ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். `மத்திய ரயில்வேதுறை அமைச்சரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. அதனால் அவர் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாகச் சாடின. இதற்கிடையே, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சி.பி.ஐ) ரயில்வே வாரியம் பரிந்துரை செய்யவிருப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

ஒடிசா ரயில் விபத்து – Odisha Train Accident

இதை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், “சி.பி.ஐ என்பது குற்றங்களை விசாரிப்பதற்காகவே தவிர, ரயில் விபத்துகளை விசாரிக்க அல்ல. தொழில்நுட்ப, நிறுவன மற்றும் அரசியல் தோல்விகளுக்கு சி.பி.ஐ அல்லது வேறு எந்தச் சட்ட அமலாக்க நிறுவனமும் பொறுப்பேற்க முடியாது. மேலும், ரயில்வே பாதுகாப்பு, சிக்னலின் குளறுபடி, பராமரிப்பு நடைமுறைகளில் சி.பி.ஐ-க்கு எந்தத் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை.

சி.பி.ஐ-யிடம் இதை ஒப்படைப்பதன் மூலம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வேதுறையில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிகிறது. மேலும், ஏற்கெனவே இந்த விபத்துக்கான மூலக் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அவர் தெரிவித்தப் பிறகும், இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ்

இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு கான்பூரில் ரயில் தடம்புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர். அது குறித்து விசாரணை நடத்துமாறு அப்போதைய ரயில்வே அமைச்சர் தேசிய புலனாய்வு அமைப்பிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, 2017-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ‘கான்பூர் ரயில் தடம்புரண்ட விபத்தில் சதி இருக்கிறது’ என பிரதமரான நீங்கள்கூட அறிவித்தீர்கள். மேலும், அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தேசத்துக்கு உறுதியளித்தீர்கள்.

ஆனால், 2018-ல், என்.ஐ.ஏ விசாரணையை முடித்துவிட்ட பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய மறுத்தது. அந்த விபத்து தொடர்பான விஷயத்தில் தேசம் இன்னும் பதில் இல்லாமல்தான் இருக்கிறது. அப்படியானால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய கான்பூர் விபத்தில் 150 பேர் இறந்ததற்கு யார் பொறுப்பு… அதேபோலத்தான் தற்போதும், ரயில்வேதுறையில் தேவையான நிபுணத்துவம் இல்லாத என்.ஐ.ஏ போன்ற மற்றோர் அமைப்பிடம் இந்த விபத்து குறித்து விசாரிக்க தீர்மானிக்கும் இந்த முயற்சிகள் எங்களுக்கு 2016-ஐப்போல திசைதிருப்பும் நிகழ்வையே நினைவூட்டுகின்றன.

ஒடிசா ரயில் விபத்தில் மரணித்தவர்கள்

மேலும், இதன் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால் மரணித்தவர்களின் உயிருக்கான நீதியைக் காக்க உங்கள் அரசுக்கு எந்த நோக்கமும் இல்லை என்பது தெரிகிறது. அதே சமயம் இந்த விபத்துக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்க்கவும், இந்த விவகாரத்தை திசைதிருப்பும் தந்திரங்களையும் நீங்கள் கண்டறிந்துவிட்டதாகவே அறிகிறேன்.

ரயில்வே அமைச்சரின் வெற்றுப் பாதுகாப்புக் கூற்றுகள் அனைத்தும் இப்போது அம்பலமாகிவிட்ட நிலையில், இந்தப் பாதுகாப்பு சீர்கேடு குறித்து சாமானிய பயணிகள் மத்தியில் கடும் கவலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த பயங்கர விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டியது அரசின் கடமையாகும். பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பாலசோரில் நடந்ததைப் போன்ற விபத்து மீண்டும் நிகழாமல் இருக்கவும், ரயில்வே வழித்தடங்களில் கட்டாய பாதுகாப்புத் தரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிப்பதே மிக முக்கியமான அடிப்படையாகும்.

