பஞ்சாப்பில் எட்டு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, கடவுளுக்கு நன்றி சொல்ல கோயிலுக்குச் சென்ற தம்பதி, போலீஸார் விரித்த எளிய வலையில் வசமாகச் சிக்கினர்.

முன்னதாக கடந்த 10-ம் தேதியன்று பஞ்சாப்பின் லூதியானாவிலுள்ள நிதி மேலாண்மை நிறுவனத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த கொள்ளைச் சம்பவத்தின்போது ஆயுதமேந்திய கொள்ளையர்கள், அங்கிருந்த காவல்துறையினரை மிரட்டி சுமார் எட்டு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர் இந்த விவகாரத்தில் லூதியானா போலீஸார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர்.

லூதியானா போலீஸ்

அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மந்தீப் கவுர், ஜஸ்விந்தர் சிங் எனும் தம்பதியைக் கண்டுபிடிக்க போலீஸார் திட்டம் தீட்டினர். இதற்கிடையில், மந்தீப் கவுரும், ஜஸ்விந்தர் சிங்கும் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல திட்டம் போட்ட விஷயம் போலீஸாருக்குத் தெரிந்துவிட்டது. பின்னர் அந்தத் திட்டத்தை மாற்றிய தம்பதி, கொள்ளை வெற்றிகரமாக முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லும்விதமாக, உத்தரகாண்டிலுள்ள சீக்கிய புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப்புக்கு யாத்திரை சென்றுவிட்டு, அடுத்தடுத்து கேதார்நாத், ஹரித்வார் ஆகிய இடங்களுக்குச் செல்ல திட்டம் போட்டனர்.

அதையறிந்துகொண்ட போலீஸார், மந்தீப் கவுரையும், ஜஸ்விந்தர் சிங்கையும் கைதுசெய்யும் திட்டத்தில் அவர்களுக்கு முன்பாகவே ஹேம்குந்த் சாஹிப்புக்குச் சென்றுவிட்டனர். போலீஸார் எதிர்பார்த்தபடியே தம்பதியினரும் வந்தனர். ஆனால் அங்கு பக்தர்கள் கூட்டத்தில் பலரும் முக்காடு போட்டு வந்ததில் தம்பதியைக் கண்டுபிடிப்பது போலீஸுக்கு பெரும் சவாலாகிவிட்டது. உடனே வேறொரு திட்டம் போட்ட போலீஸார், அங்கு வந்த பக்தர்களுக்கு இலவசமாக குளிர்பானங்கள் வழங்கும்விதமாக ஆங்காங்கே பந்தல்கள் அமைத்தனர். தம்பதிக்காக போலீஸாரும் மாறுவேடத்தில் பந்தல்களில் காத்திருந்தனர். போலீஸின் திட்டங்கள் எதுவும் அறியாத தம்பதி, போலீஸார் எதிர்பார்த்தபடியே இலவசமாக குளிர்பானத்தை வாங்க பந்தலுக்கு வந்தனர்.

மந்தீப் கவுர், ஜஸ்விந்தர் சிங் தம்பதி

குளிர்பானத்தை வாங்கிய தம்பதி அதைப் பருக முக்காடை எடுத்தபோது, இதற்காகவே காத்திருந்த போலீஸார் உடனடியாக அவர்களை அடையாளம் கண்டனர். இருந்தும் அவர்கள் பிரார்த்தனையை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்த போலீஸார், பிரார்த்தனை முடித்துவிட்டு அவர்கள் கோயிலிலிருந்து வெளியே வந்ததும், இருவரையும் மடக்கிப்பிடித்தனர். அந்த இடத்திலேயே தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சத்தை போலீஸார் மீட்டனர். பின்னர் தம்பதியை பஞ்சாப்புக்கு அழைத்துவந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி ரூ.6 கோடியைக் கைப்பற்றினர். அதோடு இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது போரையும் போலீஸார் கைதுசெய்தனர். கொள்ளையர்களைச் சிறப்பாகத் திட்டம்போட்டு கைதுசெய்ததற்காக பஞ்சாப் போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.