ஒடிசா மாநிலம், பாலாசூர் மாவட்டத்தில் பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு தண்டவாளப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதேபோல, கொல்கத்தாவிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது. மற்றொரு தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுராவுக்குச் செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.

ஒடிசா ரயில் விபத்து

சரியாக இரவு 6:50 மணியளவில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில்மீது மோதியதில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. அதேசமயத்தில், அந்த ரயில் அருகிலிருந்த தண்டவாளத்தில் விழுந்ததால், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த இரண்டு பயணிகள் ரயிலிலும் 3,000-க்கும் மேற்பட்டடோர் பயணித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கொடூர விபத்து காரணமாக ரயிலில் பயணம்செய்த 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அதேவேளையில், 1,000-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். அதில், 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 300 பேர் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

ஒடிசா ரயில் விபத்து

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப்பணிகள் முடிவடைந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேசமயத்தில், இந்தக் கொடூர விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த 290 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தனர். ரயில் வரும் வழியிலுள்ள ரயில் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கிய நிலையில் 137 பயணிகள் சென்னைக்கு வந்தடைந்தனர். வந்தவர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று நலம் விசாரித்தார்கள்.

மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்

மொத்தமுள்ள 137 பயணிகளில் காயமடைந்த எட்டு பேரும் அடக்கம். ரயிலில் வந்தவர்களுக்கு மருத்துவத்துறை ஏற்பாடு செய்துவைத்திருந்த மருத்துவ முகாம்களில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையிருப்பின் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்துவைத்திருந்த சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற பயணியிடம் விபத்து குறித்துப் பேசினோம். “ரயில் கிளம்பி சுமார் மூணு மணிநேரம் இருக்கும், திடீர்னு ஒரு சத்தம், நாங்க எஸ்-1 பெட்டியில இருந்தோம். அந்தப் பெட்டி தடம் புரண்டு அப்படியே ஒடஞ்சது. உள்ள இருந்த எல்லாருமே பெட்டிக்குள்ளேயே உருண்டோம். என் கால் மாட்டிக்கிச்சு. பெட்டிக்குள்ள இருந்த நாலஞ்சு பேர் உடல் நசுங்கி இறந்ததைக் கண் முன்னாடி பார்த்தேன். அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நெனச்சேன். என்ன நடந்தது… என்ன ஆச்சு ஒண்ணுமே தெரியலை.

விபத்தில் சிக்கிய பயணிகள்

எதையும் யோசிக்கக்கூட முடியல. ஒருவழியா மாட்டியிருந்த காலை கஷ்டப்பட்டு வெளியே எடுத்து ஒடஞ்சிருந்த ஜன்னல் வழியே மேலே வந்தோம். அங்க நான் பார்த்த சம்பவம் என்னை அப்படியே உறைய வச்சிடுச்சி. எங்க பார்த்தாலும் அழுகுரல், பல மொழிகளில் மக்களோட கதறல்ன்னு இந்த நிமிஷம் வரை அந்த படபடப்பு எனக்குள்ள அடங்கவே இல்லை” என்று நம்மிடம் பேசியவர். அங்கிருந்த மருத்துவ முகாமில் பரிசோதனை செய்துவிட்டு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் கிளம்பிச் சென்றார்.

இந்த ரயிலில் பயணித்த ஆர்.பி.எப் வீரர் ஒருவரிடம் பேசினோம். “நான் வந்த பெட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அனால், ஆட்டம் மட்டும் இருந்தது. பெட்டியிலிருந்தவங்களை மெதுவா கீழ இறக்கிவிட்டு வெளியே வந்து பார்த்தப்போ, அங்கங்க ரத்தமும், சதையுமா மக்கள் செத்துக் கெடந்தாங்க. பெங்காலி பையன் ஒருத்தன் வயிற்றுமேல சக்கரம் விழுந்து கிடந்துச்சு. அப்போ அந்தப் பையன், சக்கரத்த அவனே தூக்க முயற்சி செஞ்சுக்கிட்டுருந்தான். நான் போன பெட்டிக்கு எதுவும் ஆகல. இருந்தாலும் என்னைச் சுத்தி என்ன நடக்குத்துன்னு புரியவே ஒரு அரைமணிநேரம் ஆகிடுச்சு.

விபத்தில் சிக்கிய பயணிகள்

அப்போ, முன்னாடி போன பெட்டியில் இருந்தவங்க நிலைமையை யோசிச்சிப் பாருங்க. விபத்து நடந்ததும், அருகிலிருந்த மக்கள் உடனடியாக வந்துட்டாங்க. நான் என்னோட எஸ்.எம்-க்குத் தகவல் சொல்லிட்டேன். அருகிலிருந்த ரயில் நிலையத்திலிருந்து அதிகாரிகளும் ஒரு 30 நிமிஷத்துக்குள்ள வந்துட்டாங்க. அந்தப் பகுதி மக்களுக்கு எல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அந்த அரசும் உடனடியா எல்லாமே செஞ்சு கொடுத்தது. 15 வருசமா நான் ஏறாத ரயில் இல்லை. போகாத ரூட் இல்லை. ரயிலிலேயே ஊர் ஊரா சுத்துன எனக்கு இப்போ ரயிலில் ஏறவே ரொம்பவும் பயமா இருக்கு” என்று சொல்லும்போதே அவருக்குள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.