வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஏன் நம் இலக்குகளை பாதியில் கைவிடுகிறோம்:
நம்மில் பலரும் சிறிய இலக்குகள், பெரிய இலக்குகள் என்று நாம் வாழ்வில் சிலவற்றை அவ்வப்போது நிர்ணயிக்கின்றோம். ஆனால் அணைத்து இலக்குகளையும் நம்மால் அடைய முடிவதில்லை, பலவற்றை பாதியிலேயே கைவிடுகிறோம்.
இவ்வாறு நாம் செய்வதால் புதிய இலக்குகளை நிர்ணயிக்க நாம் தயங்குகிறோம், இது நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகிறது.
சரி, ஏன் நம் இலக்குகளை பாதியில் கைவிடுகிறோம்?

1. நாம் எல்லாவற்றையும் விரைவாக பெற விரும்புகிறோம்
பல மனிதர்கள் எப்போதுமே தாங்கள் நினைப்பது நினைத்தவுடன் நடந்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்கின்றனர். உதாரணத்திற்கு, ஒருவர் உடற்பயிற்சி செய்து உடலை பிட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிக்கிறார், மிகுந்த ஆர்வத்துடன் ஜிம் செல்கிறார்.
ஒரு மாத காலம் உடற்பயிற்சி செய்கிறார், இப்பொது கண்ணாடி முன் சென்று தன் உடலை பார்க்கிறார். ஒரு மாற்றமும் தெரியவில்லை. ‘என்ன இது இவ்வளவு நாள் ஜிம் போறோம் இன்னும் நம்ம ஒடம்பு மாறவே இல்லையே !!’ என்ற எண்ணம் தோன்றுகிறது, அவ்வளவுதான் கொஞ்சம் கொஞ்சமாக உடற்பயிற்சி செய்வது குறைகிறது, இறுதியில் ஜிம் செல்வதையே நிறுத்தி விடுகிறார்.
இங்கே இலக்கு கைவிடப்பட்டது. இதுவே அவர் பொறுமையாக இருந்து ஆறு மாத காலம் வரை சீரான உடற்பயிற்சி செய்வோம் என்ற எண்ணத்தில் இருந்திருந்தால் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்திருக்கும் அது அவருக்கு மேலும் ஊக்கமளித்திருக்கும்.
நம் இலக்குகளை அடைய எப்போதும் பொறுமை அவசியம்.
2. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்
நாம் விரும்பும் செயல்களை கூட நம்மால் செய்ய முடிவதில்லை, காரணம் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ? ஏதேனும் சொல்வார்களோ? என்ற பயம். இவ்வாறு நாம் நினைப்பதால் நம்மை அறியாமலே நாம் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். ஒன்றை மட்டும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் நாம் எதை செய்தலும் சரி, ‘யாராவது எதையாவது சொல்லிட்டேதான் இருப்பாங்க’.
அதனால் நாம் மற்றவர்களை பற்றி ஒருபோதும் கவலை பட தேவையில்லை.

ஒருவருக்கு எழுதவேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் மற்றவர்கள் படித்துவிட்டு நன்றாக இல்லை என்று சொன்னால் என்ன செய்வது? ஏதேனும் பிழை இருந்தால் நகைப்பார்களே என்று வருத்தத்தோடு பல முறை எழுத முயன்றும் அவர் எழுதவில்லை.
இங்கே இலக்கு பிறகும் முன்பே இறந்து விட்டது. மாறாக அவர், நம்மை பற்றி யார் என்ன நினைத்தால் என்ன, எழுத்தாளன் ஆக வேண்டும் என்பது என் இலக்கு என்றெண்ணி எழுத தொடங்கியிருந்ததால் அவருள் ஒளிந்திருந்த சிறந்த எழுத்தாளனை அவர் இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கலாம்.
3. ஒழுக்கமும் நிலைத்தன்மையும் இல்லாமை
எந்த ஒரு இலக்கையும் நாம் அடைய அதில் நாம் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும், அதுமட்டுமல்லாது நிலையாக அந்த இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
தினமும் ஒரே இடத்தில உக்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் மூர்த்திக்கு அடிக்கடி உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. நடைப்பயிற்சி செய்யுங்கள் அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகும் இந்த வலி எல்லாம் குறையுமென்று மருத்துவர் கூறிவிட்டார்.

