Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 வயதாகிறது. இன்னமும் வாரத்தில் சில நாள்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் தொடர்கிறது. இதனால் வெளியூர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ போகவே தயக்கமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்…. தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்

குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர்

பிறந்த குழந்தைகள் எல்லோரும் குறிப்பிட்ட வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்பானது. குழந்தைக்கு இரண்டு வயதான பிறகு அந்தப் பழக்கம் தானாக நின்றுவிடும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்துக்கு மருத்துவ மொழியில் ‘நாக்டர்னல் அன்யூரெசிஸ்’ ( Nocturnal enuresis) என்று பெயர்.

வாரத்துக்கு இரண்டு, மூன்று முறைக்கு மேல் இப்படி படுக்கையில் சிறுநீர் கழித்தாலோ, மூன்று மாதங்களுக்கு மேல் இந்தப் பிரச்னை தொடர்ந்தாலோ, குழந்தைக்கு 7 வயதான பிறகும் இந்தப் பிரச்னை தொடர்ந்தாலோ மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை அதிகமிருக்கிறது. அதிகபட்சமாக 7 வயதுக்குள் இந்தப் பிரச்னை தானாகச் சரியாகிவிடும். சிறுநீர்ப்பை நிரம்பி, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்ததும் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படும். உடனே குழந்தைகள் சிறுநீர் கழித்துவிடுவார்கள். அரிதாக சில குழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் இதை உணராமல் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு.

குழந்தையின் இந்தப் பிரச்னையைக் கிண்டல் செய்யத் தேவையில்லை. படுக்கையில் சிறுநீர் கழிப்பது குழந்தையின் தவறு அல்ல. சிறுநீர்ப்பை நிரம்பியதும் நரம்புகள் மூலம் மூளைக்கு தகவல் அனுப்பும் செயல் முதிர்ச்சியடையாமல் இருப்பதால்தான் இப்பிரச்னை வருகிறது.

படுக்கையில் சிறுநீர்

இந்தப் பிரச்னை உள்ள குழந்தையின் குடும்பத்தாருக்கும் அதே பாதிப்பு இருக்கலாம் அல்லது சிறுநீர்ப்பையின் அளவு சிறியதாக இருக்கலாம்.

குழந்தைக்கு இரண்டு வயதான பிறகு அதன் மூளையில் இருந்து வாசோப்ரெசின் என்ற ஹார்மோன் சுரக்கும். அந்த ஹார்மோன் சரியாகச் சுரக்கும்பட்சத்தில் பகல் வேளையில் சிறுநீர் கழிப்பது அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்கும். சில இரவுகளில் சிறுநீரே கழிக்கத் தோன்றாது. படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கு இந்த வாசோப்ரெசின் ஹார்மோன் சுரப்பில்கூட பிரச்னை இருக்கலாம். அது பரம்பரையாகத் தொடரும் பாதிப்பாகவும் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு முதுகெலும்பு சரியாக மூடாமலிருப்பதும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம்.

பெரியவர்கள் திடீரென இப்படி படுக்கையில் சிறுநீர் கழித்தால் அவர்களுக்கு நரம்பியல் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சிறுநீர்த் தொற்று, சிறுநீரகக் கல் பாதிப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம். டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு பிரச்னைகள் இல்லை என உறுதியானால், எளிய விஷயங்கள் சிலவற்றைப் பின்பற்றலாம். மாலையில் 6 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது. தூங்கச் செல்வதற்கு முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஸ்ட்ரெஸ் இருந்தாலும் இந்தப் பிரச்னை வரலாம். திடீர் இடமாற்றம்கூட காரணமாகலாம். பெரியவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும்பட்சத்தில் அடல்ட் டயாப்பர் பயன்படுத்தலாம்.

டயாப்பர்

குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட சிகிச்சைகள் உள்ளன. இதை வெளியே சொல்லத் தயங்கிக் கொண்டு மறைக்கத் தேவையில்லை. குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருந்தால், இரவில் குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் வைத்து அப்போது எழுப்பி சிறுநீர் கழிக்க வைக்கலாம். தூங்கச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிப்பதைப் பழக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.