ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்களுக்கான மாநாட்டில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கவுரையாற்றினார். அப்போது, `தமிழ்நாட்டின் கல்வி முறையில் சிக்கல் இருப்பதாகவும், புதிய கல்விமுறைதான் அதற்கான தீர்வாக இருக்கும் எனவும், இளைஞர்களின் திறனுக்கேற்ற கல்வி அளிக்கப்படுவதில்லை, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப தமிழ்நாட்டை வடிவமைக்க வேண்டும்’ எனக் குற்றச்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,” ஆளுநர் முழு அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். தமிழ்நாட்டை தமிழகம் என வரையறுத்து தமிழ்நாட்டு மக்களிடம் சிக்கியது, ஏழு பேர் விடுதலை குறித்த ஆளுநரின் நிலைப்பாடு இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டது. `திராவிடம்’ எனும் சொல்லே அவருக்கு ஒவ்வாமையாக இருப்பது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளிலிருந்து தெரியவருகிறது.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மறைமுகமாகப் பேசி, துணைவேந்தர்கள் மாநாட்டை அரசியல் மாநாடாக மாற்றியிருக்கிறார். சிதம்பரத்தில் பால்ய விவாகம் நடக்கவில்லை. தீட்சிதர்கள்மீது தேவையில்லாமல் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து கொடுமைபடுத்துவதாகத் தெரிவித்திருந்தார். ஆளுநர் அத்துமீறி பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்தியாவிலுள்ள தலைசிறந்த 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளின் தரம் சிறப்பாக இருக்கிறது. வெளிநாடு சென்றுவந்தால் முதலீடு வந்திடுமா எனக் கேள்வியெழுப்புகிறார். கடந்த ஜனவரி 2022 லிருந்து ஏப்ரல் 2023 வரை தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்த்து, ஒரு லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். `நான் முதல்வர் திட்டம்’ மூலம் 14 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.

இளைஞர்களின் கல்வித்தரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இளைஞர்களின் கல்வித்தரம் சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட முக்கியக் காரணங்களில் ஒன்று இங்கிருக்கும் இளைஞர்களின் திறமைதான். அவரின் தொடர் அவதூறுகளுக்கு வழக்கு தொடரும் எண்ணம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.