சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக ஜூன் 14-ம் தேதி அதிகாலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தனர்.

Senthil Balaji: செந்தில் பாலாஜி

ஆனால், கைதுசெய்யப்பட்ட உடனே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக துடித்த செந்தில் பாலாஜி, உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவர்களால் செந்தில் பாலாஜிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவல் இன்று முடிவுக்கு வந்ததையடுத்து, காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணையில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி – நீதிபதி அல்லி

அப்போது நீதிபதி அல்லி, `எப்படி இருக்கிறீர்கள்’ என செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்தார். அதற்கு `வலியோடு இருக்கிறேன்’ என செந்தில் பாலாஜி பதிலளித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி தொடர்பாக அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருபக்கம் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.