மல்லிகார்ஜுன கார்கே – ராகுல் காந்தி

ரயில்வேதுறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, செய்திகளில் இடம்பெற நிறைய வித்தைகள் உங்கள் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில்வேயை மிகவும் பயனுள்ளதாகவும், மேம்பட்டதாகவும், மேலும் திறமையாகவும் மாற்றுவதற்கு பதிலாக, மாற்றாந்தாய்போல அதன் நிர்வாகம் நடத்தப்படுகிறது. இதற்கிடையில், தொடர்ந்து தவறான முடிவெடுப்பது ரயில் பயணத்தைப் பாதுகாப்பற்றதாக ஆக்கியிருக்கிறது. அதனால் எங்கள் மக்களின் பிரச்னைகள் அதிகரிக்கின்றன.

உண்மையில், இந்தத் துயரமான விபத்து நடந்த கிழக்குக் கடற்கரை ரயில்வேயில் முக்கிய அதிகாரிகளின் சுமார் 8,278 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பிரதமர் மோடி முக்கியப் பணி நியமனங்களில்கூட அக்கறையின்மை மற்றும் அலட்சியம் காட்டியது ஏன்… 1990 காலகட்டத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமான ரயில்வே ஊழியர்கள் இருந்தனர், அது இப்போது சுமார் 12 லட்சமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 3.18 லட்சம் பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்து

காலியாக இருக்கும் பதவிகள் SC/ST/OBC மற்றும் EWS பிரிவைச் சேர்ந்தவர்களின் உறுதிசெய்யப்பட்ட வேலைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இவ்வளவு அதிகமான காலியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை… பணியாளர்கள் பற்றாக்குறையால், பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியமானவர்களாகக் கருதப்படும் லோகோ பைலட்டுகள் அதிக நேரம் வேலை செய்கின்றனர். அதனால் அவர்களின் பணிச்சுமை விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பணியிடங்கள்கூட ஏன் இன்னும் நிரப்பப்படவில்லை?

கர்நாடகாவைத் தளமாகக் கொண்ட தென்மேற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளர் பிப்ரவரியில், `சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சிக்னல் செயலிழந்ததால் விபத்தில் சிக்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது’ என சிக்கலை எடுத்துக்காட்டி தனது சிக்னலிங் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தை, இந்த முக்கியமான எச்சரிக்கையை ரயில்வே அமைச்சகத்தால் எப்படி புறக்கணிக்க முடிந்தது?

பிரதமர் மோடி

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (CRS) பரிந்துரைகள்மீது ரயில்வே வாரியத்தின் முழுமையான அக்கறையின்மை மற்றும் அலட்சியத்தை விமர்சித்திருக்கிறது. 2017-18 மற்றும் 2020-21-க்கிடையில் நாடு முழுவதும் ஏற்பட்ட தொடர்ச்சியான ரயில் விபத்துகளில் கிட்டத்தட்ட மூன்று ரயில் விபத்துகள் தடம்புரண்டதால் ஏற்பட்டதாக இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) சமீபத்திய தணிக்கை அறிக்கை கூறுகிறது. இந்தக் கொடிய எச்சரிக்கைக் கொடிகளும் புறக்கணிக்கப்பட்டதா?

`ரக்‌ஷா கவச்’ என்று முதலில் பெயரிடப்பட்ட ரயில்-மோதல் தடுப்பு அமைப்பைச் செயல்படுத்துவதற்கான முந்தைய அரசின் திட்டங்கள் ஏன் பரணையில் வைக்கப்பட்டன… உங்கள் அரசு இந்தத் திட்டத்தை ‘கவச்’ என்று பெயர் மாற்றி, மார்ச் 2022-ல், ரயில்வே அமைச்சரே மறுபெயரிடப்பட்ட திட்டத்தை ஒரு புதிய கண்டுபிடிப்பாக முன்வைத்தார்.

பிரதமர் மோடி – ரயில்வே துறை அமைச்சர்

ஆனால் இந்திய ரயில்வேயின் 4 சதவிகித வழித்தடங்களில் மட்டுமே இதுவரை ‘கவச்’ பயன்படுத்தப்படுகிறது. முழுமையாக ஏன் அதைப் பயன்படுத்தவில்லை… ரயில்வேதுறையையும் விமானத்துறைபோல தனியார்மயமாக்கலைத் தூண்டுவதற்காக ரயில்வேயின்மீது கவனக்குறைவு செய்யப்படுகிறதா… இந்தக் கேள்விகளுக்கு நாட்டுமக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் கார்கே.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.