சென்னையின் மிகப் பழைமையான பாலங்களுள் நேப்பியர் பாலமும் ஒன்று. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தப் பாலம். 1869-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த பிரான்சிஸ் நேப்பியரால் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. எனவே அவரின் நினைவாக இந்தப் பாலத்துக்கு `நேப்பியர் பாலம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.

489 அடி நீளமும், 56 அடி அகலமும் கொண்ட இந்த கான்கிரீட் பாலம், சமீபத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட்டுக்காக செஸ்போர்டு போன்று கறுப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது. அதிலிருந்து இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் நேப்பியர் பாலம் தொடர்பான புகைப்படங்கள், செல்ஃபிகள் மற்றும் வீடியோக்கள் படுவைரலாகின.

நேப்பியர் பாலம்

இங்கு பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடப்பதற்கு ஏற்ற வகையில், 2 மீட்டர் அகலத்தில் பாலத்தின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த இடம் சற்றே ஆபத்தான நிலையில் இருக்கிறது. நடைபாதையில் இருக்கும் தடுப்புச் சுவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் துருப்பிடித்தும், சுவர் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தும் காணப்படுகின்றன. மேலும் நடைபாதையின் தரையில் ஆங்காங்கே பெரிய ஓட்டைகள் இருந்திருக்கின்றன, சமீபத்தில்தான் அவற்றைச் சரி செய்திருக்கிறார்கள்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி சமீரிடம் பேசியபோது, “பாலத்தின் இந்த நிலை எங்களது கவனத்துக்கு வந்ததும் இன்ஜினீயர்கள் மற்றும் டெக்னிக்கல் டீமோடு பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நடைபாதையின் ஒரு பகுதியில் தரைப் பகுதிகளைச் சரி செய்யும் பணி இன்று தொடங்கப்படவிருக்கிறது. தடுப்புச் சுவர்களைச் சரி செய்வதற்கான பணிகளுக்கு டெண்டர் பேசப்படவிருக்கிறது. விரைவில் தடுப்புச் சுவர்களைச் சரிசெய்வதற்கான பணிகளும் நடக்கும். ஒரு மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிவடைந்து மக்கள் பயன்படுத்த ஏதுவானதாக மாறும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.