வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ராஜாகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு. இவரின் மனைவி கற்பகம். இந்தத் தம்பதிக்கு 17 வயதில் பிரகாஷ் என்ற ஒரு மகனும், 16 வயதில் விஷ்ணுபிரியா என்ற ஒரு மகளும் இருந்தனர். பிரகாஷ் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, மேற்படிப்பைத் தொடரவிருக்கிறார். விஷ்ணுபிரியா, சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள்பெற்று, ப்ளஸ் ஒன் செல்லவிருந்தார். இந்த நிலையில், தினமும் காலை வேலைக்குச் செல்லும் பிரபு, மாலை வீடு திரும்பும்போது மதுபோதையில் தள்ளாடி வந்திருக்கிறார். வீட்டில்வந்து தகராறு செய்துவிட்டு, மீண்டும் மது குடிக்க பணம்கேட்டு மனைவியிடம் சண்டைப் போடுவாராம்.

மாணவி விஷ்ணுபிரியா

இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடுவதற்குள், இன்னொரு ‘குவார்ட்டர்’ மதுபாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டுவந்து, விடிய விடிய அட்டகாசம் செய்வாராம். இதனால், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் தூங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாகிவந்தனர். ‘தந்தையின் குடிப்பழக்கத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விட்டதே…’ என்ற விரக்தியிலிருந்த விஷ்ணுபிரியா, தந்தைக்குப் பாடம் கற்பிக்க தனது உயிரையே மாய்த்துகொள்ளும் முடிவுக்குச் சென்றிருக்கிறார்.

நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தாயின் புடவையை மின்விசிறியில் சுற்றி தூக்குப் போட்டு தொங்கியிருக்கிறார். சிறிது நேரத்தில், அவரின் உயிரும் பிரிந்துவிட்டது. வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்குப் போட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு கதறி அழுதனர். பின்னர், மகளின் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், விஷ்ணுபிரியா இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

உருக்கமான கடிதம்

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இது பற்றி, குடியாத்தம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியபோது, தூக்குப் போட்ட அறைக்குள் கடிதம் ஒன்று சிக்கியது. அதை மாணவி விஷ்ணுபிரியாவே கைப்பட எழுதியிருக்கிறார். அதில், ‘‘என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. என் ஆசை, என் அப்பா குடியை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்கிறேனோ, அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்’’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். தந்தையைத் திருத்துவதற்காக மாணவி தனது உயிரையே மாய்த்துக்கொண்டிருக்கும் இந்தச் சம்பவம், குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.