வைரமுத்துவிடம் தங்கப்பேனா, விஜய்யிடம் வைர நெக்லஸ் எனப் பரிசுகள் பெற்ற பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினி. “தொடர் பரிசுகள், பாராட்டுகள் எப்படி இருக்கிறது?” நந்தினியிடம் பேசினேன்…

“விஜய் சாரை மீட் பண்ணினது ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள் சொல்லி வைர நெக்லஸை போட்டுவிடச் சொன்ன, அந்த நிமிஷத்தை மறக்கவே மாட்டேன். அப்படியொரு, அற்புதமான தருணம் அது. மாவட்டம்தோறும் நல்ல மார்க் எடுத்த எல்லா மாணவர்களையும் விஜய் சார் சந்திக்கப்போறார்ங்கிறது மட்டும்தான் தெரியும். நெக்லஸ் எல்லாம் கொடுப்பாருன்னு எதிர்பார்க்கவே இல்லை. பெரிய சர்ப்ரைஸ் பண்ணிட்டார். நான் இதுவரைக்கும் தங்கத்துல நெக்லஸ் போட்டதே இல்லை. அதெல்லாம் வாங்குறதுக்கு வசதியும் கிடையாது. எல்லாமே கனவாத்தான் இருந்திருக்கு. ஆனா, என்னோட கல்வி என்னைக் கைவிடவில்லை.

விஜய்யுடன் நந்தினி

எனக்கு வைர நெக்லஸை, அதுவும் விஜய் சார் கையால கொடுக்க வெச்சிருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு. விஜய் சாரை இதுவரைக்கும் படங்களில்தான் பார்த்திருக்கேன். அவரோட, ‘மெர்சல்’ ரொம்பப் பிடிக்கும். சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொன்ன படம் அது. படத்துல எப்படி, நல்ல விஷயங்கள் செய்து ஹீரோவா இருக்காரோ நிஜத்திலும் ஹீரோவாத்தான் இருக்கார். எங்க மாணவர்கள் மேல அக்கறையா இருக்கறதுலேயே தெரிஞ்சிக்கலாம். எங்களை ஊக்கப்படுத்தணும்னு கோடி கணக்குல செலவு பண்ணி பெரிய விழாவே எடுத்திருக்கார். அவர், பாராட்டினதுல இன்னும் சாதிக்கணும்ங்கிற ஊக்கம்தான் கிடைச்சிருக்கு.

விஜய் சார் கொடுத்த வைர நெக்லஸோட விலை ரெண்டு, மூனு லட்சத்துக்குமேல இருக்கும்னு சொல்றாங்க. என் கல்விக்காக கிடைச்சப் பரிசு இது. அதனால, வைர நெக்லஸை கடைசிவரைக்கும் பொக்கிஷமா பாதுகாப்பேன். அப்பா, அம்மா எல்லோரும் இந்த நெக்லஸ் நாங்க கேக்கவே மாட்டோம். உனக்குதான்னு சொல்லிருக்காங்க. ஊர்க்காரங்கல்லாம் வந்து வாழ்த்து சொல்லிட்டுப் போறாங்க. இதுக்காக, விஜய் சார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சார், திண்டுக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் தர்மா சார் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவிச்சிக்குறேன்” என்கிறவர், விஜய் மேடையில் மாணவர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும் ஆச்சர்யமுடன் பேசுகிறார்.

விஜய்

“விழா முடியுற வரைக்கும் எல்லா மாணவர்களும் அங்கதான் இருந்தோம். விஜய் சாரும் கடைசிவரை நின்னு எல்லா மாணவர்களுக்கும் பரிசுகளைக் கொடுத்துக்கிட்டே இருந்தார். அவரால எப்படி அவ்ளோ நேரம் நிக்க முடிஞ்சதுன்னு தெரியல. அதுவும், மேடைக்கு வந்ததிலிருந்து சாப்பிடக்கூட போகவே இல்ல. பசியோடவே நின்னு மாணவர்களையும், அவங்கக் குடும்பத்திரையும் கனிவா அன்பா நலம் விசாரிச்சாரு. அதேபோல, மாணவர்கள் எந்தமாதிரி போட்டோ எடுத்துக்க விரும்பினாங்களோ, கொஞ்சம்கூட முகம் சுளிக்காம போஸ் கொடுத்தார். இதெல்லாம் பார்த்து விஜய் சார்மேல இருக்கிற மதிப்பு இன்னும் அதிகமாகிடுச்சு. எங்க, அப்பா அம்மா பிரமிச்சுப் போய் நின்னுட்டாங்க. உண்மையிலேயே விஜய் சார்தான் ரியல் ஹீரோ” என்று பிரமிப்பு விலகாதவராய் பேசும் நந்தினி, கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.காம் படிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.