உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர், வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிடமாட்டார்கள் என்றும் உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். முதல்வர் சமீபத்தில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட நிலையில், ஆளுநரின் பேச்சு இதனை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், ஆளுநரின் பேச்சு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் அவரைத்தான் மையமிட்டு இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார் என்கிற வாதத்தை முன் வைக்கிறார்கள் தி.மு.க-வினர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

இதற்கிடையே ஆளுநரின் விமர்சனத்து பதில் அளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலீடுகளை பெற முதல்வர் வெளிநாடு சென்றதை ஆளுநர் கொச்சப்படுத்துவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டு முதல்வர் மட்டுமல்ல, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார். எங்களை நோக்கி ஆளுநர் எய்யக்கூடிய அஸ்திரங்கள் எல்லாம் பிரதமரை நோக்கி எய்யப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இது குறித்து ஆளுநரை நோக்கி பாஜக கேள்வி எழுப்ப வேண்டும்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதையே ஆமோதித்து பேசிய திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன், “முதல்வர் முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். இதுவரை 2 லட்சத்து 80ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் 14-வது இடத்திலிருந்த தொழில் முதலீடு இன்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. அதேபோல் பி.எஃப் அலுவகலம் கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தின் படி 28 லட்சம் பேருக்கு தமிழ்நட்டில் புதிதாக வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. நேரடியாக இத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது எனும் போது மறைமுகமாக எவ்வளவு வேலை வந்திருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

தமிழ் கா.அமுதரசன்

வெளிநாடுகளுக்கு செல்வதால் அங்கு முதலீடுகளை ஈர்க்க முடியாது என்று சொல்ல கூடிய ஆளுநர், இதே காரணத்தை மோடியிடமும் சொல்வாரா. 5,800 கோடி ரூபாய்க்கு தனி விமானம் எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் அதானியோடு டூர் போய் கொண்டிருந்த மோடியை பார்த்து கேட்கும் துணிவு ஆளுநருக்கு இருக்கிறதா. மாநில அரசிடம் மட்டும் கேட்பது என்று சொன்னால் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஜெண்டா என்ன?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகம் படித்த இளைஞர்கள், பி.எச்.டி படித்த பெண்கள் என முன்னிலை வகிக்கிறார்கள். பெண்கள் அதிகமாக வேலைக்கு போவதும் தமிழ்நாட்டில்தான். வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய கல்வி தமிழ்நாட்டில் இல்லை என்று ஆளுநர் சொல்வது அபத்தம் மட்டும் கிடையாது, அயோக்கியத்தனமும் கூட. ஆளுநரின் இது போன்ற உளரல்களை தமிழ்நாடு இனிமேலும் பொறுத்து கொண்டிருக்காது என எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “ஆளுநர் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி குறித்து சிறப்பாக பேசி இருக்கிறார். காமராஜர் காலம் தொடங்கி கல்வி கட்டமைப்பை சிறப்பாக தமிழ்நாடு செய்திருக்கிறது என்பதெல்லாம் சொல்லி, மிகச்சிறந்த மாநிலமாக, உற்பத்தி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். தற்போது கல்வி கற்பவர்களில் தேசிய சராசரியைவிட நாம் அதிகமாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் இருக்க கூடிய தொழிலதிபர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்பதை தெளிவாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் மாணவர்களுக்கு முறையான தாய் மொழி கல்வி இல்லாததே. தாய் மொழியில் மாணவர்களுக்கு புரியும்படி சொல்லி கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்கிறார். தமிழ் மொழியை மாணவர்களிடம் ஆளுநர் – வேந்தர் திணிக்கிறார் என திமுக-வினர் அச்சப்படுகிறார்களா. அதிக அளவு தமிழ் மொழி மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கிறதா திமுக.

என்னதான் முதலீடுகளை கவர்வதற்கு வெளிநாடுகளுக்கு சென்றாலும், இங்கு முறையான கட்டமைப்பை பெருக்கி கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல் மனித ஆற்றலை, தொழில் முன்னேற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொன்னால், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை பெருக்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் குறித்தும், தமிழ்நாடு குறித்தும், தமிழ் மக்கள் குறித்தும் ஆளுநர் மிக மிக அக்கரையோடு பேசியிருக்கிறார். இதை வழக்கம் போலவே அவர் பேசியதிலிருந்து ஒரு வரியை வைத்துக் கொண்டு விளையாடி கொண்டிருப்பது கடுமையாக கண்டிக்க கூடியது.

ஆளுநர் ரவி

ஆளுநர் கூறியதை முறையாக நேர்மறையாக எடுத்துக் கொண்டு, ஆளுநர் கூறியபடி தமிழ் மொழியை, தமிழகத்தை செழிக்க வைக்க வேண்டிய விஷயத்தில் இறங்க வேண்டும். இது முதல்வரை கண்டித்து சொல்லவில்லை. அவர் மீதுள்ள அக்கறையில் சொல்லியது. ஏனென்றால் துணை வேந்தர்கள் மநாட்டில், ‘முதல்வர் முதலீடுகளை ஈர்க்க அவ்வளவு தூரம் சென்றாலும் கூட அதற்கேற்ற சூழலை, கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது’என்று அவர் சொன்னதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஆளுநரிடம் சண்டைபிடிப்பதில் சிறிதளவும் உடன்பாடு கிடையாது. எதற்காக ஆளுநர் சொன்னார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.