ஒடிசாவின் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரண்டு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் நேற்றிரவு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுவரை வெளியான தகவலின்படி, 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் தவறான சிக்னல் காரணமாக விபத்து நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து

மேலும் இந்த விபத்து குறித்து பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்களை விபத்திலிருந்து தடுக்கும் `கவச்’ என்ற தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட இல்லை என்று தெரிவித்தார். ஒருவேளை கவச் இருந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என்று பேச்சுக்கள் எழும் வேளையில், கவச் என்பது என்ன, அதன் செயல்பாடுகள் என்னவென்பதை நாம் காணலாம்.

`கவச்’ என்றால் என்ன?

கவச் என்பதன் பொருளே கவசம் என்பதாகும். இந்தியாவில் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP) கவச். 2022-ம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது. அதன்படி, ரிசர்ச் டிசைன்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷன் (RDSO) மூலம் மூன்று இந்திய நிறுவனங்கள் உருவாக்கிய இந்த கவச் எனும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை ரயில்வே அமைச்சகம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

கவாச்

கவச் அம்சங்களும், அதன் செயல்பாடுகளும்!

கவாச், லோகோமோட்டிவ் பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டு ரயில்கள் ஒரு பாதையில் வரும்போது சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் (SPAT) எனும் சமிக்ஞையை ஏற்படுத்தி ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கும். இதன் மூலம் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ரயிலை விபத்திலிருந்து தவிர்க்க இந்த கவச் உதவுகிறது. இதைவிடவும் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒருவேளை எச்சரிக்கை விடப்பட்டும் கவனக்குறைவாக ரயில் ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கத் தவறும் பட்சத்தில், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தைக் குறைத்து விபத்து ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும். பனி மூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் எதிரே ரயில் வந்தால் கூட முன்கூட்டியே இது எச்சரிக்கும். அதுமட்டுமல்லாமல், அவசரகால சூழ்நிலைகளில் ரயிலைக் கட்டுப்படுத்த SOS அம்சமும் இதில் இருக்கிறது.

கவச் சோதனை!

முதல்முதலாக தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனை வெற்றிபெற்றதையடுத்து, இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் கவச் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த மூன்று நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் முதற்கட்டமாக கவச் தொழில்நுட்பத்தை உருவாக்க ரூ.16.88 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 2024, மார்ச்சுக்குள் புது டெல்லி-ஹவுரா மற்றும் புது டெல்லி-மும்பை இடையே கவச் தொழில்நுட்பம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. இதனுடைய செயல்பாட்டின் அடிப்படையிலேயே அடுத்தடுத்து கவச் தொழில்நுட்பத்தை நீட்டிக்கவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக ஒடிசாவில் இத்தகைய ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ஒடிசா ரயில் விபத்து

கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்து தவிர்க்கப்பட்டிருக்குமா?!

விபத்து நடந்த பகுதியில் கவச் தொழில்நுட்பம் இல்லையென்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய பிறகு, கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், உண்மையில் கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என்று கூறுவது ஒரு யூகம் மட்டுமே என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில், விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நேருக்கு நேர் ரயில்கள் வரும் போது கவச் உதவும். ஆனால் இந்த விபத்தில் ஒரே ட்ராக்கில் தான் ரயில்கள் வந்ததாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. தடம் புரண்ட ரயில் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருந்தால் கவச் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு இதில் பயன்பட்டிருக்கும் என்பது கேள்வியே என்கிறார்கள் வல்லுநர்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.