புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார். கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா

இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார். அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், விநாயகர் சிலை தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவிய தகவல் தொடர்பாக விளக்கம் அளித்த மாவட்ட நிர்வாகம், “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது, உடைந்துவிட்டதாக தவறான தகவல் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று… அது உடையாமல் நல்ல நிலையில் இருக்கிறது.

விநாயகர் சிலை

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மதச்சார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின்மீது மதச்சாயம் பூச முயலும் செயலாகும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கவும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இந்தச் செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியைப் பரப்புவோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில், சைபர் க்ரைம் போலீஸில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் வாட்ஸ்அப்பில் அந்த விநாயகர் சிலையின் படம் மற்றும் தகவலைப் பரப்பிய செல்போன் எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக பா.ஜ.க-வினர், “முகாம் அலுவலக வளாகத்திலிருந்த விநாயகர் சிலையை அகற்றிவிட்டு, அவசர, அவசரமாக தோட்டத்தில் புதிய பீடம் அமைத்து விநாயகர் சிலையை வைத்திருக்கின்றனர். மர பீடத்துடன் சிலை வெளியில் வைக்கப்பட்டிருப்பதால் மழை, வெயிலுக்கு அந்த மர பீடம் சிதிலமடையும் அபாயம் உள்ளது” என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.