உறுதியளிக்கப்பட்டு, அது இன்னும் கட்டப்படாமல் இருப்பதைப் பற்றி தெரிவித்தார்கள். அந்தப் பாலத்தின் வயது நூறு ஆண்டுகள். 1861-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம். ‘சாகர்மாலா திட்டத்தின்’ மூலம் அந்தப் பாலத்தைச் சீர்படுத்தி சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் நிர்மானிப்பதற்கான திட்டம் பரிசீலனையில் இருப்பதால், அது உடனடியாகக் கட்டப்படவில்லை. ரூ.60 கோடி செலவில் உடைந்த பாலத்தைக் கட்டித் தருவது சரியா… அல்லது உடைந்த பாலத்தைச் சீர்படுத்தி சரக்குக் கப்பல்கள் வரும் அளவுக்கு மேம்படுத்துவது சரியா என்பதுதான் கேள்வி.

ஆகவே, இங்கு எது தாமதப்படுத்தப்பட்டாலும் அது வரும் காலத்தில் பெரிய திட்டமாக மாற்றப்படுவதற்காகத்தான்  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரியில் கடல் சீற்றம் வந்தபோது நேரடியாகச் சென்று பார்த்தேன். அப்போதைய மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு.வீரந்தர் சிங் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, `புதுச்சேரியில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அத்தனை வகையிலும் உதவிகளைச் செய்ய முடியும்’ என்றார். ரவிச்சந்திரன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி ஆய்வுசெய்தார்.

குழு இங்கு வந்து ஆராய்ச்சி செய்து கடல் அரிப்பை நிச்சயமாகத் தடுப்பதற்கு அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்கள். அதற்கான மாபெரும் திட்டத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. கொஞ்ச தூரத்தில் தமிழகத்தில் உள்ளவர்கள் கல்லைக் கொட்டிவைத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் நடவடிக்கை எடுத்தால் அங்கே சில பிரச்னைகள் வரும் என்பதற்காக இரண்டு மாநிலங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் மூலம் கடல் அரிப்பைத் தடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரசில் ஏதாவது தாமதப்பட்டால் அது தாமதப்படுத்துவதற்காக அல்ல. அதை இன்னும் மேம்படுத்துவதற்காக என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் மீனவர்களுக்கான ஓய்வூதியத்தொகை, மானியம், விடுமுறை ஊதியம் என்று பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி அரசு நீலப் புரட்சிக்காகக் கையெழுத்திட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 42 கிலோமீட்டர் கடற்கரையை நீலப் பொருளாதார மண்டலமாக மாற்றுவதற்காக லட்சத்தீவு, புதுச்சேரியை மத்திய அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

அந்த அளவுக்கு மத்திய அரசு புதுச்சேரியின்மீது அக்கறையும் பாசமும் கொண்டிருக்கிறது. பாரதப் பிரதமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்தபோது ரூ.20,000 கோடிக்கு மீனவர் சகோதரர்களுக்காகத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் என்பதை நினைவுகூர வேண்டும். அரசு மக்கள் நலம் சார்ந்த அத்தனை திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. நிச்சயமாகச் செயல்படுத்தப்படும். புதுச்சேரியில் ஏதாவது தாமதப்படுத்தப்பட்டால் அது தடை அல்ல. அதை மேம்படுத்துவதற்கான முயற்சி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.