ஒடிசாவின் பாலாசூர் பகுதியில் நடந்த ரயில் விபத்து உலகையே உலுக்கியிருக்கிறது. தற்போது வரை, இந்த ரயில் விபத்தால் 280 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 1,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் வழித்தடங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஒடிசா மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இந்திய விமானப்படை என பலதரப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மோடி

இந்த நிலையில், `இந்த விபத்துக்கு முழு பொறுப்பு மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுதான்’ என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சுதந்திர இந்தியாவின் மிகக் கொடூரமான ரயில் விபத்து நடந்திருக்கிறது. பிரதமர் மோடி அரசு விளம்பரம், மக்களை ஈர்க்கும் வகையிலான பிரசார வித்தைகள் மூலம் அரசின் பணி முறையை வெறுமையாக்கியிருக்கிறது.

ரயில்வேயில் கடுமையான ஆள்பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் வேலை செய்வதே விபத்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் என, ரயில்வே வாரியமே சமீபத்தில் ஒப்புக்கொண்டது. அதன் பிறகும் ரயில்வே துறையில், பெரிய அதிகாரிகளின் பணியிடங்கள் உட்பட மூன்று லட்சம் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும், இன்னும் ஏன் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை?

ஒடிசா ரயில் விபத்து

மேலும், தென் மேற்கு ரயில்வே மண்டலத்தின் முதன்மை தலைமை இயக்க மேலாளர் 8 பிப்ரவரி 2023 அன்று மைசூரில் இரண்டு ரயில்கள் விபத்து தவிர்க்கப்பட்ட ஓர் அதிர்ச்சி சம்பவத்தை மேற்கோள்காட்டி, சிக்னல் அமைப்பைச் சரிசெய்ய வலியுறுத்தி எச்சரித்திருக்கிறார். அதன் பிறகும் பிரதமர் மோடி அரசின் ரயில்வே அமைச்சகம் அதைச் சரிசெய்யாமல் அலட்சியப்படுத்தியது ஏன்?

நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323-வது அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (சி.ஆர்.எஸ்) பரிந்துரைகளை ரயில்வே வாரியம் புறக்கணித்ததாக விமர்சித்திருக்கிறது. 8 முதல் 10 சதவிகித விபத்துகளை மட்டுமே சி.ஆர்.எஸ் விசாரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், சி.ஆர்.எஸ் ஏன் பலப்படுத்தப்படவில்லை?

மல்லிகார்ஜூன கார்கே.

ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் (எல்.ஓ.பி) தண்டவாளங்கள் சோதனை செய்யப்படாமலே இருப்பதாகவும், பாதை புதுப்பித்தலில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சி.ஏ.ஜி) தரவை மேற்கோள்காட்டி குற்றம்சாட்டினார். மேலும், சமீபத்திய சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையின்படி, 2017-18 மற்றும் 2020-21-க்கிடையில், 10 ரயில் விபத்துகளில் கிட்டத்தட்ட 7 ரயில் விபத்துகள் தடம் புரண்டதன் காரணமாக நிகழ்ந்திருக்கின்றன.

2017-21-ம் ஆண்டில், கிழக்குக் கடற்கரை ரயில்வேயில் தண்டவாளங்கள் சோதனை நடத்தப்படவே இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே, இவை ஏன் கண்டுகொள்ளவே இல்லை… மேலும், சி.ஏ.ஜி-ன்படி, ராஷ்ட்ரிய ரயில் சன்ரக்ஷா கோஷ் (RRSK)-ல் ஒவ்வோர் ஆண்டும் 20,000 கோடி ரூபாயை பாதையைப் புதுப்பிக்கும் பணிகளில் செலவிடப்பட வேண்டும். ஆனால், அதில் 79 சதவிகித நிதி ஏன் குறைக்கப்பட்டது… தடம் புதுப்பிக்கும் பணிகளில் ஏன் இவ்வளவு சுணக்கம்?

வந்தே பாரத் கொடி அசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

இந்தியாவின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தர நிர்ணய அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ.) 2011-ல் உருவாக்கிய ரயில்கள் விபத்து தவிர்ப்பு முறையை மோடி அரசால் `கவச்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், 2022 மார்ச்சில் ரயில்வே அமைச்சரே அதைப் பரிசோதித்து நிரூபித்துக் காட்டினார். பிறகு ஏன் அனைத்து ரயில்களுக்குப் பாதுகாப்புக்காக வழங்காமல் 4 சதவிகித வழித்தடங்களில் மட்டும் கவச் பயன்படுத்தப்படுகிறது?

இதிலிருந்து பிரதமர் மோடி நீங்கள் ஒவ்வொரு நாளும் வெள்ளையடிக்கப்பட்ட ரயில்களுக்கு கொடியசைப்பதில் மும்முரமாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அதனால் ரயில் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை. இது போன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில், மேலிருந்து கீழ் வரை பதவிகளின் பொறுப்புக்கூறல் சரி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்” எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.