மும்பையில் கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பாந்த்ரா உட்பட 4 இடங்களில் ஜம்போ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த சிகிச்சை மையங்களை நடத்தும் பொறுப்பை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. லைஃப்லைன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் (Lifeline Hospital Management Services) என்ற நிறுவனம் தான் நான்கு ஜம்போ சென்டர்களை நடத்தும் ஒப்பந்தங்களை பெற்றது. ஆனால் இந்த நிறுவனத்துக்கு சுகாதாரத்துறையில் எந்த வித முன் அனுபவமும் கிடையாது. இந்த நிறுவனம் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்துக்கு மிகவும் நெருக்கமானதாகும். இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் மும்பையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ரெய்டில் கிடைத்த தகவலின் படி, ஜம்போ கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றிய டாக்டர்களின் எண்ணிக்கையை பல மடங்கு காட்டி மாநகராட்சியிடம் பணம் பெற்று இருப்பது தெரியவந்தது. மும்பையில் செயல்பட்டு வந்த நான்கு ஜம்போ சென்டர்களிலும் பணியாற்றியதாக கூறி லைஃப்லைன் நிறுவனம் மாநகராட்சிக்கு கொடுத்த டாக்டர்கள் பட்டியலில் 80 சதவிகிதம் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், “லைஃப்லைன் நிறுவனம் 150 டாக்டர்களின் சான்றிதழ்களை மாநகராட்சியிடம் கொடுத்திருக்கிறது.

ஆனால் அவை முறையாக சரிபார்க்கப்படவில்லை. சில டாக்டர்கள் ஒரு சில மாதங்கள் மட்டுமே பணியாற்றி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றியதாக கூறி மாநகராட்சியிடம் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி லைஃப்லைன் நிறுவனம் மட்டும் 22 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து பெற்று இருக்கிறது. லைஃப் லைன் நிறுவனம் செயற்கையாக நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி அதன் மூலமும் பணம் வசூலித்து இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம்.

நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி டாக்டர்களின் தேவை அதிகமாக இருப்பதாக காரணம் காட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அது தொடர்பான தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம். போலி நோயாளிகள் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள ரெய்டில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். லைஃப்லைன் நிறுவனத்தை போன்று மற்ற ஒப்பந்ததாரர்களும் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் லைஃப்லைன் நிறுவனம் மட்டும் 38 கோடி அளவுக்கு பயனடைந்திருக்கிறது” என்றார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். லைஃப்லைன் நிறுவனத்திற்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை ஆசாத் மைதானம் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

உத்தவ் தாக்கரே

அந்த வழக்கின் அடிப்படையில்தான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் 4 வீடுகள் வாங்கியது தொடர்பாக ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமான சூரஜ் சவானிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஆனால் அவர் இரண்டு வீடு வாங்கியதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ள மற்ற இரண்டு வீடுகளில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் சூரஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மழை முடிந்தவுடன் மும்பை மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே அணியில் இருந்து ஆட்களை தனது பக்கம் இழுத்து வருகிறார். அவ்வாறு வராதவர்களுக்கு எதிராக போலீஸார் மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.