டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். மேட்டூர் அணையை வரும் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணி குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறியவிருக்கிறார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மலர்விழி, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில், கொரோனா பேரிடர் சமயத்தில் கிருமிநாசினி கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததன் பெயரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரசீது அச்சடிப்பதிலும் மோசடி நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
“இந்த சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சதி” – கொதித்த பாஜக
ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, “இந்த சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சதி. இந்த சம்பவம் நடந்தது வேறு மாநிலமாக இருக்கும் போது நேற்று முதல் ஏன் இவ்வளவு பீதியடைந்துள்ளனர்.

சிபிஐ விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்? போலீஸார் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகள் இருவரின் போன்களையும் ஒட்டு கேட்டனர். இரண்டு ரயில்வே அதிகாரிகளின் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரிந்தது? உரையாடல் எப்படி கசிந்தது. இதுவும் சிபிஐ விசாரணையில் வரவேண்டும். வரவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார்.
`அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி’

தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆனது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறக்கூடும். பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது மேலும் வலுபெறவும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.