மூர்த்தி தினமும் காலை நேரமாக எழுந்து நடைப்பயிற்சிக்கு செல்லலாம் என்ற இலக்கை முடிவு செய்கிறார். ஒரு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செல்கிறார், நான்காவது நாள் கால் வலிக்கிறது, நேரமாக காலையில் நடைப்பயிற்சிக்கு செல்ல கஷ்டமாக இருக்கிறது சரி ஒரு நாள் தானே இன்று வேண்டாம் நாளை செல்வோம் என்று நினைக்கிறார். நாளை நிச்சயமாக செல்வாரா? என்பது சந்தேகம்தான்.
இதுவே அவர், இப்போது தானே நடைப்பயிற்சி செல்ல ஆரமித்திருக்கிறோம், கால் வலிக்கத்தான் செய்யும், கஷ்டமாகத்தான் இருக்கும், இருப்பினும் நம் இலக்கை நோக்கி நகர்வோம் என்றெண்ணிருந்தால் அவர் உடலில் நல்ல முன்னேற்றம் இருந்திருக்கும்.
4. எழுதப்பட்ட திட்டங்கள் இல்லை
நம்மிடம் ஓர் இலக்கு இருக்கலாம் ஆனால் அதை எப்படி அடைவது என்ற திட்டம் இல்லை என்றால் நாம் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அவசர கால நிதியை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயிக்கிறார் ரமேஷ். மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். சரி, “நம்ம செலவு போக மிச்சம் இருக்கறத சேர்த்து வைப்போம், இன்னும் 3 வருஷம் இருக்கே!” என்றெண்ணுகிறார்.

ஆனால் அவர் நினைத்ததுபோல் நடக்கவில்லை, செலவுகள் எல்லாம் போக சேமிக்க பணம் மிச்சம் இருந்ததே இல்லை, இதன் முடிவு அவர் தன் இலக்கை அடையவில்லை.
காரணம் தெளிவான திட்டத்தை அவர் எழுதவில்லை, மாதம் எவ்வளவு வரவு, எவ்வளவு செலவு, எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை கணக்கிடவில்லை. அவர் எந்த ஒரு சேமிப்பு திட்டத்திலும் தன் பணத்தை சேமிக்க வில்லை, சேமித்த பிறகு மிச்சம் இருப்பதை செலவு செய்வோம் என்று நினைக்கவில்லை.
எழுதப்படாத திட்டங்கள் பெரும்பாலும் நிறைவடைவதில்லை.
5. நம்பிக்கையின்மை
நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் நம்மால் எதையும் சாதிக்க இயலாது. நம்பிக்கையின்மை என்பது நாம் நிர்ணயித்த இலக்கை நம்மால் அடைய முடியாது அது நடக்காது என்றெண்ணும் எதிர்மறை சிந்தனையாகும்.
பல முறை நாம் முயற்சி செய்திருக்கலாம், பல முறை தோல்வி அடைந்திருக்கலாம் அதற்காக நாம் நம்பிக்கையை இழக்க கூடாது.

மாறாக ஏன் நாம் தோல்வி அடைந்தோம்? ஏன் என் இலக்கை என்னால் அடைய முடியவில்லை? என் முயற்சியில் என்னென்ன தவறுகள் நான் செய்தேன்? என்று சிந்தித்து அந்த தவறுகளை சரி செய்து, மீண்டும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது நிச்சயமாக நம் இலக்கை அடைய முடியும்.
“இலக்கு என்பது முன்னேற்றத்தின் முதல் படி”
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.